ரயில்வே பாதுகாப்பு படை உருவான நாள் இன்று…

ரயில், நடைமேடையிலிருந்து மெல்ல நகர தொடங்கியது. திடீரென ஒரு பெண், எங்கிருந்தோ ஓடி வந்து ரயில் பெட்டியில் ஏற முற்பட்டார். நிலை தடுமாறி விழுந்து, தண்டவாளத்துக்கும் ரயிலுக்கும் நடுவில் சிக்கிவிட்டார். மக்கள் கூச்சலிட்டனர். அவர், சாகப் போகிறோம் என நினைத்த தருணம், ஒரே வீச்சில் அவரை நடைமேடையை நோக்கி தள்ளியது பிரதீப் குமாரின் கரம்.
பிரதீப் குமார், ரயில்வே பாதுகாப்பு படையில் பணிபுரியும் காவலர். அந்த பெண், தன் வாழ்நாள் முழுவதும் அந்த கரத்தினை மறக்க போவதில்லை.
இது, நேற்று முன்தினம் சேலத்தில் நடந்த சம்பவம். இச்சம்பவம் இப்பொழுது வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதே போல நாம் அனைவரும் நன்கு அறிந்த மற்றொரு சம்பவம்… கோவிட் காலங்களில், ஒரு கையில் துப்பாக்கியை ஏந்திக்கொண்டு மறுகையில், 4 மாத குழந்தைக்காக,ஓடும் ரயிலை துரத்தி, பால் வாங்கி கொடுத்த கான்ஸ்டபிள் இந்தர் சிங்கின் செயல். அத்தகைய மனிதாபிமானம் மறக்க முடியாதது. இவரும் ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த காவலர் தான்.
இப்படி, தன் இன்னுயிரை கருதாமல் பிற உயிர்களையும், உடைமைகளையும் ரயில்வே பாதுகாப்பு படையினர் காப்பாற்றி வருகின்றனர்.
நம்முடைய ரயில் பயணங்களில், நாம் நிம்மதியாக தூங்குவதற்கான காரணம், எங்கோ ஒரு ரயில்வே பாதுகாப்பு படை காவலர் விழித்திருப்பதால் தான்.
இத்தகைய ரயில்வே பாதுகாப்பு படை, இந்திய அரசின் ஒரு துணை ராணுவ படையாகும். மக்களோடு இயைந்து அன்றாடம் செயல்படும் ஒரு ராணுவம் இதுவே. இப்படை இந்திய அரசாணை படி 1957 வருடம் ரயில்வேயின் சொத்துக்களையும் பயணங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய உருவாக்க பட்டது. தோற்றுவிக்கப் பட்ட நாள் முதல் இப்படை ஒவ்வொரு நாளும் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. கடந்த ஒரு ஆண்டில், இப்படையினர் 1,15,000 புகார்களை பதிவு செய்துள்ளனர். தென்னக ரயில்வே சுமார் 33,533 வழக்குகளை பதிவு செய்துள்ளது. 7000 ரயில்வே திருட்டுகளை தடுத்துள்ளனர் . மேலும் 10,000திற்கும் மேற்பட்ட காணாமல் போன குழந்தைக்களை பெற்றோரிடமும், அரசின் குழந்தைகள் காப்பகத்திலும் சேர்த்துள்ளனர் அப்பொழுது அப்பெற்றோரின் கண்களில் ஒளிரும் நன்றி உணர்வை வார்த்தைகளால் வருணிக்க இயலாது.
இவர்களின் வேலை, பல பரிமாணங்களைக் கொண்டது . இவர்கள், படிகளில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு ஆசிரியனாகவும், கடத்தல் காரர்களுக்கு ஒரு அசுரனாகவும், முதியோர், பெண்கள், குழந்தைகளுக்கு ஒரு பாதுகாவலணாகவும், பயணிகளுக்கு ஒரு நண்பனாகவும், புதிய திருட்டுகளான சைபர் கிரைம் போன்றவைகளை கண்டறியும் ஆர்வம் உள்ளவர்களாகவும் பல பணிகளை புரிகின்றனர்.
மகாகவி பாரதியின் வரிகளின் படி
நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய் இவர்கள் பயணிகளுக்கு திகழ்கின்றனர்.
இவ்வளவு இருப்பினும் இப்படையின் பணிகளை பற்றிய போதுமான விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. மக்களோடே அன்றாடம் இயங்கும் இவர்களை பற்றிய புரிதல் மக்களுக்கு இருந்தால், மேலும் பல ரயில் குற்றங்களை தவிர்க்க முடியும். ரயில் நிலையங்களில் ஆங்காங்கே தென்படும் இவர்கள், மக்களுக்கும் ரயில்வே நிர்வாகத்திற்கும் இடையே ஒரு பாலமாக விளங்குகிறார்கள்.
ரயில்வே பாதுகாப்பு படை உருவான நாள் இன்று.
Saurav Kumar IRPFS
&
சித்ரா தியாகராஜன் IRAS

Share: