காலை வாரும் சீனாவின் சாலை இணைப்பு திட்டம்

காலை வாரும் சீனாவின்
சாலை இணைப்பு திட்டம்

சீனா மிகப்பெரிய அளவில் சர்வதேச கடன் வழங்கும் தாராள பிரபுவாக உள்ளது. “பொருளாதார வளர்ச்சி” என்ற பெயரில், வளர்ந்துவரும் நாடுகளுக்கு, அவர்களின் சக்தியை மீறிய கடனைக் கொடுத்து, அந்த நாடுகளை, தங்களின் அடிமையாக மாற்றியுள்ளது.

கவர்ச்சியான திட்டங்கள் மூலம் பிற நாடுகளின் சொத்துக்களை விழுங்கும் ஒரு வாய்ப்பாக சீனாவின் “சாலை மற்றும் இணைப்பு முயற்சி” (Belt and Road Initiative) தரைவழி மற்றும் கடல் சார்ந்த வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக 2013ல் துவங்கப்பட்டது.  ஆனால் இன்று இது ஒரு ‘நவீன காலனியத்துவத்தின்’ அடையாளமாக மாறிவிட்டது!

சீனாவின் கடன் கொடுக்கும் தன்மை பெரிய நிபந்தனைகளுக்கு உட்பட்டது. ஆனால் அவற்றின் விதிமுறைகள் வெளிப்படையாக இல்லை. ஆனால், \இந்தத் திட்டத்தில் உள்ள சூழ்ச்சிகளை புரிந்துகொள்ளாமல், பொருளாதாரத்தில் பின்தங்கிய பல ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பா நாடுகள், ரகசிய முறையில், சீனா நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டன.

சீனாவின் சாலை மற்றும் இணைப்பு முயற்சியின் மோசமான தாக்கம் முதன் முதலில் இலங்கையில் தான் தெரியவந்தது. இப்போது நிதிமுறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் சீனா, ஹம்பாந்தோட்டாவில் தொடர்ச்சியான உள்கட்டமைப்பு திட்டங்களில் கையொப்பமிட்டது.

இந்தக் கடற்கரை பகுதியான ஹம்பாந்தோட்டாவில் புதிய ஆழ்கடல் துறைமுகம், ஒரு விமான நிலையம், பெரிய அரங்கம், மாபெரும் மாநாட்டு மையம், பல மைல்களுக்கு புதிய சாலைகள் என சீனாவின் தயவில் திட்டங்களை தொடங்கி, இன்று கடன் வலையில் மூழ்கியுள்ளது இலங்கை.

கடனை திருப்பி செலுத்த இயலாத இலங்கையின் ஹம்பாந்தோட்டா ஆழ்கடல் துறைமுகத்தை, சீனா வெறும் 112 கோடிக்கு கைப்பற்றியது. இதன் மூலமாக உலக நாடுகள், சீனாவின் கடன் கொடுக்கும் மாய வலையை உணரத் தொடங்கினார்கள்.

இந்த ஹம்பாந்தோட்டா திட்டம் சீனாவின் BRI முயற்சியில் கரும்புள்ளியை ஏற்படுத்தியது. மேலும் சீனாவுடன் இதே போன்ற ஒப்பந்தங்களை செய்ய விரும்பிய  பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர், சியரா லியோ போன்ற நாடுகள், இலங்கையை போல் முடிவடைந்துவிடுவோமோ என்ற கவலையில், தங்களுடைய சீன ஒப்பந்தங்களின் கீழ் வரும் திட்டங்களில் சிலவற்றை ரத்து செய்தும், பலவற்றை குறைக்கவும் முடிவு செய்தன.

BRI ஆரம்ப நாட்களில் இருந்த பொலிவை இழக்க தொடங்கியது. இந்தத் திட்டம் முதன் முதலில் அறிவிக்கப்பட்டபோது, மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், முழு மனதோடு வரவேற்றார். உடனடியாக மலேசியாவின் அந்நிய நேரடி முதலீட்டின் முக்கிய ஆதாரமாக சீனா மாறியது. உலக வங்கியின் அறிக்கை படி, 2010 முதல் 2016க்கு இடையில், கிட்டத்தட்ட 36,000 கோடி ரூபாய், சீன அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மூலம் மலேசியாவிற்கு வந்துள்ளது.

சீன வழிகாட்டுதல் மற்றும் நிதி ஆதரவுடன் மலேசியாவில் கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு திட்டம், மெலகா கேட்வே எனப்படும் பெரிய துறைமுக நகரம் உட்பட்ட பல பெரிய உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டன. மேலும் 10,000 கோடி மதிப்பிலான பாரஸ்ட் சிட்டி (Forest city) போன்ற மிகப்பெரிய திட்டங்களும் உறுதி செய்யப்பட்டன. ஆனால் சில மாதங்களிலேயே அந்நாட்டு பிரதமரை உள்ளடக்கிய பல ஊழல்  செய்திகள் வெளிவரத்தொடங்கின, அதைத்தொடர்ந்து 750 கோடிக்கு அதிகமான அரசாங்க பணம் காணாமல் போனதும் தெரியவந்தது.

BRI திட்டத்தின் மூலம் உட்கட்டமைப்பு திட்டங்களின் செலவுகளை செயற்கையாக உயர்த்துவதிலிருந்து  முறைகேடுகள் குறித்த ஆதாரங்களை மறைப்பது வரை மலேசிய பிரதமருடன் சீனா துணை நின்றது. இன்னும் இதுபோல் பல குற்றச்சாட்டுகளின் மையப் புள்ளியாக சீனா நின்றது.

பங்களாதேஷில், சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தால் கட்டப்படவிருந்த நெடுஞ்சாலை, அரசு அதிகாரிகளுக்கு அந்த நிறுவனம் லஞ்சம் வழங்கியதால் பங்களாதேஷ் அரசு இந்த திட்டத்தை நிறுத்தியது. இதுபோல் சீன அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் மேல் உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஒன்று இரண்டல்ல. 2017ஆம் ஆண்டு மெக்கென்சி நடத்திய கணக்கெடுப்பில், 60% முதல் 80 சதவீதம் வரை சில சீன நிறுவனங்கள் லஞ்சம் கொடுப்பது தெரியவந்தது.

கிட்டத்தட்ட இந்த திட்டம், உதவி கேட்கும் நாடுகளுக்கு ‘கடன் பொறியை’ வைத்து காலை வாரும் திட்டமாகவே இருக்கிறது.

சாலை  மற்றும் இணைப்பு திட்டத்தின் வெளிப்படைத்தன்மை இல்லாததும்  மேற்பார்வை இல்லாததும் ஆரம்ப நாட்களில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஒரு வரமாக இருந்தாலும், சமீபத்தில் வெளியான ஊழல்கள், கடன் பொறிகள் மற்றும் தோல்வியடைந்த திட்டங்கள் பல நாடுகளின் பொருளாதாரத்தை தகர்த்துள்ளது. இதனால் உலக நாடுகள் மத்தியில் சீனாவின் BRI திட்டம், ஆதரவை இழந்துவிட்டது…

– Subha Lakshmi Pazhani –

Share: