தமிழ்நாட்டில் மதச் சுதந்திரம் பற்றி அமெரிக்க அறிக்கை என்ன சொல்கிறது?

உலக நாடுகளில் மதச் சுதந்திரத்தின் நிலையை விளக்கும் விதமாக, அமெரிக்கா “உலக மத சுதந்திரம் பற்றிய அறிக்கை 2021” என்ற ஆவணத்தை வெளியிட்டது. 1998ஆம் ஆண்டு தொடங்கியது, ஒவ்வொரு ஆண்டும் மத சுதந்திர அறிக்கையை, அமெரிக்கா வெளியிடுகிறது

ஏறக்குறைய 200 நாடுகளை உள்ளடக்கி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை வெளியிட்டு பேசிய அந்நாட்டின் secretary Antony John Blinken, மக்களின் மதச் சுதந்திரத்தை உறுதி செய்வதில், தைவான், திமோர் லெட்ஸ்ஸே (Timor-Leste), ஈராக் போன்ற நாடுகள் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக பாராட்டினார். பெரும்பான்மையான நாடுகள், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மதிக்க தவறியுள்ளதாகவும் ஒரு பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

அதில் எரித்தீரியா, சவுதி அரேபியா, சீனா, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் பெயர்கள் இருந்தன. இந்த நாடுகள் மட்டுமின்றி, உலகின் பல பகுதிகளில் மதச் சுதந்திரமும், சிறுபான்மை மதத்தினரின் மத உரிமையும் பெரும் அச்சுறுத்தலில் உள்ளதாக கூறிய அவர், இந்தியா, வியட்னாம், நைஜீரியா போன்ற நாடுகள் அந்தப் பட்டியலில் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

இந்தியா குறித்து பேசும்போது, “உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாகவும், பல்வேறுவிதமான நம்பிக்கைகளின் உறைவிடமாகவும் திகழ்கிறது என்றும், மக்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அமெரிக்க தூதர் Rashad Hussain, “இந்தியாவில் அதிகரித்துவரும், மக்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்களை, அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை அல்லது ஆதரிக்கிறார்கள்” என பேசியுள்ளார்.

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள இந்தியா, உள்நோக்கம் கொண்ட தரவுகள் மற்றும் பாரபட்சமான பார்வைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்வதைத் தவிர்க்குமாறும், இயல்பிலேயே பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், மதச் சுதந்திரத்தையும் மனித உரிமையையும் பெரிதும் மதிப்பதாகவும், அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளது.

மேலும் அமெரிக்காவுடனான சந்திப்புகளின் போதெல்லாம், அங்குள்ள நிறம் மற்றும் கலாச்சார ரீதியான தாக்குதல்கள், வெறுப்புணர்வால் நடைபெறும் குற்றங்கள் மற்றும் துப்பாக்கி வன்முறை உட்பட பல பிரச்சனைகள் குறித்து சுட்டிக்காட்டி வருவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை பதிலடி தந்தது.

இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்த நிகழ்வுகளைப் பட்டியலிடும் இந்த அறிக்கை, தமிழ்நாட்டை பற்றியும் சிலவற்றை குறிப்பிட்டு கூறியுள்ளது. அதில், 2021ஆம் ஆண்டு, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தும், ஹிந்து கடவுள்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதற்க்காக, நாகர்கோவிலைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் எனவும், தண்டிக்கப்பட்டு இருந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருக்க கூடும் எனவும் கூறியுள்ளது. ஜார்ஜ் பொன்னையாவின் கருத்துக்கு மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி கண்டனம் தெரிவித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில், அரசின் கணக்கீட்டின் படி, கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் பரவலாகவும், வடகிழக்கு மாநிலங்கள் உள்பட தமிழ்நாடு, கேரளா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் அதிகமாவும் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மதசுதந்திரம் என்ற தலைபில் தமிழகத்தை பற்றி குறிப்பிடுபோது, இந்து மதத்துக்கு எதிராக தெரிவிக்கப்படும் வெளிப்படையான கருத்துக்கள் குறித்து, அந்த அறிக்கையில் எவ்வித பதிவும் இல்லை..

– சிவமுத்து (PSJ) –

Share: