சமூக நீதியை நிலைநாட்டிய பாஜக

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம், ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், நாட்டின் 15 வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல், ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ளது
பாஜக தரப்பில் ஒரு வேட்பாளரும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரும் நேருக்கு நேர் மோதல் எழுந்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்

ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பாய்டாபோசி என்ற கிராமத்தை சேர்ந்த பழங்குடியினப் பெண் திரெளபதி முர்மு. 1958ம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி பிறந்தார். சந்தால் சமூகத்தைச் சேர்ந்த பிராஞ்சி நாராயண் டுடுவின் மகளான திரெளபதி முர்மு, புவனேஸ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் படித்தவர். சியாம் சரண் முர்முவை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.

திரௌபதி முர்முவின் வாழ்க்கையில் ஏற்பட்ட தனிப்பட்ட துயரங்கள், கணவர் மற்றும் இரண்டு மகன்களின் இழப்பு, அவருக்கு அரசியல் மேல் ஆர்வம் வர காரணமாக இருந்தது. இதன் காரணமாக பா.ஜ.க.வில் இணைந்தார் திரவுபதி முர்மு. ஆசிரியராகப் பணிபுரிந்த திரௌபதி முர்மு, கவுன்சிலராகவும் பின்னர் எம்எல்ஏவாகவும் ஆனார். குடியரசு முன்னாள் துணைத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போலவே, திரௌபதி முர்முவும் நீண்ட காலமாக கல்வித் துறையில் தொடர்புடையவர்.

ராய்ரங்பூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினர் ஆனார். ஒரிசாவின் பாரதிய ஜனதா மற்றும் பிஜூ ஜனதா தளம் கூட்டணி அரசாங்கத்தின்போது இவர் மார்ச் 2000 முதல் ஆகஸ்ட் 2002 வரை வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான தனி பொறுப்பை ஏற்றார். ஆகஸ்ட் 2002 இலிருந்து மே 2004 வரை மீன்வளம் மற்றும் விலங்கு வள மேம்பாட்டுத் துறை மாநில அமைச்சராக பதவி வகித்தார்.

மேலும் ஒடிசா மாநிலத்தின் சட்டப்பேரவையில், 2007ஆம் ஆண்டின் சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான நிலகாந்தா விருதை வென்று இருக்கிறார். ஒடிசா அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் வணிகத் துறை, மீன்வளத் துறை மற்றும் கால்நடை வளர்ச்சித் துறை என பல்வேறு துறை அமைச்சராக பதவி வகித்து இருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்த திரெளபதி, 2006 முதல் 2009 வரை அக்கட்சியின் பழங்குடியினர் அணி மாநிலத் தலைவராக இருந்தார்.

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக 2015 மே 18ம் தேதி முதல், கடந்த 2021 ஜூலை 12ஆம் தேதி வரை பதவி வகித்தார்.

2002-ஆம் ஆண்டில் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் வந்தபோது, அந்தத் தேர்தலில் தமிழரான அப்துல் கலாமை பாஜக தலைமை, வேட்பாளராக அறிவித்து, அவரை வெற்றி பெறவும் வைத்து, குடியரசுத் தலைவர் ஆக்கியது.

வாஜ்பாய்க்குப் பிறகு 2014-இல் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் 2017-இல் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், பாஜக சார்பில், பட்டியலினத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவரை வெற்றியும் பெற வைத்தது. இதன் மூலம் நாட்டில், கே.ஆர். நாராயணனுக்குப் பிறகு பட்டிலியனத்தைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவராக ஆன பெருமை, ராம்நாத் கோவிந்துக்குக் கிடைத்தது.

தற்போது நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில், பாஜக கூட்டணியின் வேட்பாளராக பழங்குடியினத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அரசியலில் சமூக நீதி, இடஒதுக்கீடு என்கிற கோட்பாடு ஆழ வேர் பிடித்த நின்றுவிட்ட நிலையில், பழங்குடியினத்தை சேர்ந்த பெண் வேட்பாளராக திரெளபதி முர்முவை முன்னிலைப்படுத்தி இருப்பதில் தேசிய கட்சியான பாஜக, தன்னுடைய சமூக நீதியை மீண்டும் ஒரு முறை நிலைநாட்டி உள்ளது.

திரெளபதி முர்மு வெற்றி பெற்றால், நாட்டில் குடியரசுத் தலைவரான முதல் பழங்குடியினத்தவர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும். ஆட்சியில் இருந்த மூன்று முறையும் இஸ்லாமியர், பட்டியலினத்தவர், பழங்குடியினரை குடியரசுத் தலைவராக்கிய பெருமை பாஜகவுக்கும் கிடைக்கும்.

– ஸ்ரீ (PSJ) –

Share: