காலனித்துவ தடங்க(ல்க)ளை அழித்து, புதிய  வரலாறுகளை உருவாக்கும்  திட்டம்…

பெரிய தேசங்கள், அவர்களின் வரலாற்றை நிலைநிறுத்த, அந்தந்த காலகட்டத்தில் தலைநகரங்களில் சில மாற்றங்கள் செய்வது வழக்கம்!

பல தடைகளையும் தாண்டி செப்டம்பர் 8 அன்று, பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்பட்ட, ‘சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டம்’ தற்சார்பு இந்தியாவின் (Aatmanirbhar Bharat) அடையாளமாக பார்க்கப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா அவென்யூ, ஒட்டுமொத்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது காலனித்துவ தடயங்களை முழுமையாக மாற்றும் நோக்கம் கொண்டது.

பதவிகளின் உச்சபட்ச கோட்டையாக திகழும் ராஜ் பாத், புதிதாக கர்தவ்ய பாத் (ie,கடமை) என பெயரிடப்பட்டுள்ளது. இது பற்றி, பிரதமர் மோடியின் தனிப்பட்ட இணையதளத்தில், “ராஜ் பாத் – அதிகாரத்தின் சின்னமாக இருந்ததிலிருந்து, பொதுவுடைமை மற்றும் முன்னேற்றத்தின் உதாரணமாக மாறியதை இந்தப் பெயர் குறிக்கிறது” என்றுள்ளது.

பிரிட்டிஷ் அரசின் தலைநகரம், கல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டபோது சென்ட்ரல் விஸ்டா, பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர்களான எட்வின் லுடியன்ஸ் மற்றும் பேக்கரால் 1918ல் வடிவமைக்கப்பட்டது. ஆனால் சுதந்திரத்திற்கு பிறகும் சென்ட்ரல் விஸ்டா, அதிகாரத்தின் உச்சமாகவே இருந்தது.

20,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒட்டுமொத்த சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்பு திட்டம், மத்திய பொதுத்துறை (CPWD) மூலம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டது. இதற்கான திட்டத்தை வடிவமைக்க, குஜராத்தை சேர்ந்த கட்டிடக்கலைஞர் பிமல் பட்டேலின் நிறுவனமான HCP டிசைன்ஸ், 2019 அக்டோபரில் ஏலத்தை வென்றது.

இந்த முழு திட்டத்தில் புதிய வைர வடிவிலான பாராளுமன்றம், பிரதமருக்கான புதிய குடியிருப்பு, 10 புதிய அரசு கட்டிடங்கள் மேலும் துறை சார்ந்த பழைய கட்டிடங்களாக இருந்த சாஸ்திரி பவன், நிர்மான் பவன், உத்யோக் பவன், கிரிஷி பவன் மற்றும் வாயு பவன் ஆகியவை அருங்காட்சியங்களாக மாற்றப்படுகின்றன. டிசம்பர் 2020இல் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த திட்டம், 2026இல் முழுமையாக நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு காலத்தில் அடிமைத்தனத்தின் சின்னமாக இருந்த ராஜ்பாத், இப்போது கர்தவ்ய பாத்! வெறும், பெயரில் மட்டும் கடமையை வலியுறுத்தவில்லை; இந்தியா கேட்டிற்கு அருகே புதிதாக திறந்து வைக்கப்பட்ட மிக பிரம்மாண்டமான, 28 அடி உயரமுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையும், அதை உணரவைக்கிறது.

இதற்கு முன்பு இந்த இடத்தில், பிரிட்டிஷ் அரசர் ஜார்ஜின் சிலை இருந்தது. இப்போது அங்கு நேதாஜியின் சிலை, இந்தியாவின் மிகப்பெரிய கனவையும் தியாகத்தையும் காட்டுகிறது. மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ், சிலையை உருவாக்கியுள்ளார். 280 மெட்ரிக் டன் எடையுள்ள நேதாஜியின் கிரானைட் சிலை, மத்திய அரசின் 13,450 கோடி ரூபாய் மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இதைத் தாண்டி, விஜய் சௌக்கில் இருந்து இந்தியா கேட் வரை நீண்டிருக்கும் இந்த மூன்று கிலோமீட்டர் கர்தவ்ய பாதையில் புது நடைபாதைகள், மேம்படுத்தப்பட்ட வாகன நிறுத்த இடங்கள், கண்காட்சியிடங்கள் என நவீன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள கால்வாய் பகுதியில் 19 ஏக்கர் வரை சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் முழு நீளத்திலும் 16 பாலங்கள் உள்ளன. இரண்டிடங்களில் படகு சவாரி அனுமதிக்கப்படுகிறது: ஒன்று க்ரிஷி பவன் அருகில், மற்றொன்று வணிஜ்ய பவனை சுற்றி.

நாட்டின் மிகப் பிரபலமான பொது இடமாக கருதப்படும் இந்த பகுதி, 1.1 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் சிவப்பு கிரானைட் நடைபாதைகள், சுற்றிலும் பசுமையுடன் திகழ 4,087 மரங்கள், சிறு சிறு தோட்டங்கள் என பிரம்மாண்ட கட்டமைப்பின் உருவமாக உள்ளது.

எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த பகுதியில் நடந்து செல்பவர்களுக்கு சுரங்கப்பாதைகள் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்கு பொருத்தமான அனைத்து வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த ஒட்டுமொத்த திட்டத்திற்கு ஏறக்குறைய 5,898 தொழிலாளர்கள் நேரடியாகவும் 1,491 தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலை  செய்கிறார்கள்.

உலக தரத்திற்கு இணையான உள்கட்டமைப்புகள் மற்றும் பிற வசதிகள், அரசின் செயல் திறன் மற்றும்  பாரதத்தின் வளர்ச்சியையும் காட்டுகிறது.

– Subha Lakshmi Pazhani –

Share: