கூட்டாட்சி கொள்கையின் மீதான அத்துமீறலா ?!

ஐஏஎஸ், அனைத்து சேவை பணிகளிலும் கிரீடமாக பார்க்கப்படுகிறது. என்னதான் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கேடர்களை மத்திய அரசுப் பணி, மாநில அரசுப் பணி என மத்திய அரசே முடிவு செய்தாலும், அவர்களின் பணியையும், பதவியையும் தீர்மானிக்கும் இடத்தில் மாநில அரசு தான் உள்ளது.

அரசமைப்பின் 309வது பிரிவு, மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் தங்கள் நிர்வாகத்தை நடத்துவதற்கான சேவைகளை அமைக்கவும், பராமரிக்கவும் அதிகாரத்தை வழங்குகிறது. இருப்பினும், அவர்களுக்கு இடையே ஒற்றுமையை காக்க சர்தார் பட்டேல், அகில இந்திய சேவையை கட்டமைத்தார். மத்திய சேவை அல்லது மாநில சேவை போலல்லாமல், ஒரு அகில இந்திய சேவையானது பிரிவு 312ன் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ஆம் தேதி, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை (DoPT), அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் மூலம், இந்திய ஆட்சிப்பணியாளர் விதிகள் 1954, (Indian Administrative Service Rule) பிரிவு 6இல் மத்திய அரசு பரிசீலித்துள்ள மாற்றங்கள் குறித்து ஜனவரி 25ஆம் தேதிக்குள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என கூறியது.

அந்தக் கடிதத்தில், ‘பொது நலன்’ அடிப்படையில், மாநில  அரசில் சேவை செய்யும் அதிகாரிகள், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மத்திய அரசுக்கு தேவைப்படுவதால், மத்திய அரசின் கீழ் பணியமர்த்தப்படுவதற்கு, சம்பந்தப்பட்ட மாநில அரசு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும், குறிப்பிட்ட காலத்திற்குள் மத்திய அரசின் முடிவை மாநில அரசு செயல்படுத்தவில்லை என்றால், அந்த அதிகாரி மத்திய அரசால், சம்பந்தப்பட்ட மாநில கேடரில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

 

இதற்கு முன்பு, இந்திய ஆட்சிப் பணி 1954, பிரிவு 6-ன்படி, இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் பிரித்து அனுப்பப்படுவர். தொடர்ந்து, அவர்கள் அந்த மாநில அதிகாரிகளாகிவிடுவார்கள். உதாரணத்திற்கு தமிழ்நாடு கேடர், உ.பி கேடர் என்பார்கள். அதன் பின், மத்திய அரசின் பணிகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் தேவைப்படும்பட்சத்தில், மாநில அரசுகள் மற்றும் குறிப்பிட்ட ஐஏஎஸ் அதிகாரியின் விருப்பத்தின் அடிப்படையில் தான் அவர்களை அந்த மத்திய அரசு பணிகளில்  அமர்த்துவார்கள்.

இந்த புதிய விதி மாற்றத்துக்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, தேவையான அதிகாரிகளை மாநில அரசுகள் அனுப்பி, மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தருவது வெகுவாக குறைந்துள்ளது. இந்திய ஆட்சிப் பணியாளர்களின் மொத்த எண்ணிக்கையில் 40% பேர் மத்திய பணிக்கும், 60% பேர் மாநில பணிக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால்,  2014ஆம் ஆண்டில் 25% அதிகாரிகள் மத்திய பணியில் இருந்த நிலையில், தற்போது வெறும் 18% பேர் மட்டுமே உள்ளனர். இதனால் மத்திய அரசு பணிகளில் பெரும் நெருக்கடிகளும் சவால்களும் உள்ளன என தெரிவித்தது.

மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை தரவுகளின்படி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள 536 அதிகாரிகளில்  32 பேர் மட்டுமே மத்திய பணியில் உள்ளனர்.  அதேபோல் பிகாரில் 248 இல் 32 பேர் , ஒடிசாவில் 180 இல் 25 பேர், கேரளாவில் 124 இல் 20 பேர், தமிழகத்தில் 322 இல் 20 பேர் மட்டுமே மத்திய பணியில் உள்ளனர்.

இந்த நிலையில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள திருத்தம், பல எதிர் வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய திருத்தத்தின்படி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளில் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசால் அழைத்துக்கொள்ள முடியும் எனவும் இது அரசமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கூட்டாட்சி விதிமுறைகளுக்கு எதிரானது எனவும், பல  மாநில அரசுகள் எதிர்க்கின்றன.

மாநிலங்களில் உயர்மட்ட அதிகாரத்தில் முழுக்க முழுக்க ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்டுள்ளதால் மாநிலங்கள்- குறிப்பாக எதிர்க்கட்சி மாநிலங்கள், தங்களின் முக்கிய அதிகாரிகளை மத்திய அரசிடம் இழக்க நேரிடும்; அதனால் முக்கிய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தாமதமும், சிக்கல்களும் வரும் என்று அஞ்சுகின்றனர்.

மாநில அரசுகளின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு IAS அதிகாரிகள் துணை போவதாக கருதும் மத்திய அரசு, ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு மத்திய அரசிடம் இந்த அதிகாரம் இருக்க வேண்டியது அவசியம் என கருதுகிறது.

எனினும், சரியான முன்னேற்பாடுகளைச் செய்யாமல் மத்திய அரசு இதை நடைமுறைப்படுத்தினால், இது மத்திய-மாநில உறவுகளில் பிளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மாநிலங்களிலுள்ள ஐஏஎஸ்- களின் செயல்பாட்டிலும் பல நெருக்கடிகளை உருவாக்கலாம்.

– Subha Lakshmi Pazhani –

Share:

Leave a Reply

Your email address will not be published.