துபாய் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. மகிழ்ச்சியாக இருந்தது என்றும் 6 நிறுவனங்களுடன் 6100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
துபாய் கண்காட்சி, கடந்த வருடம் அக்டோபர் மாதம் 1ம் தேதி துவங்கப்பட்டது. இந்த கண்காட்சியில் 192 நாடுகள் கலந்துகொண்டன. இந்தியா தனது அரங்கத்தை, ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் நான்கு அடுக்குகள் கொண்ட கட்டிடத்தை வடிவமைத்து பங்கேற்றது. இந்த அரங்கை கட்டமைப்பதற்கு இந்திய அரசு செலவு செய்த தொகை 490 கோடி ரூபாய். இந்த அரங்கம் இனி துபாயிலேயே நிரந்தரமாக இருக்கும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
மொத்தம் 15 மாநிலங்களும், 9 மத்திய அமைச்சகங்களும் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டன. தமிழக முதலமைச்சர் மற்றும் கேரள முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள துபாய் சென்றபோது, அவர்களை வரவேற்று அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் பொறுப்போடு அளித்ததோடு, அந்நாட்டு அரசுடன் ஒருங்கிணைக்கும் பணியை செய்தது, ஐக்கிய அமீரகத்தின் இந்திய தூதரகம். அதாவது மத்திய அரசு! இந்திய அரங்கத்தை துவக்கி வைத்தது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
இந்த அரங்கத்தில் உள்ள முதல் தளத்தில் இந்தியாவின் விண்வெளி திட்டங்கள் குறித்த கண்காட்சி, யோகா, ஆயுர்வேதம் உள்ளிட்ட சுகாதாரத்துறையில் இந்தியாவின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விரிவான விளக்கங்களும், இரண்டாவது தளத்தில், இந்தியாவின் கலை, கலாச்சாரம் குறித்த விவரங்களும், மூன்றாவது, நான்காவது தளங்களில் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் முன்னேற்றம், புதிய இந்தியா, இரு நாடுகளுக்கிடையேயேயான நட்புறவு போன்ற பல்வேறு அம்சங்களை விளக்குகிறது. இந்த தளங்களில் ஒன்றில் தான், அக்டோபர் 1 ம் தேதியிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மாநிலத்தின் வாரமாக அறிவிக்கப்பட்டு, அந்தந்த மாநில அரசுகளின் கண்காட்சி இந்திய அரங்கத்தில் நடைபெற்றது. கடைசியாக பங்கேற்றது தமிழக அரசு.
மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லடாக், கோவா, ஜார்கண்ட், உத்தரபிரதேசம் போன்ற பல மாநிலங்கள் ஒரு வாரம் தங்கள் மாநிலத்தின் பெருமைகள் மற்றும் மாநிலத்தில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்த கண்காட்சியை அரங்கேற்றிய நிலையில், அதில் ஒரு பகுதியாக தான் தமிழக அரசு, கடைசி வாரத்தில் பங்கேற்றது. ஜம்மு காஷ்மீர், உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்கள் தமிழகத்தை விட அதிகளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துகொண்டதோடு பல ஆயிரம் கோடி அதிகமாகவே முதலீடுகளை ஈர்த்துள்ளன. மேலும், மத்திய அரசு பல்வேறு கட்டமைப்புகளை பெருக்கும் திட்டங்களில் முதலீடுகளை ஐக்கிய அமீரக அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திற்கு கடைசி வாரத்தை ஏன் ஒதுக்கியது மத்திய அரசு? என்று சிலர் கேட்கக்கூடும். ஆனால், இந்த கண்காட்சி துவங்குவதற்கு முன்பு வரை, அதில் பங்கேற்பது குறித்து தமிழக அரசு உறுதி செய்யவில்லை என்பதால் மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை என்பதே உண்மை. மிக தாமதமாக தமிழகம் பங்கேற்க இசைந்தது மத்திய அரசின் தவறல்ல.
இப்போது ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றது போல் வேறு நாடுகளுக்கு சென்று,தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்பு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, ‘அப்படி ஒரு சூழ்நிலை வருகிறபோது நான் நிச்சயமாக பயன்படுத்துவேன்’ என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. மத்திய அரசு இப்போது அளித்த வாய்ப்பை போல், சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கும்போதெல்லாம் அதை பயன்படுத்த வேண்டியது தமிழக அரசின், முதல்வரின் கடமை.
மத்திய பாஜக அரசு, ஒட்டு மொத்த இந்திய வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டு வருகிற நிலையில், ஒவ்வொரு மாநிலமும் தங்களின் வளர்ச்சி குறித்து பாடுபடுவதும், போட்டியிடுவதும் ஆரோக்கியமானதே. ஆனால், அதற்கான கட்டமைப்பை உருவாக்கி தரும் மத்திய அரசை பாராட்டாமல் , நன்றி தெரிவிக்காமல் இருப்பதும், தாங்களே அந்த வாய்ப்பை உருவாக்கியது போல தம்பட்டம் அடித்து கொள்வதும் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு, கூட்டாட்சி தத்துவத்திற்கு உகந்ததல்ல.
நாராயணன் திருப்பதி.
செய்தி தொடர்பாளர்,
தமிழக பாஜக .