மராத்தாவை வீழ்த்திய பேஷ்வா!! நரேந்திரனின் தேவேந்திரன் – Devendra Fadnavis

– அருண் –

மோடி, அமித்ஷா, யோகி.. இவர்களைப் போலவே, சில நாட்களாக பாஜகவுக்குள் ஒருவர் Score செய்து வருகிறார். அரசியல் சாணக்யத்தனத்திற்கே பெயர்போன சரத்பவார்.. மகாராஷ்டிராவில் அடிமட்டம் வரை வேர்களை கொண்ட காங்கிரஸ்.. தனி ராஜாங்கம் நடத்திவரும் சிவசேனா.. இவை மூன்றையும் ஒரு கை பார்த்துள்ளார். சொல்லப்போனால் மகாராஷ்டிர அரசியல் களத்தையே ஒரு ஆட்டு ஆட்டியுள்ளார்.. அவர்தான் Fadnavis,.. தேவேந்திர பட்னவிஸ் (Devendra Fadnavis)..

மகாராஷ்டிராவின் நாக்பூரில் 1970 ஜூலை 22ல் Gangadhar Fadnavis – Sarita Fadnavis தம்பதிக்கு பிறந்தவர் தேவேந்திர கங்காதர்ராவ் Fadnavis. நடுத்தர மராத்தி பிராமணர்கள் என்றாலும், இவரது குடும்பமே அரசியல் பின்னணியைக் கொண்டது தான். பட்னாவிஸின் அப்பா கங்காதர், பாஜகவின் முந்தைய கால இயக்கமான பாரதிய ஜன சங்கத்தில் தீவிரமாக பணியாற்றியவர். 70களில் எமெர்ஜெண்சியை எதிர்த்து சிறைக்கும் சென்றவர்.

இங்கிருந்தே பட்னாவிஸின் அரசியல் துவங்கியது என்று சொல்லலாம். எமர்ஜென்சியை கொண்டு வந்ததால், இந்திரா காந்தியை இளம் பருவத்திலேயே கடுமையாக வெறுத்த பட்னாவிஸ், இந்திரா காந்தி என்ற பெயரைக் வைத்திருந்ததற்காக, தனது பள்ளியையே மாற்றினார். கல்வியில் எப்போதுமே முனைப்புகாட்டும் Fadnavis, நாக்பூர் பல்கலைக்கழகத்தில் LLB, Business Management-டில் முதுகலை, DSE Berlin-னில், Project Management-ல் Diploma என பட்டங்களை பெற்றார்.

சிறு வயது முதலே ஆர்எஸ்எஸ்-சில் தீவிர ஈடுபாடு கொண்டதால், கல்லூரி நாட்களில் RSS-ன் மாணவர் அமைப்பான ABVP எனும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் பணியாற்றினார். 22 வயதிலேயே கவுன்சிலர் ஆன தேவேந்திர Fadnavis, 1997ல் தனது 27வது வயதிலேயே நாக்பூர் முனிசிபல் கார்ப்பரேஷனின் மேயராகவும் ஆகி, நாட்டின் 2வது இளம் மேயர் என்ற பெயரை பெற்றார்.

நம்மூரில் பலரையும் “நாக்பூர் ஏஜெண்ட்”, “நாக்பூர் பிரதிநிதியாக செயல்படுகிறார்” என RSS முத்திரை குத்துவதற்காக விமர்சிக்கும் வழக்கம் உண்டு. உண்மையில் சொல்லப்போனால் இவரே அக்மார்க் நாக்பூர் பிரதிநிதி. நாக்பூரில் மேயரான இரண்டே வருடத்தில், 1999ல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் வென்று, நாக்பூர் MLA-வாகவும் தேர்வானார்.

கட்சிப் பொறுப்புகளில், 1989ல் வார்டு தலைவர், 1992ல் நாக்பூர் நகர தலைவர், 1994ல் மாநில பாஜக இளைஞர் அணி துணை தலைவர், 2001ல் தேசிய இளைஞர் அணி துணைத் தலைவர், 2010ல் மகாராஷ்டிர பாஜக பொதுச்செயலாளர் என, ஒவ்வொரு படிக்கட்டாக ஏறி உயர்ந்தார். மேலும், நாக்பூரில், தொடர்ந்து மூன்று முறை MLAவாக ஜெயித்தார்.

2006ல் பிரமோத் மகாஜன் (Pramod Mahajan) மறைந்த பின், கோபிநாத் முண்டே, நிதின் கட்கரி போன்ற தலைவர்களை பிரதானமாக கொண்டு இயங்கி வந்த மகாராஷ்டிர பாஜக, 2013ல் திடீர் திருப்பத்தை கண்டது. தேவேந்திர பட்னாவிஸ், பாஜகவின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கு, கோபிநாத் முண்டே – நிதின் கட்கரி இடையேயான பணிப்போர் முக்கிய காரணம். ஏற்கனவே தேசிய தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்த நிதின் கட்கரிக்கு, இன்னொரு செக் வைக்க, பட்னாவிஸை மாநில தலைவர் ஆக்கியது கோபிநாத் முண்டே தான் என்றும், இதற்காக ராஜ்நாத்-மோடி ஜோடிக்கு அவர் அழுத்தம் கொடுத்தார் என்றும் கட்சிக்குள் பேசப்பட்டது.

அதற்கேற்ப, 2014ல் நாடாளுமன்றத் தேர்தலை, கோபிநாத் முண்டே-Fadnavisஸை கொண்டே சந்தித்தார், அன்றைய குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி. சிவசேனா உடனான கூட்டணியை இறுதி செய்வது உட்பட பல வேலைகளை இந்த ஜோடியே செய்தது. இவர்களின் Coordinated effort, மோடி எனும் பிம்பம், போன்ற காரணங்களால் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி, மொத்தமுள்ள 48 இடங்களில் 41 இடங்களில் வென்றது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின், சட்டமன்ற தேர்தலை பாஜக குறிவைத்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக, நாடாளுமன்ற தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே, புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றிருந்த கோபிநாத் முண்டே, விபத்தில் சிக்கி உயிரிழந்தார். OBC முகங்களாக இருந்த கோபிநாத் முண்டே, பிரமோத் மகாஜன் ஆகியோர் இல்லாமலிருக்க, மகாராஷ்டிராவில் யாரை முன்னிலைப்படுத்துவது என்ற சந்தேகம் பாஜகவில் எழுந்தது. கூட்டணியில் இருந்த சிவசேனாவும் உடனில்லை.

மோடி தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்று பாஜக துணிந்து முடிவெடுத்தது. தேர்தலும் நடந்தது. களத்தில், நான்கு முனை போட்டி இருந்ததாலும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மீதான கோபம்; மோடி மீதான ஈர்ப்பு என சகலமும் கைகூடியதாலும், மகாராஷ்டிர அரசியலில் சிவசேனாவின் கூட்டணி கட்சியாக மட்டுமே இருந்த பாஜக, 288 தொகுதிகளில், 122-ஐ வென்று, அனைவருக்கும் ஷாக் கொடுத்தது. மராட்டிய அரசியல் வரலாற்றில் இதுவே பாஜக பெற்ற அதிக தொகுதிகள்.

ஆனாலும் ஆட்சி அமைக்க போதுமான பலம் இல்லை. முதலில் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தர வந்தது. இதனால் பதறிப்போன சிவசேனா, தனது வீம்பை விட்டுவிட்டு, பாஜகவை பெரிய அண்ணனாக ஏற்று, கூட்டணி ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டது. முதல்வராக யாரை ஆக்குவது என்ற கேள்வி எழுந்தது. நிதின் கட்கரி பெயர் பரிசீலனையில் இருப்பதாக பேச்சு அடிபட்டது. திடீர் ட்விஸ்ட்டாக, 44 வயதே ஆன தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக அறிவிக்கப்பட்டார். இது, நிதின் கட்கரிக்கு, மோடி-அமித்ஷா ஜோடி வைத்த செக் என்று ஒருதரப்பும், பாஜகவின் அடுத்த தலைமுறையை மோடி-ஷா ஜோடி வளர்க்கிறது என்று ஒருதரப்பும் பேசின.

முதல்வரான தேவேந்திர பட்னாவிஸுக்கு, கட்சிக்குள் தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வந்தது. பிரமோத் மகாஜன், கோபிநாத் முண்டே என OBC தலைவர்களால் மாநிலத்தில் கட்சி வளர்ந்த நிலையில், ஒரு பிராமணர், முதல்வரா? என அதிருப்தி குரல்கள் எழுந்தன. குறிப்பாக, கோபிநாத் முண்டேவின் மூத்த மகள் பங்கஜா முண்டேவும், ஏக்னாத் கட்ஸேவும் பட்னாவிஸுக்கு எதிராக காய்களை நகர்த்தினர். இதை எடுத்தோம் கவிழ்த்தோமென பொதுவெளியில் எதிர்கொள்ளாத Fadnavis, புறவாசல் மூலம் பேசி தீர்க்க முயற்சித்தார். ஆனால் அவர்கள் இறங்கிவர மறுத்தனர்.

அதிர்ஷ்ட காற்று பட்னாவிஸ் பக்கம் வீச, ஏக்னாத் கட்ஸே, பங்கஜா முண்டே உள்ளிட்டோர் மீது ஊழல் புகார்கள் வந்தன. இதை சரியாக பயன்படுத்திய பட்னாவிஸ், ஏக்னாத் கட்ஸேவை மட்டும் அமைச்சரவையில் இருந்து நீக்கினார். பங்கஜா முண்டே மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எச்சரிக்கையோடு நிறுத்திக்கொள்ளப்பட்டது. தன்னை அச்சுறுத்தியவர்களை ஒடுக்க, Fadnavisஸே உருவாக்கியது தான் இந்த ஊழல் புகார்கள் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

கட்சிக்குள் அதிருப்திகளை அடக்கிய பட்னாவிஸ், ஆட்சியில் கவனம் செலுத்தினார். தன்னை மோடி போன்ற “வளர்ச்சியின் நாயகனாக” முன்னிறுத்தினார். புனே, நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டங்கள், நாக்பூர்-மும்பை விரைவுச்சாலை, அந்நிய முதலீடுகளை ஈர்ப்பது, விவசாயிகளுக்கு SMART என்ற பிரத்யேக திட்டம் என வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளில் கவனம் செலுத்தினார். இவரது ஆட்சியில், வளர்ச்சி குறியீடுகளில் மகாராஷ்டிரா முன்னிலை வகித்தது.

ஆனால் தங்களை, ஒரு பேஷ்வாவான பட்னாவிஸ் ஆள்வதை மராத்தாக்கள் ரசிக்கவில்லை. இட ஒதுக்கீடு உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இப்போராட்டங்கள் தீவிரமாகவே, அவர்களை அமைதிப்படுத்த, socially and educational backward community act எனும் சட்டத்தின் கீழ், மராத்தா இட ஒதுக்கீடு கொடுத்தார். அதேபோல வறட்சி, விவசாயிகள் போராட்டம், அண்ணா ஹசாரேவின் திடீர் போராட்ட அறிவிப்பு போன்றவற்றையும் லாவகமாக எதிர்கொண்டு, ஒரு சிறந்த நிர்வாகியாக Fadnavis வேகமாக முன்னேறினார்.

ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது, கூட்டணி அமைப்பதில் மீண்டும் சிக்கல் வந்தது. தனக்கு அதிக தொகுதிகளும், அடுத்து நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சியில் சரி பாதி பங்கும் வேண்டும் என்று சிவசேனா முரண்டு பிடித்தது. சிவசேனாவுக்கு அவ்வளவு விட்டுக் கொடுக்க பட்னாவிஸுக்கு மனமில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதாக வேண்டும் என்ற கட்டாயத்தால், அமித் ஷா ஒப்புக்கொண்டார். பின் Fadnavisஸையும் வற்புறுத்தினார்.

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் 50க்கு 50க்கு என்றும், ஆட்சியில் சரி பாதி பங்கு கொடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டு, கூட்டணி அமைக்கப்பட்டது. தேர்தலில் கூட்டணியும் அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 48 இடங்களில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 41 இடங்களில் வென்றது. மத்திய அமைச்சரவையிலும் சிவசேனா சார்பில் Arvind Sawant இடம்பெற்றார்.

சில மாதங்கள் கழிந்த பின், சட்டமன்றத் தேர்தல் வந்தது. கடந்த முறை போல் அல்லாமல் இந்த முறை மோடி-பட்னாவிஸ் என தேர்தலை சந்திக்க பாஜக முடிவு செய்தது. “பாரதத்திற்கு நரேந்திரன்; மராட்டியத்திற்கு தேவேந்திரன்” என பிரச்சாரம் செய்யப்பட்டது. Fadnavis, ஓடி ஓடி பிரச்சாரம் செய்தார். மோடியும், எந்த ஒரு சங்கடமும் கொள்ளாமல் Fadnavisஸை முன்னிலைப்படுத்தினார். இதற்கு பலனாக, தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வென்றது. பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வென்றது.

அனைத்தும் கைகூடி ஆட்சி அமைக்க முயற்சிகள் நடந்தபோது, சிவசேனா மீண்டும் முருங்கை மரம் ஏறியது. ஆட்சியில் சரி பாதி பங்கு என்பதை, 2.5 ஆண்டுகளுக்கு தங்களுக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என கேட்டு, முரண்டு பிடித்தது. இதை பாஜக ஏற்க மறுத்ததால், பல நாட்கள் இழுபறி நீடித்தது. திடீர் ட்விஸ்டாக, ஒரு நாள் அதிகாலையில் தேசியவாத காங்கிரஸின் அஜித்பவாருடன் கைகோர்த்த தேவேந்திர பட்னாவிஸ், ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவர் துணை முதல்வராகவும் சத்தம் காட்டாமல் பதவி ஏற்றனர். ஆனால் அஜித் பவருடன் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இல்லாததால், ஆட்சி கவிழ்ந்தது. அரசியல் சாணக்யரான சரத் பவார் முயற்சியால், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் சேர்ந்து, மகா விகாஸ் அகாடி எனும் கூட்டணி அமைத்தது. யாரும் எதிர்பாராத வகையில், முதல்வராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றார்.

இங்கு தான் துவங்கியது யுத்தம். அது பாஜகவிற்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையேயான யுத்தம் அல்ல. பவார் எனும் மராத்தாவுக்கும் பட்னாவிஸ் எனும் பேஷ்வாவுக்கும் இடையேயான யுத்தம்….

இது, இருவருக்கும் இடையேயான கௌரவ யுத்தமாக பார்க்கப்பட்டது. ஆட்சியை நீடித்து வைத்திருக்க சரத்பவாரும், எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என பட்னாவிஸூம் கங்கணம் கட்டி வேலை செய்தனர். இதனால், மகா விகாஸ் அகாடி கூட்டணியின் ஆட்சி, நித்ய கண்டம் பூரண ஆயுசு என்று, தினமும் ஒரு பிரச்சனையுடன் இயங்கி வந்தது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்பூட் மரணம், சாதுக்கள் கொலை, நடிகை கங்கனா ரணாவத் வீடு இடிப்பு, பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி கைது, பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் விவகாரத்தில் கைது என, தொடர்ந்து பிரச்சனைக்கு மேல் பிரச்சனை, பழிக்கு மேல் பழி வந்தது.

சிசுபாலனின் கடைசி தவறு போல, மசூதி ஒலிபெருக்கி – ஹனுமன் சாலிசா விவகாரம் உத்தவ் அரசுக்கு பெருத்த தலைவலியை கொடுத்தது. இதில் தேவேந்திர பட்னாவிஸ் இறங்கி களமாடினார். போதாத குறைக்கு தேவேந்திர பட்னாவிஸுடன், உத்தவ் தாக்கரேவின் உறவினரும், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் தலைவருமான ராஜ் தாக்கரேவும் கைகோர்த்தார். இது, இந்துத்துவக் கொள்கையில் இருந்து சிவசேனா வெளியேறிவிட்டது என்ற பிம்பத்தை உருவாக்கியது. அவ்வளவு ஏன், இது பால் தாக்கரேவின் சிவசேனா இல்லை, சோனியா காந்திக்கு அடிபணிந்த “சோனியா சேனா” என்றும் சிலர் காட்டமாக விமர்சித்தனர்.

இப்படி மகா விகாஸ் அகாடி அரசுக்கு எதிரான அதிருப்தி அதிகரிக்கவே, சிவசேனா MLAக்களுக்கு, கூட்டணி மீது அவநம்பிக்கை எழந்தது. மீண்டும் பாஜகவுடன் கைகோர்க்க வேண்டும் என சிலர் நேரடியாகவே வலியுறுத்தினர். இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட Fadnavis, வரிசையாக கோல் போட முடிவு செய்தார். முதலில் ராஜ்யசபா தேர்தலில் கூடுதலாக வேட்பாளரை நிறுத்தி, அவரை வெற்றி அடைய வைத்த அவர், அடுத்த சில நாட்களில் நடந்த MLC எனும் சட்ட மேலவை தேர்தலிலும் கூடுதல் வேட்பாளரை நிறுத்தி, வெற்றி பெற வைத்தார். இவை இரண்டிற்கும், அதிகளவிலான சிவசேனா எம்எல்ஏக்கள், கட்சி மாறி பாஜகவிற்கு வாக்களித்ததே காரணம்.

வெற்றியில் கழிப்படையாத Fadnavis, தனது பிரம்மாஸ்திரத்தை எடுக்க முடிவு செய்தார். அதுதான் ஆட்சி கவிழ்ப்பு. இதற்கு ஒப்புதல் வாங்க, டெல்லி சென்று கட்சி தலைமயை சந்தித்தார். தேவேந்திர Fadnavisஸின் Sketch-ல் திருப்தி கொண்ட கட்சி தலைமை, அவரது திட்டத்திற்கு கண்ணசைத்தது. அவர் மும்பை திரும்புவதற்கு முன்பே, சிவசேனாவின் சில எம்எல்ஏக்களுடன் சிவசேனா சட்டமன்ற கட்சித் தலைவர் ஏக்னாத் ஷிண்டே, குஜராத்தின் சூரத்தில் முகாமிட்டார். அங்கு அவருக்கு குஜராத் பாஜக சகல வசதிகளையும் ஏற்படுத்தி தந்தது.

சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கவே, சுயேட்சை எம்எல்ஏக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அசாம் தலைநகர் கௌஹாத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஏக்னாத் ஷிண்டே பக்கம், 38 சிவசேனா எம்எல்ஏக்கள், 8 சுயேச்சை எம்எல்ஏக்கள் வந்தனர். இதனால், ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. இரண்டு எம்.பிகளும் தாவினர். பின் ஆட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை, அதிருப்தி எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றனர். உடனே ஆளுநரை சந்தித்த பட்னாவிஸ், நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். பின் நடந்தவை நமக்கு தெரியும்.

மராத்தாவுக்கு எதிரான போரில் ஒருவழியாக பேஷ்வா வென்றார், என்றே பேசப்பட்டது. ஆனால் இதிலும் ட்விஸ்ட் என்னவென்றால், முதல்வராக ஏக்னாத் ஷிண்டே பதவியேற்றது தான். அதிக MLAக்கள் இருந்தபோதும் சில ராஜதந்திர காரணங்களுக்காகவும், கட்சி அறிவுறுத்தலாலும் பட்னாவிஸ் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தார். நவீனகால அரசியல் ராஜதந்திரங்களில், துரோகம் மட்டுமல்ல, தியாகமும் முக்கியம் தான் என்பதை, Fadnavis நன்கு புரிந்துள்ளார்.

இந்த நாக்பூர் பிரதிநிதியின், கட்சிக்கான தியாகமும் அரசியல் சாதூர்யமும் நாக்பூர் வழிகாட்டிகளாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டிருக்கும்… இந்த முறை நாற்காலி தவறியிருக்கலாம்.. ஆனால், வரும் காலங்களில் பெரிய நாற்காலி கூட கிடைக்கலாம்.. நரேந்திரன் வழியில் தேவேந்திரனா….? காலமே பதில் சொல்லும்.

Share: