குஜராத் கலவரமும் உச்சபட்ச தீர்ப்பும்!!

எப்போதுமே மோடி அரசாங்கம் சிறுபான்மையினருக்கு எதிரானது, குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானது என்று கட்டம் கட்டுவார்கள். இதற்கு 2002-ல் நடந்த குஜராத் கலவரமும் அதைச் சுற்றி நடந்த அரசியலும் தான் முக்கிய காரணம்!

என்ன தான் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நானாவதி கமிஷன் மற்றும் குஜராத் உயர் நீதிமன்றம் ஆகியவை, இந்தக் கலவரத்திற்கு மோடி அரசாங்கம் காரணம் இல்லை என்று தெளிவுபடுத்தினாலும், தீர்ப்பு வழங்கினாலும், மோடிக்கு எதிராக பலர் எடுக்கும் முதல் ஆயுதம் குஜராத் கலவரம் தான்.

24 ஜூன் 2022 அன்று வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு, குஜராத் கலவரத்தின் SIT அறிக்கை சரியானது எனவும், இதில், அன்று குஜராத்தில் ஆட்சி செய்த மோடி அரசின் தரப்பில் ‘சதித் திட்டம்’ எதுவும் இல்லை எனவும் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின் தரப்பை ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி, ‘கலவரத்தை தூண்டி வளர்த்தது அரசுதான்’ என்ற கருத்தையும், அதை முன்வைத்த பல “சமூக போராளிகளையும்” நீதிபதிகள், இந்த தீர்ப்பின் மூலம் நிராகரித்தார்கள்.

பிப்ரவரி 27, 2002 அன்று, அயோத்தியில் இருந்து வந்த ரயிலை, குஜராத்தின் கோத்ராவில், சந்தேகத்துக்குரிய சிலர் தீ வைத்தனர். இதனால் ராம ஜென்ம பூமியில் புனித யாத்திரைக்கு சென்று திரும்பிய கரசேவகர்கள், பெண்கள், குழந்தைகள் என 59 பேர், உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து சில இந்து அமைப்பினர் முஸ்லீம் மக்கள் அதிகம் இருக்கும் இடத்தை தாக்கத் தொடங்கியதில், இரு பிரிவினருக்கும் இடையில் ஒரு பெரிய மதக் கலவரமாக மாறி, நூற்றுக்கணக்கானோர் இறந்தனர்.

இந்த துரதிருஷ்டவசமான சம்பவம், பல பேருக்கு, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை திணிக்கவும் தீனியாக இருந்தது. மேலும், அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை குறிவைக்கவும் பெரிய ஆயுதமாக இருந்தது. அதை விட பெரும் துயரமாக, இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களையும், முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களையும் திட்டமிட்டு சில அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பயன்படுத்தினர்.

2002 குஜராத்தில் நடந்த கலவரம், சுதந்திர இந்தியாவில் தவிர்த்திருக்க வேண்டிய ஒரு கருப்பு அத்தியாயம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் 1947க்கு பிறகு நாட்டில் நடந்த ஒரே கலவரம் அது அல்ல! மேலும் கவனிக்க வேண்டியது என்னவென்றால்…

அன்று குஜராத் அரசாங்கம், கலவரம் தொடர்பாக எடுத்த நடவடிக்கையில், குற்றம்சாட்டப்பட்ட 25,486 பேரில் 17,489 பேர் இந்துக்கள், 7,997 பேர் முஸ்லிம்கள். மேலும் 26,997 பேர் மொத்தமாக கைது செய்யப்பட்டனர் அவர்களில் 19,198 பேர் இந்துக்கள்.

கலவரம் நடந்த 56 நாட்களிலேயே, அதாவது மார்ச் 5, 2002 நிலவரப்படி, மாநிலத்தில் 98 நிவாரண முகாம்கள் இயங்கி வந்தன அவற்றில் 85 முகாம்களை முஸ்லிம் சமூகத்திற்காகவும், 13 முகாம்களை இந்துக்களுக்கும் குஜராத் அரசு ஒதுக்கியது.

பலரும் இந்த குஜராத் கலவரத்தையும் டெல்லியில் 1984ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தையும் ஒப்பிடுகிறார்கள். குஜராத்தில் மத வன்முறை, இரண்டு பிரிவினருக்கு இடையில் நடந்தது. ஆனால் 1984 டில்லியில் நடந்தது, ஒரு சமூகத்தை மட்டும் குறிவைத்து நடத்தப்பட்ட கலவரம். குறிப்பாக காங்கிரஸ் அரசாங்கத்தின் கனத்த மவுனத்தோடு, சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு தொடர் வன்முறை. வெறும் மூன்றே நாட்களில், 3000 சீக்கியர்கள் டெல்லி தெருக்களில் படுகொலை செய்யப்பட்டார்கள்.

உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நானாவதி கமிஷனின் அறிக்கையில் உள்ள பல உண்மைகளை திரிப்பதற்காக, 2004-ல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கம், ‘கோத்ரா ரயில் கொலைகளை’ விசாரிக்க ‘UC பானர்ஜி கமிட்டியை’ அமைத்தது. ஆனால் விசாரணை கமிஷன் சட்டம் 1952, பிரிவு 3(b) யின் அடிப்படையில் அக்டோபர் 13, 2006 அன்று குஜராத் உயர்நீதிமன்றம், பானர்ஜி கமிட்டியை சட்டவிரோதம் என்று அறிவித்தது.

இந்த கலவரத்திற்கு பிறகு இஸ்லாத்தைச் சார்ந்த பலரும் புலம்பெயர்ந்தது உண்மையே. ஆனால், சொந்த மண்ணிலேயே அகதிகளாகி, கூட்டம் கூட்டமாக வெளியேறிய காஷ்மீர் பண்டிட்கள் போல் அல்லாமல், ஆறு ஏழு மாதங்களில் முஸ்லிம்கள் குஜராத்திற்கு திரும்பும் சூழல் ஏற்பட்டது. இன்னும் சொல்லப்போனால், தொழில் செய்வதற்காக, பிற மாநிலங்களை சேர்ந்த முஸ்லிம்கள் குஜராத்தில் கூடியிருக்கிறார்கள்.

இந்தியாவின் கிராமப்புற முஸ்லிம்களின் மாநில வாரியான வறுமையை ஆய்வு செய்த டெண்டுல்கர் கமிஷன் (2010-2011) அறிக்கையின் படி, குஜராத்தில் ஏழை முஸ்லிம்களின் எண்ணிக்கை 7.7% தான். இது அகில இந்திய எண்ணிக்கையான 26.9% லிருந்து மிகக் குறைவு. மாறாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களின் நிலை மிகவும் மோசமான இடத்தில் இருந்தது.

மத்திய அரசால் அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டி தரவுகளும் குஜராத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு நிதி உதவி மற்றும் நலத்திட்டங்கள், மற்ற மாநிலங்களை விட அதிகமாகவே உள்ளதை வெளிகாட்டுகிறது.

இது 1969, 1985, 1987, 1992 போல் வழக்கமான பெரிய கலவரங்களைக் கண்ட காலத்திலிருந்து, மோடி அரசாங்கம் குஜராத்தை முற்றிலும் வேறுபட்ட முன்னேறிய மாநிலமாக மாற்றியுள்ளார் என்பதைக் காட்டியது. .
பொருளாதாரம், அடிப்படை கட்டமைப்பு போன்ற விஷயங்களை மட்டுமே உறுதியாகக் கொண்டு, குஜராத்தை முதலீட்டாளர்களுக்குப் பிடித்த மாநிலமாக மோடி ஆக்கியிருந்தார்.

அதனால் தான், தன்னைச் சுற்றி வந்த விமர்சனங்களைத் தாண்டி, மூன்று முறை குஜராத்தின் முதல்வராகவும் இரண்டு முறை இந்தியப் பிரதமராகவும் மக்களால் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

– Subha Lakshmi Pazhani –

Share: