கிறிஸ்தவர்களை குறிவைக்கிறதா FCRA?!

 

 

அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியின் (Missionaries of Charity) கணக்குகள் முடக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரச்சினை கிளப்பியவுடன், மத்திய அரசை பலரும் சாடினர். பின்னர் அது குறித்து உடனடியாக மத்திய அரசு விளக்கம் அளித்தது. அதில் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் (திருத்தம்) 2010 FCRA ன்கீழ் விதிமுறைகளை மீறியதால், அந்த தொண்டு நிறுவனத்தின் (NGO) மேல், சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஏற்கனவே,  ‘குழந்தைகள் விற்பனை’ விவகாரத்தில் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி 2018ல் சிக்கியது. இது தொடர்பாக சிபிஐ (CBI) விசாரணைக்கு அனுமதிக்குமாறு மாநில அரசுக்கு சிஐடி (CID) பரிந்துரையும் செய்துள்ளது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ( NCPCR), நாட்டில் உள்ள பல குழந்தை காப்பகங்கள் சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும், சில சந்தேகத்துக்குரிய வெளிநாட்டு அமைப்பினரிடமிருந்து நிதி பெறுவதாகவும் குற்றம்சாட்டியது.

 

 

டெல்லியில் NCPCR மேற்கொண்ட விசாரணையில் பல தொண்டு நிறுவனங்கள், சிறார் நீதி சட்டத்திற்கு (Juvenile Justice Act) எதிரான செயல்களையும், POCSO சட்டத்தின் கீழ்  பல குற்றங்களையும் செய்திருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு முன்பு  சிவில் உரிமை குழுக்களான INSAF, CHRI, பழங்குடியினர் நலன் அறக்கட்டளைகள், அம்னஸ்டி இன்டர்நேஷனல், தி லாயர்ஸ் கலெக்டிவ், கீரீன்பீஸ் இந்தியா மற்றும் தி ஃபோர்டு அறக்கட்டளை உள்ளிட்ட பிரபலமான அமைப்புகளின் சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகளால், அவற்றின் FCRA பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. NGOகளின் சுதந்திரத்தை பறிக்கிறதா FCRA ?! வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் (FCRA) முதன்முதலில் 1976ல் இயற்றப்பட்டது. பிறகு தொண்டு நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்காக 2010ல், அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பல முக்கிய திருத்தங்களை கொண்டுவந்தார். மேலும் இதன் முக்கியத்துவத்தை அறிந்து, அவ்வப்போது புதிய விதிகளும் சேர்க்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு நன்கொடையை பெற விரும்பும் அனைத்து அறக்கட்டளைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் FCRA க்குள் பொருந்தும். மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் FCRA-ன்கீழ்  கட்டாயமாக தங்களை பதிவு செய்ய வேண்டும். தொடக்கத்தில் FCRA பதிவு, 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்தால், அதை புதுப்பிக்கவும் முடியும். சமூக, கல்வி, மத, பொருளாதார மற்றும் கலாச்சார நோக்கங்களுக்காக வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறலாம். வருமான வரி சட்டத்தின் கீழ், ஆண்டு வருமானத்தைக் கட்டாயம் தாக்கல் செய்யவும் வேண்டும். 2015ல் உள் துறை அமைச்சகம் இது தொடர்பாக புதிய விதிகளை அறிவித்தது. அதில் வெளிநாட்டு நன்கொடை இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதிக்கக் கூடாது. மேலும் நட்புறவு நாடுகளின் உறவுகளைப் பாதிக்கக் கூடாது. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்காது என்று NGOக்கள், உறுதிமொழியை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தேசியமயமாக்கப்பட்ட அல்லது தனியார் வங்கிகளில் கணக்குகளை இயக்க வேண்டும்; அவை பாதுகாப்பு துறைக்கு ஒத்துழைக்கும் வகையில் இயங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. எப்போது FCRA பதிவு ரத்து செய்யப்படும்? NGOக்களிடம் மத்திய உள்துறை அமைச்சகம் ஏதேனும் சந்தேகத்திற்குரிய செயல்களை கண்டறிந்தால் FCRA பதிவை 180 நாட்களுக்கு நிறுத்திவைக்கலாம். இறுதி முடிவு எடுக்கும் வரை NGOக்கள் புதிய நன்கொடை எதையும் பெற முடியாது; உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி NGOக்கள், வங்கி கணக்குகளில் இருக்கும் தொகையில் 25 சதவீதத்திற்கு மேல் பயன்படுத்த முடியாது. NGOக்களின் நடவடிக்கையில் தேசத்திற்கு எதிரான உள்ளீடுகளை உள்துறை அமைச்சகம் நிரூபித்தால் NGOவின் பதிவை ரத்து செய்ய முடியும்.

 

 

வெளிநாட்டு நன்கொடையை தவறாக பயன்படுத்துதல், வருடாந்திர வருமானத்தை சமர்ப்பிக்காதது மற்றும் பிற நோக்கங்களுக்காக நன்கொடையை உபயோகிப்பது போன்ற FCRA மீறல்களுக்காக 2011 முதல் செப்டம்பர் 2020 வரை 20,664 NGOக்களின் பதிவு ரத்தாகி உள்ளது. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வளர்ச்சிப் பணி என்று கூறி, பெரும்பாலான நன்கொடையை நக்சலைட்டுகளுக்குப் (naxalite) பயிற்சி அளிக்க பயன்படுத்துகிறார்கள் என்று உளவுத்துறை அறிக்கை தெரிவிக்கிறது. அதனால், நியாயமான NGOக்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை; இந்திய சட்டத்திற்கும், இறையாண்மைக்கு எதிராக செயல்படும் NGOக்கள் தான் சிக்குகின்றனர்.

 

– Subha Lakshmi Pazhani –

Share: