ஜப்பான் அதிபர் கொலை.. உலகம் திருந்தவில்லை

உலகத் தலைவர்களின் படுகொலைகள், இன்று இருப்பதை விட ஒரு காலத்தில் மிகவும் அதிகமாக இருந்தன. உலகின் மிகவும் வளர்ந்த நாடுகளில் உயர் பதவியில் உள்ள அரசியல்வாதிகளை படுகொலை செய்வது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. அதிலும் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் படுகொலை, உலகளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது!

ஜப்பானில் இதுபோன்ற படுகொலை நடந்து 80 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இரண்டாம் உலகப்போருக்கு முன்பு உயர்மட்ட அரசியல் தலைவர்களின் கொலைகள், சலசலப்பை கண்டன. அதன் பின்னர் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை.

1920 முதல் 1970 வரை “வளர்ந்த நாடுகள்” என அழைக்கப்படும் நாடுகளில் 13 தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 1971 முதல் இன்று வரை 7 தலைவர்கள் படுகொலையில் உயிரிழந்து உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும், வளர்ச்சி அடைந்த நாடுகளில் இல்லை.

ஆனால் உலகில் இதுபோன்ற முக்கிய பொறுப்புகளில் இருக்கும் தலைவர்களின்  படுகொலைகள் அதிர்ச்சியை தந்தாலும், எப்பொழுதும் அதன் பின்னால், பெரிய நோக்கங்கள் இருந்துள்ளது.

இந்திய அரசியல் வரலாற்றில் அதிர்ச்சி தந்த இரண்டு சம்பவங்களை நாம் எளிதில் கடந்து விட முடியாது. 1984ல் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, அவரது பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவரது மகனும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி 1991ல் படுகொலை செய்யப்பட்டார்.

இதற்குப் பின்னால் நடந்த “சதி திட்டமும்” இதற்குப் பிறகு நடந்த வன்முறைகளும் இன்றும் நமக்கு ஒரு பாடம்.

அமெரிக்க உள்நாட்டு போரின் மூலம் அந்த தேசத்தை வழிநடத்திய 16வது அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் ஏப்ரல் 14, 1865 அன்று வாஷிங்டன் DC-யில் உள்ள Ford தியேட்டரில் அமெரிக்க மேடை நடிகரான ஜான் விக்ஸ் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிறகு, ‘மிக அழகானவர்’  என்று பத்திரிக்கை வட்டாரங்களால் அழைக்கப்பட்ட  அதிபராக  ஜான் ஃப் கென்னடி,  நவம்பர் 22, 1963ல், பதவியில் இருந்தபோதே படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு அமெரிக்காவில் அரசியல் சுழற்சியும், துப்பாக்கிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தபோதிலும் இது போன்ற  துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.

1981 மே மாதம் பங்களாதேஷின் மிகப்பெரிய தலைவரான ஜியாவுர் ரஹ்மான் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் படுகொலை செய்யப்பட்டார்.

பாகிஸ்தானின் முதல் பிரதமரான லியாகத் அலிகான் அக்டோபர் 16, 1951 அன்று ராவல்பிண்டியில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றியபோது படுகொலை செய்யப்பட்டார்.

பிறகு அதே ராவல்பிண்டி, 2007ல் மற்றொரு தலைவரின் படுகொலையை கண்டது. முன்னாள் பிரதம மந்திரி பெனாசிர் பூட்டோ டிசம்பர் 27, 2007 அன்று தேர்தல்  பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த சிறிது நேரத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இலங்கையில் 1989 முதல் 1993 வரை ஜனாதிபதியாக இருந்த ரணசிங்கே பிரேமதாசா 1993ல் படுகொலை செய்யப்பட்டார்.

அரசியல் வன்முறைகளில் ஆளுமை மிக்க தலைவர்களை படுகொலை செய்தல், தனிநபர் மீதான எதிர்ப்பையும் தாண்டி அந்த குறிப்பிட்ட அரசாங்கத்தையே ஆட்டிவிடும். ஏனென்றால், அதிருப்தியில் இருக்கும் குழுக்கள், அரசியல் மாற்றத்திற்கு அழுத்தம் கொடுப்பார்கள். மேலும் அது, சதி மற்றும் உள்நாட்டு போருக்கு தீவிர வழிவகுக்கும். அதனால் தலைவர்களின் பாதுகாப்பையும், உயிரிழப்பையும் எளிதாக எடை போட்டுவிட முடியாது.

ஏனெனில், கொலைக்குப் பிறகு எத்தனை தலை உருளும் என யாருக்கும் தெரியாது !

– Subha Lakshmi Pazhani –

Share: