அரசியல் ராக்கெட்ரியின் உண்மை கதை! உளவு-காங்கிரஸ்-நம்பி நாராயணன்!

அரசியல் ராக்கெட்ரியின் உண்மை கதை!

உளவு-காங்கிரஸ்-நம்பி நாராயணன்!

– வினோத் கிருஷ்ணமூர்த்தி –

இன்று அதிமுகவில் நடக்கும் உட்கட்சி சண்டை, ஒரு காலத்தில் நெடுஞ்செழியனுக்கும் கருணாநிதிக்கும் திமுகவுக்குள் நடந்துள்ளது. ஜானகிக்கும் ஜெயலலிதாவுக்கும் நடந்துள்ளது. இந்த சண்டைகளால் அந்தந்த கட்சிகளுக்குள் சிறிய சேதாரம் ஏற்பட்டதே தவிர, பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை.

ஆனால் ஒரு உட்கட்சி சண்டையால், ஒரு மாபெரும் மக்கள் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவர், சொந்த மண்ணிலேயே வீழ்த்தப்பட்டதும், பிறகு இந்த சதி சர்வதேச அளவில் நீண்டு, இந்தியாவுக்கே மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது என்றும் சொன்னால் நம்ப முடிகிறதா? இந்த சம்பவம் நடந்தது, நமக்கு பக்கத்தில் சில 100 கிலோ மீட்டர்களிலேயே இருக்கும் கேரளாவில், ஒரு மாபெரும் மக்கள் தலைவன் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு, அதனால் தேசமே பின்னடைவை சந்தித்த கதை இது….

1967ஆம் ஆண்டு தமிழகத்தில் அண்ணாதுரை தலைமையில் திமுக ஆட்சி அமைத்தது. இதே காலகட்டத்தில் கேரளாவிலும் காங்கிரஸ் அல்லாத முதலமைச்சராக பதவியேற்றிருந்தார் EMS நம்பூதிரிபாட். 1925ஆம் ஆண்டு கான்பூரில் தொடங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 47 வருடங்களுக்கு பிறகு கேரளாவில் ஆட்சி அமைத்தது. உலகத்திலேயே ஜனநாயக முறையில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் ஆட்சியும் இது தான்..

அன்று தொடங்கி கேரளாவில் தனது முழு ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கிய கம்யூனிஸ்டுகள், அசுர பலத்துடன், எந்தக் கட்சியும் நெருங்க முடியாத விதத்தில் கட்டமைப்பை உருவாக்கினர். அசைக்க முடியாத செல்வாக்குடன் மலையாளிகளின் மனதில் வாழும் லெனினாக மாறி அமர்ந்திருந்தார் நம்பூதிரிபாட்.. சித்தாந்த ரீதியாக ஆழம் வரை ஊறி இருந்த கம்யூனிஸ்ட்களை அதிகாரத்தில் இருந்து அகற்றுவது முடியாத காரியம் என்ற நிலைக்கு, அன்றைய நேரு தலைமை வந்திருந்தது.

கிட்டத்தட்ட இதே எண்ணத்தில் தான் கம்யூனிஸ்ட் தலைவர்களும் இருந்தனர். ஆனால் எந்த தொழிற்சங்கங்களில் மூலம் கம்யூனிஸ்ட்கள் வலுவானார்களோ, அதே தொழிற்சங்கத்தில் வளர்ந்த ஒருவர், நம்மை ஆட்டம்காணச் செய்யப்போகிறார் என்பதை காம்ரேட்கள் உணரவில்லை. எங்கு தோற்றாலும், கேரளாவில் தோற்க மாட்டோம் என, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியே வயநாடு நோக்கி வரும் அளவுக்கு கட்சியை வலுப்படுத்தப்போகிறவர் வந்துகொண்டிருக்கிறார் என்பது காங்கிரஸ்காரர்களுக்கு தெரியவில்லை.

1918ஆம் ஆண்டு ஜூலை மாதம் கேரளாவின் கண்ணூர் மாவட்டம், சீரக்கலில் தேகடது ரவுனி மாறார் என்பவருக்கும் கண்னோத் கல்யாணி அம்மாளுக்கும் பிறந்தார், கருணாகரன். வடகரயில் பள்ளிப்படிப்பு, பின் திரிசூரில் கல்லூரி படிப்பை முடித்த கருணாகரன், தீயாக எரிந்துகொண்டிருந்த சுதந்திர போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். கம்யூனிஸ்ட்களின் கோட்டை என அறியப்பட்ட திரிசூரில், பின்னாளில் தன்னால் ஒரு மாற்றம் நிகழப்போகிறது என்பதை மாணவர் கருணாகாரன் அறிந்திருக்கவில்லை.

1937ஆம் ஆண்டு கொச்சியில் காங்கிரஸ் தலைவர்களுடன் ஏற்பட்ட நெருக்கம், அந்த கட்சியின் தொழிற்சங்க பிரிவில் இணைந்து இயங்கக் காரணமாக அமைந்தது. கம்யூனிஸ்ட்களின் தொழிற்சங்க அரசியலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க அணியை வீரியமாக வளர்த்தெடுத்து, போராட்டம் , மாநில அரசுக்கு எதிரான பிரச்சாரம் என, கேரளாவுக்கே உரிய அரசியலை கருணாகரன் தீவிரப்படுத்தினார்.

தனது அரசியல் குருவாக கருணாகரன் தேர்ந்தெடுத்தது, பன்னம்பல்லி கோவிந்த மேனன். இவர் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்தார். தனது அரசியல் குருவின் மூலம் டெல்லி தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட கருணாகரன், உள்ளூரில் தீவிரமாக இயங்கினாலும் தேசிய அளவில் தனது பார்வையை விரிவுபடுத்திக்கொண்டார்.

அந்தப் பார்வை, பின்னாளில் தேசத்துக்கு ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக் காரணமாக அமைந்தது.
ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட பிறகு, காங்கிரஸ் கட்சியில் ஒரு சிக்கல் ஏற்பட்டபோது, அரசியலைவிட்டே ஒதுங்கி இருந்த நரசிம்ம ராவை, 1991ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி, நாட்டின் பிரதமர் பதவிக்கு கொண்டு வர காரணமானவர்களில் தலைமைச் சிற்பி கருணாகரன்.

1957 தேர்தலில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 1000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற கருணாகரன், பின்னர் எந்தத் தேர்தலிலும் தோற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி அசுர பலத்தில் இருந்த திரிசூரில், எங்கு திரும்பினாலும் கதிர் அரிவாள் சீற..நிச்சயமாக கருணாகரன் தோற்பார் என்றே நினைத்தனர். ஆனால் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளரை 3000 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

1967 தொடங்கி 1991 வரை திரிசூரின் மலா தொகுதியில் இருந்து ஏழு முறை தோர்ந்தெடுக்கப்பட்டார். கம்யூனிஸ்ட்களின் கோட்டையில் ஓட்டையை போடும்போதே காங்கிரஸ் தேசிய தலைமை, கருணாகரனை கவனிக்கத் தொடங்கிவிட்டது.

1977ஆம் ஆண்டு மார்ச் மாதம், நாடே நெருக்கடி நிலையில் இருந்து வெளியேறி, ஜனநாயகம் மூச்சுவிட தொடங்கிய காலகட்டம். கேரளாவில் இந்திராவுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டு, தேர்தல் களத்தை உஷ்ணப்படுத்தி இருந்தனர் கம்யூனிஸ்ட்கள்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என கருதிக்கொண்டிருந்த சூழ்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி 100 சீட்களை கடந்து அமோக வெற்றி பெற்றது. இந்திராவுக்கு எதிரான அலையால் காங்கிரஸ் கட்சி, பல மாநிலங்களில் தோற்ற நேரத்திலும், எதிர்ப்பு அலையை சமாளித்து, காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர வைத்து, தான் ஒரு அசைக்க முடியாத தலைவர் என்பதை நிரூபித்தார் கருணாகரன்.

காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தினாலும், முதலமைச்சர் பதவியில் இருந்த கருணாகரனுக்கு முக்கியமான ஆபத்து, அதே நெருக்கடி நிலை மூலமே வந்தது. இதனால், 32 நாட்களில் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் நிலை, கருணாகரனுக்கு ஏற்பட்டது. 1976ஆம் ஆண்டு கோழிக்கோடு மாநில பொறியியல் கல்லூரி மாணவன் ராஜன், உள்ளூர் போலீஸ் கஸ்டடியில் சித்தரவதைக்கு உள்ளாகி உயிரிழந்தது சர்ச்சையானது. இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று கருணாகரன், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அன்றெல்லாம் லாக் அப் மரணத்துக்கு, முதலமைச்சரே ராஜினாமா செய்த நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.

அதன் பிறகு ஐக்கிய முன்னணி சார்பில் பல தலைவர்கள் முதலமைச்சர்களாக இருந்தனர். 1982ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வந்தது. கருணாகரன் தலைமையிலான ஐக்கிய முன்னணி 21 சீட்கள் கூடுதலாக பெற்று 77 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது. மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்ற கருணாகரன், முழுமையாக ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்தார். கேரளாவின் முதல் முதலமைச்சர் நம்பூதிரி பாட் கூட செய்யாத சாதனையை, ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்த முதல் முதலமைச்சராக மாறினார் கருணாகரன்.

அரசியலில் சாணக்யம் மற்றும் நிர்வாகத் திறமை நிறைந்த கதர் ஆடை அரசியல்வாதி கருணாகரனை கேரள மக்கள், தங்கள் நாயகனாகவே ஏற்றுக்கொண்டிருந்தனர். இருப்பினும் கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் கொஞ்சம் கொஞ்சமாக துளிர்விடத் தொடங்கிய உட்கட்சி பூசல் காரணமாக, 1987ஆம் ஆண்டு இடசாரி முன்னணியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது காங்கிரஸ். இ.கே.நாயனார், அசைக்க முடியாத முதலமைச்சராக 4 ஆண்டுகளில் மாறி இருந்தார். இருப்பினும் கட்சி கட்டமைப்பில் விடாத வேலை செய்துவந்த கருணாகரன் தலைமையிலான காங்கிரஸ் கட்சி 1991இல் மீண்டும் ஆட்சியை பிடித்தது.

மீண்டும் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யப்போகிறோம் என கனவில் இருந்த கருணாகரன், உட்கட்சியில் வெடிக்கப்போகும் பூசல், தன் ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையையும் புரட்டிப்போடப்போகிறது என்பதை நினைத்து பார்த்திருக்க மாட்டார். முதல் முறை, ராஜன் லாக் அப் மரணத்தால் முதலமைச்சர் பதவியை கருணாகரனை இழக்கச் செய்தன எதிர்க்கட்சிகள். ஆனால் புதிய சதிவலையை பின்னப்போவதே, சொந்தக் கட்சியினர் தான் என்பது, கருணாகரனுக்கு பின்னரே தெரியவந்தது.

அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கு காரணமாக, கருணாகரன் இருக்கும் வரை காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் அவர் தான் என்ற நிலை உருவாகி இருந்தது. 1994ஆம் ஆண்டு, இஸ்ரோ உளவாளி வழக்கு என்ற புதிய சர்ச்சை வெடித்தது. இரு மாலத்தீவு பெண்கள் மூலம், இந்தியாவின் ராணுவ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு விற்க முயற்சி நடந்ததாக புகார் எழுந்தது. இதற்கு காரணமாக இருந்தவர் என்ற சந்தேகத்தில், 1994ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி, நம்பி நாராயணன் என்ற தமிழகத்தை சேர்ந்த அற்புதமான இஸ்ரோ விஞ்ஞானி கைது செய்யப்பட்டார்.

‘இந்த உளவுக்கு கேரள போலீஸ் துணை இருந்துள்ளது; தேசத்துக்கே இதன்மூலம் அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளது’ என நாடு முழுவதும் மிகப்பெரிய விவாதம் எழுந்தது. ஆனால் அவர்கள் விற்க முயன்ற ராணுவ ரகசியம் என்ன? இந்த ரகசியத்தை விற்பதன் மூலம் கேரள போலீஸுக்கு என்ன லாபம்? தேச பாதுகாப்பு தொடர்புடைய வழக்கு எப்படி போலீஸ் விசாரணை வலையத்திற்குள் வந்தது? என அடுக்கடுக்கான கேள்விகளுக்கு, எந்த பதிலும் இல்லை.

கேரள போலீஸ் மீதே குற்றம்சாட்டப்பட்டதால், அந்த வழக்கின் முழு விளைவையும் நம்பி நாராயணனுக்கு அடுத்தபடியாக எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார் கருணாகரன். சொந்த கட்சியினரே கருணாகரனுக்கு எதிராக, கட்சி தலைமைக்கு மொட்டை கடிதாசிகளை எழுதினர். இதன் விளைவு? யாரை பிரதமர் பதவியில் அமர்த்த காரணமாக இருந்தாரோ, அந்த நரசிம்ம ராவே, கருணாகரனை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய கேட்டுக்கொண்டார். ஒரு போலீஸ் அதிகாரிக்குத் துணையாக இருந்ததாக ஒரு முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ததும், அதற்கு, அவர் சார்ந்த சொந்த கட்சியினரே அழுத்தம் கொடுத்ததும் இந்திய அரசியல் வரலாற்றில் நிகழ்ந்தது.

கிட்டத்தட்ட கருணாகரன் அரசியலின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டது. ஆனால் 24 வருடங்களுக்குப் பிறகு, இந்த வழக்கே பொய்யாக புனையப்பட்டது என தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். சர்வ வல்லமையுடன் முதலமைச்சர் பதவியில் இருந்த ஒருவரை ஓரம்கட்டி, 3 முறை ராஜ்யசபா பதவி கொடுத்த அந்த சொந்த கட்சியே முடிவுரை எழுதியது.

இந்திரா மற்றும் ராஜீவ் காந்தியுடன் கருணாகரனுக்கு இருந்த நெருக்கும், பின்னர் காங்கிரஸ் மேலிடத்துக்கு வந்த தலைவர்களிடம் இல்லாமல்போனது. அதுவும் நரசிம்ம ராவை பிரதமராக கொண்டுவர கருணாகரன் காரணமானார் என்பதும் பின்னாளில், தலைமைக்கு வந்த தலைவர்களால் புறக்கணிக்கப்பட காரணமாக அமைந்தது. கருணாகரனின் ஆதிக்கம் கேரள காங்கிரசில் இருந்து விலகிய பிறகே, ஏ.கே.அந்தோனி மற்றும் உம்மன் சாண்டி ஆகியோர் வலுப்பெற்றனர்.

இந்த நாட்டுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி என்பது, 1997ஆம் ஆண்டே இந்தியா பயன்படுத்தியிருக்க வேண்டிய கிரையோஜினிக் சிஸ்டம், 14 வருடங்கள் தாமதமாக கிடைத்தது. இதனால் விண்வெளி துறையில் இந்தியாவின் சாதனைகள் தள்ளிப்போனது மட்டுமல்லாமல், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வருவாயை இந்தியா இழந்தது. இதனால் சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் நாசா, ரஷ்யாவின் Roskosmos உள்ளிட்ட நாட்டு விண்வெளி அமைப்புகள், இஸ்ரோவை விட முன்னிலையில் இருக்கின்றன. அப்துல் கலாமுக்கு இணையாக போற்றப்பட வேண்டிய நம்பி நாராயணன் என்ற தமிழரின் எதிர்காலம் நாசாமாக்கப்பட்டது. இந்தியாவின் வளர்ச்சி ஓட்டமே தடைபட்டது.

காங்கிரஸ் கட்சியை முதன்முதலில் ஆட்சியில் அமர்த்திய ஆளுமையை, அசுர பலத்தில் இருந்த கம்யூனிஸ்ட்களை திணறடித்து தண்ணீர் குடிக்க வைத்த தலைவனை, இடதுசாரிகளின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காணவைத்த தளபதியை, நரசிம்ம ராவை பிரதமராக்கிய கிங் மேக்கரை, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 20ல் 19 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி ஜெயிக்க விதைபோட்ட ராஜதந்திரிக்கு, எந்த ஒரு சிறப்பும் செய்யப்படாமல், அப்படியே காணாமல்போனது வரலாறு, இல்லை.. இல்லை.. காங்கிரஸின் வரலாறு!

Share: