கேள்விக்குள்ளாகும் தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைதன்மை

கேள்விக்குள்ளாகும் தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைதன்மை

– Subha Lakshmi Pazhani –

தலைமை தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் (EC) செய்வதற்கான வழிமுறைகளில் வெளிப்படையின்மை, முழுமையற்ற பதவிக் காலம் மற்றும் அரசியல் அழுத்தங்கள்  போன்றவை, உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை கடுமையாக வாதிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது. இறுதி தீர்ப்பு இன்னும் வழங்கப்படாத நிலையில், விசாரணையின் போது நடைபெற்ற வாதங்கள் பெரும் கவனிப்பைப் பெற்றன.

இது குறித்து, நீதிமன்றத்தில் நான்கு பொதுநல வழக்குகள் உள்ளன; அவை 2015ஆம் ஆண்டு தொடங்கி தாக்கல் செய்யப்பட்டன. மனுதாரர்களில் வழக்கறிஞர் அனூப் பரன்வால், பாரதிய ஜனதா கட்சி தலைவரும் பெருமளவில் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்யும் வழக்கறிஞருமான அஷ்வினி உபாத்யாய் மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம், தேர்தல் முறையைக் கண்காணிக்கும் NGO அமைப்பும் அடங்கும்.

குறிப்பாக, அக்டோபர் 23, 2018 அன்று உச்ச நீதிமன்றம், CEC கள் மற்றும் EC களை தேர்ந்தெடுப்பதற்கு கொலிஜியம் போன்ற அமைப்பை பரிந்துரை செய்யும் பொதுநல மனுவை, ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்பியது.

மனுவில், அவ்வப்போது அமையும் மத்திய அரசுகளின் விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப தேர்தல் ஆணையர்களின் நியமனங்கள் நடைபெறுவதாக குறிப்பிட்டு இருந்தனர். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நீதித்துறையின் கருத்தில் நியமிக்கப்படும் சிபிஐ இயக்குனரை போல் அல்லாமல், தேர்தல் ஆணைய உறுப்பினர்களை (EC) மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக நியமிக்கிறது என்றனர்.

சட்டத்தின் படி பார்த்தால் தலைமை தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்களை (EC) நியமிப்பதற்கு பிரத்யேக நடைமுறை எதுவும் இல்லை. பிரதமரின் பரிந்துரை அடிப்படையில் ஜனாதிபதி CEC மற்றும் ECயை நியமிக்கிறார். இருப்பினும் பிரிவு 324ன் படி, தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் முறையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது. ஆனால் இதுவரை எந்த அரசாங்கமும் இந்த முயற்சியை எடுத்ததில்லை.

நீதிபதிகளின் பார்வை…

நீதிபதிகள் அழுத்தி கூறியதே, தலைமை தேர்தல் ஆணையரின் துண்டிக்கப்பட்ட பதவிக்காலம் தான்! தலைமை தேர்தல் ஆணையர்கள், ஆறாண்டு பதவிக் காலத்தில் முழுமையாக இல்லாததை சுட்டிக்காட்டினார்கள். மேலும், ஓரிரு ஆண்டு பதவிக் காலங்கள், தேர்தல் ஆணையத்தில் பெரும் வளர்ச்சி மாற்றத்தை ஏதும் கொண்டு வராது என்பதையும் பதிவு செய்தனர்.

அரசமைப்பை ஏற்றுக் கொண்ட முதல் 46 ஆண்டுகளில் (1950- 1996 வரை) 10 CEC கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் டி.என் சேஷனுக்குப் பிறகு (6 ஆண்டுகள் முழு பதவி காலத்தை பெற்ற கடைசி நபர்) 26 ஆண்டுகளில் 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிலும் கடந்த எட்டு ஆண்டுகளில் 8 CEC கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2004இல் இருந்து எந்த CEC யும் ஆறு வருட பதவிக்காலத்தை நிறைவு செய்யவில்லை.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது வரை (எது முதலில் வருகிறதோ) பதவியில் இருக்கலாம் என்று உள்ளது. இதை சுட்டிக்காட்டிய அமர்வு, தலைமை தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்ட ஒருவருக்கு முழு ஆறு ஆண்டுகள் கிடைக்காமல் இருப்பதைத் தான் மத்திய அரசு உறுதி செய்கிறது என்று கண்டித்தது. மேலும் இது ஒரு குழப்பமான போக்கு எனவும், இப்போது டி.என்.சேஷன் போல் ஒரு அதிகாரி தேவை எனவும் குறிப்பிட்டுள்ளது.

நீதிபதிகள் குறிப்பிட்ட டி.என் சேஷன்..

தலைமை தேர்தல் ஆணையராக சேஷன் நியமிக்கப்பட்ட பின்னர் தான் தேர்தல் ஆணையத்துக்கு இருந்த அதிகாரம் குறித்து அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது. சாதாரண மக்களுக்கும் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை வரும் வகையில் சேஷன் பணியாற்றினார்.

அதில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை, பல மொழிகள், வேறு வேறு கலாச்சாரங்கள்  கொண்ட இந்திய தேசத்தில் தேர்தலை மிக நேர்மையாகவும் கட்டுப்பாடாகவும் நடத்திக் காட்டினார் சேஷன்.

தேர்தல் ஆணையத்தின் பலமான அதிகாரத்தை கண்டு அரசியல்வாதிகள் அஞ்சும் அளவிற்கு நேர்மையான தேர்தலை நடத்திக் காட்டத் தொடங்கியவரும் இவர்தான்.

முடிவாக நீதிபதிகள், தேர்தல் ஆணையர்களின் நியமனம், கொலிஜியம் போன்ற குழுவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் தேர்வு குழுவில் சேர்க்கப்பட வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.

இது 2015ஆம் ஆண்டு சட்ட ஆணையம் பரிந்துரை செய்த அறிக்கையில் உள்ள வலியுறுத்தல் ஆகும்.

கடந்த ஆறு ஏழு ஆண்டுகளில் வெளிப்படை தன்மைக்காக பல முயற்சிகளை எடுத்த இந்த அரசு, தலைமைத் தேர்தல் ஆணையரின் நியமனத்தில் உள்ள சந்தேகங்களையும் தீர்க்குமா?

Share: