அப்போ திருக்குறள்… ?

மனு ஸ்ம்ருதி போல நூற்றுக்கணக்கான ஸ்ம்ருதிகள் புழக்கத்தில் இருந்தன. அவை, தேசம் முழுமைக்குமான பொது சட்டமாக இருந்ததா என்பதை எல்லாம், நமக்கு கிடைத்த குறைவான தரவுகளை வைத்துக் கொண்டு முடிவு செய்ய முடியாது.

வர்ணத்தை பற்றிய குறிப்புகள் இருக்கும் எந்த ஸ்ம்ருதி வாக்கியத்திலும் ஜாதிகளைப் பற்றிய அடையாளம் இல்லை. இந்த ஜாதி, இந்த வர்ணம் என்பதை எல்லாம், அந்த வாக்கியங்களை வைத்தே நிறைவு செய்துவிடவும் முடியாது. இதற்கும் மேலே, நமக்கு கிடைத்த மூலநூல்களின் மொழிபெயர்ப்பிலேயே நிறைய சிக்கல்கள் உள்ளன.

ஆங்கிலேய ஆட்சியில், பிரித்தாளும் சூழ்ச்சியில் மிக முக்கியமான திரிபுகளும், இல்லாத ஒன்றை அடிக்கோடிட்டு பெரிதுபடுத்துவதும் நடந்தது. அதுதான் அவர்களுடைய மதமாற்றத்திற்குத் தேவையான கருப்பொருளையே உருவாக்கித்தந்தது.

இப்படிப்பட்ட சிக்கல்கள் இருக்கும் போது, ஆயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்ட மூலநூல்களை, இன்றைய சமூக கண்ணோட்டத்தோடு புரிந்துகொண்டு, நடைமுறையில் இல்லாத ஒன்றை மீட்க நினைப்பது உள்நோக்கம் கொண்டதாகும்.

உதாரணமாக, கணவனே கண் கண்ட தெய்வம் என்றும், அப்படி வாழ்பவள் பெய்யச் சொன்னால்தான் மழை பெய்யும்; இதுவே பத்தினிக்கான அளவுகோள் என திருக்குறள் சொல்கிறது.

ஆகவே, இது பெண்ணடிமைத்தனத்தின் உச்சம்; ஆணாதிக்க சமூகத்தின் நவீன கொடூரம்; திருக்குறளை தூக்கிப்பிடிப்பவர்கள் இந்த ஆணாதிக்க வெறியை நிலைநிறுத்தும் இழிமகன்கள் என்று ஒரு நபர் வாதிட்டால் அதற்கு யாராவது முட்டுக்கொடுப்பார்களா?

இதுதான் இப்போது மனுஸ்ம்ருதி விவகாரத்திலும் நடக்கிறது.

காலத்தைத் தாண்டி சிந்திக்கும் மனிதர்களோ, சமூக சட்டங்களோ எங்கும் இல்லை என்பதே உண்மை.

– சுந்தரராஜ சோழன் –

Share: