ஒவ்வொரு ஹிந்துவும் இந்த கிருஷ்ண பண்டிட்தான்.. | Kashmir Files | விருந்தினர் பக்கம் | Chanakyaa Article

இந்து மரபின் ஞானமும், குருதி மையினால் எழுதப்பட்ட நமது வரலாறும் இன்று பலருக்கு தெரிவதில்லை. அதை அறிந்தவர்களையும், நவீன களம் மென்று தின்றுவிடுகிறது..

ஒரு ஹிந்துவின் முக்தியைத் தேடும் மனநிலைக்கும், இன்றைய உலகின் பொருளியல் – அதிகாரம் – சுயநலம் ஆகிய தளங்களுக்கும் இடையே பெரும் போரொன்று நடக்கிறது. இதில் ஒரு ஹிந்து அலைக்கழிப்பட்டு இல்லாமலாக்கப்படுகிறான்.

இன்னும் சொல்லப் போனால், இங்கே உலவும் கருத்தியல் மற்றும் அரசியல் – கலை என எதுவாக இருந்தாலும் சரி, ஒரு ஹிந்துவை இல்லாமலாக்குவது, அவனுடைய வேரினை துண்டிப்பது இவைதான் அடிப்படை நோக்கமாக உள்ளது.

தன்னுடைய அத்தனை சுயாபிமானங்களையும், பழக்கவழக்கங்களையும் கைவிட்டுவிட்டோ அல்லது அவற்றிற்கு எதிராக சூளுரைத்தோ வருகிற ஹிந்துவே நல்லவனாக முன்னிறுத்தப்படுகிறான்.

நான் யார்? என்ற கேள்வி ஆன்மீகத்தில் உயிரின் இருப்பு பற்றிய பெருங்கேள்வி என்பார்கள். ஆனால், ஒரு ஹிந்து இங்கே ஒவ்வொரு முடுக்கிலும் இந்த கேள்வியை சந்தித்து, பித்துபிடித்து, அவனுடைய ஆத்மாவே நைந்து போய்விடுகிறது..

இந்தியா ஒரு நாடு இல்லை; நீ இந்து இல்லை; நீ அவனில்லை, இவனில்லை என்று, தன் அடையாளமே நீரில் கரையும் மை போலாவதை எல்லோருமே வேடிக்கை பார்க்கிறார்கள். இந்த எல்லா சிக்கலுக்கு பின்னாலும் அரசியல், கலை இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

Kashmir files படத்தில் வருகிற கிருஷ்ண பண்டிட் போலதான் ஹிந்து சமூகம் உள்ளது. நாம் கடந்து வந்த நெருப்பாற்றினை பற்றியும், அது தேக்கி வைத்திருக்கும் சோகத்தை பற்றியும் எள்முனையளவும் தெரியவில்லை.

நம் சமூகத்தை முசுடு போல மாற்றிய வீழ்ச்சியை குறித்தும், நமது ஆத்மாவின் மேல் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் பேச வேண்டியவர்கள், அதை திரித்தும், மறைத்தும் பேசினார்கள் /பேசுகிறார்கள். அதனுடைய விளைவாகவே கிருஷ்ண பண்டிட்டுகள் உருவாகிவிட்டார்கள். தானே பலிபீடத்தில் கழுத்தை வைக்கும் ஆடாக மாறியிருக்கிறது இந்த பாரத சமூகம்.

அந்த கிருஷ்ண பண்டிட்டுகள் விழித்துக் கொண்டால் என்னவாகும் என்பதைத்தான் இந்தப் படத்தின் இறுதிக்காட்சி காட்டுகிறது. அந்த உரை மிக முக்கியமானது.

 

 

கேரளத்தின் காலடியில் இருந்து, நடந்தே காஷ்மீரத்திற்கு திக்விஜயம் செய்த சங்கரரையும், சைவ அறிஞர் வசுகுப்தரையும் நினைவுகூறுகிறான் கிருஷ்ண பண்டிட்.. அப்போதே மறைபொருளாக கேரளத்தில் இருந்து தற்போது காஷ்மீரத்தை அடைந்திருக்கும் ராதிகா மேனனின் கருத்தியலையும் ஒப்பிடுகிறான்..

காஷ்மீரத்தின் பொற்காலம் ஒன்று இருந்தது. அது இமயத்தின் அரவணைப்பில் காஷ்யபபுரமாக, ஹிந்து தர்மத்தின் ஆதாரபீடமாக இருந்தது. அங்கே ஒரு காலத்தில் லலிதாத்தியன் ஆண்டான்; சநாதன தர்மத்தின் தத்துவ விவாதங்களை உருவாக்கிய பேரரறிஞர்கள் வந்தடைந்தார்கள்.

ஆனால் இன்று காஷ்மீரம், பாரதத்தின் பகுதி அல்லவென்றும், அங்கே ஹிந்துக்களுக்கு தொடர்பில்லை என்ற கருத்தியலை திணிக்கும் ஆசிரியர்களும், அறிஞர்களும், அரசியலும் வந்துவிட்டது. எல்லா காலத்திலும் கிருஷ்ண பண்டிட்கள் இருக்கிறார்கள் அவர்கள் என்னவாக இருக்கிறார்கள்? என்பதுதான் இந்த படைப்பின் மூலமாக நாம் சிந்திக்க வேண்டிய கேள்வி.

ஒவ்வொரு ஹிந்துவும் இந்த கிருஷ்ண பண்டிட்தான் இன்று. அந்தப் புள்ளியில் வரலாற்றின் முன்பும், பின்பும் பார்ப்பதோடில்லாமல் உலகத்தின் நிலையையும் பாருங்கள். நமக்கிருப்பது இந்த ஒரே நிலம்தான்..

– சுந்தரராஜ சோழன் –

Share:

Leave a Reply

Your email address will not be published.