இந்திய அரசியலில் வினோதங்கள்

இந்திய அரசியலில் வினோதங்கள்

•••••••

பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன நாள் இன்று, கீர்த்தி பெற்ற நீதிபதி முகமது அலி ஹரீம் சாக்லா Justice M.C.Chagla துவங்கி வைத்தார் என்றும், சாவர்க்கரின் அஞ்சல் தலையை, அன்றைய பிரதமர் இந்திராகாந்தி வெளியிட்டார் என்ற வினோதங்களையும் கவனிக்க வேண்டும்.

இது எப்படி…?

கடந்த காலங்களில், நான் வாசித்த அரசியலில் இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது. எனக்கும் புரியலை, இது எப்படி என்று, இன்றைக்கு உள்ளவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி தொடங்கிய நாள் என செய்தியை படித்தேன்; ஜனசங்காக இருந்து, அவசரநிலை காலத்திற்குப் பின், மொரார்ஜி தலைமையில் ஜனதா கட்சி என்று அமைந்து, வாஜ்பாயும், அத்வானியும் மத்திய அமைச்சரவையில் பங்கு பெற்றனர். மொரார்ஜி அரசு 1979இல் கவிழ்ந்தவுடன் திரும்பவும் ஜனசங்கை சார்ந்தவர்கள் 1980இல் பாரதிய ஜனதா கட்சி என்று மும்பையில் ஆரம்பித்தார்கள். வாஜ்பாய் தலைவர்.

அப்போது, வாஜ்பாய், அத்வானி, விஜயராஜே சிந்தியா போன்ற பல கடந்தகால தலைவர்கள் இருந்தார்கள். இதில் என்ன ஒரு முக்கிய விடயம் என்றால், முஸ்லிம் லீக் கட்சியில் இருந்த, இந்திய நாட்டின் விடுதலை காலத்தில் பணியாற்றிய சட்ட அறிஞர், வெளிநாட்டு தூதுவர், மத்திய அமைச்சர், மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்ற பொறுப்பில் இருந்த இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர் தான் பாரதிய ஜனதா கட்சியை இதே நாளில் 1980ல் துவக்கி வைத்தார் என்றால் எத்தனை பேருக்கு தெரியும்?

Mohammadali Carim Chagla was an Indian jurist, diplomat, and Cabinet Minister who served as Chief Justice of the Bombay High Court from 1947 to 1958. BJP’s Inaugural Conference In Bombay, Justice M.C.Chagla was the chief Guest 1980. அந்தப் படம் தான் இந்த கருப்பு வெள்ளைப் படம்.

இன்னொரு விடயம் என்னவென்றால் சாவர்க்கருடைய அஞ்சல் தலையை வெளியிட்டது யார் என்றால், அன்றைய பிரதமர் இந்திராகாந்தி.

எப்படி இந்த இரண்டு விடயங்களும் இன்றைக்குள்ள அரசியல் சூழலில் சற்று முரணாகப்பட்டது. அன்றைக்கு அரசியலில் ஒரு பெருந்தன்மையான மனப்போக்கு இருந்தது என்பது தான் காரணமா, எப்படி முஸ்லிம் சமுதாயத் தலைவர் பாரதிய ஜனதா கட்சியை தொடங்கி வைத்தார்? அதேபோல காங்கிரசுக்கு எதிராக இருந்த சாவர்க்கருடைய அஞ்சல் தலையை அன்றைய பிரதமர் இந்திராகாந்தி வெளியிட்டு, அவரை பாராட்டி பேசியது எல்லாம் உண்டு என்பதை இந்திய வரலாற்றின் பெருமை எவ்வளவு, எத்தனையான வினோதமான காட்சிகளை கடந்து வந்துள்ளோம் என்று மனதில் பட்டது.

( பழைய செய்திகள்-பண்டிட் நேருவின் முதல் அமைச்சரவையில், மகாத்மா காந்தியின் பரிந்துரையின் பேரில், இடம்பெற்றவர் சியாமபிரசாத் முகர்ஜி. நேரு அரசின் செயல்பாடுகளை கண்டித்து, அமைச்சர் பதவியிலிருந்து விலகிய அவர், ‘ஜன சங்கம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்க, கோல்வால்கர் ஊக்கமளித்தார். முகர்ஜிக்கு துணையாக, ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியர் தீன்தயாள் உபாத்யாயா இருந்தார் . ஆர்.எஸ்.எஸில் இருந்த வாஜ்பாய், அத்வானி என பலர் ஜனசங்கத்துக்கு அனுப்பப்பட்டனர்).

– கே.எஸ். இராதாகிருஷ்ணன் –

Share: