ஸனாதனமே இந்நாட்டின் ஆணிவேர்…

ஸனாதனமே இந்நாட்டின் ஆணிவேர் ..
மண் வாசனையும் ஸனாதனம் மட்டுமே ..!!
 
கடந்த ஜூன் 11 அன்று சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் சார்பாக , ஹரிவராசனம் நூற்றாண்டு விழா குழு அறிவிப்பு கூட்டத்தை நடத்தினோம். உள்ளரங்கில் நடைபெற்ற அந்நிகழ்வில் அய்யப்ப பக்தர்களையும், மற்ற ஹிந்து ஆன்மீக, கலாசார அமைப்பினை சேர்ந்த பல்வேறு சான்றோர்களையும் அழைத்திருந்தோம். திருவிதாம்கூர் தேவஸ்வம் போரடு தலைவர், பந்தளம் அரண்மனையின் நிர்வாக உறுப்பினர், தந்திரி, துறவியர் போன்ற பலபேர் கலந்து கொண்ட அக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென, தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களையும், தெலங்கானா மாநில ஆளுநர் திருமதி.தமிழிசை சௌந்திரராஜன் அவர்களையும் முறைப்படி அழைப்பு விடுத்து கேட்டுக் கொண்டோம். அவர்களும் மனமுவந்து ஒத்துக்கொண்டு இந்நிகழ்வில் பங்கு பெற்று, தங்களது கருத்துக்களை பக்தர்கள் மற்றும் ஆன்மீக செம்மல்கள் முன்னிலையில் வெளிப்படுத்தினார்கள். அறம் சார்ந்த வாழ்வு, மனிதர்களை உய்விக்க வல்லது. அத்தகைய ஒரு பயிற்சியினை அளிப்பது தான் சபரிமலை விரதம். அது மிகவும் சிறந்தது. ஸனாதன தர்மம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்நாட்டின் ஒருமைப்பாட்டின் காவலனாக இருக்கிறது. இந்நாட்டின் கலாசார உயர்வும், வாழ்க்கை முறையும் ஸனாதன தர்மத்தின் நன்கொடையே. வேறு நாட்டினை போன்று அரசர்களாலோ ஒரு சில மத தலைவர்களாலோ திணிக்கப்பட்ட கருத்தாக இல்லாமல், பல்லாயிரக் கணக்கு ஆண்டுகள் வாழ்ந்து அனுபவப்பட்டதன் அடிப்படையில் அமைந்ததே ஸனாதனம் என ஆளுநர் ரவி அவர்கள் பெருமிதம் கொண்டார்.
 
ஆன்மீக கூட்டத்தில் கலந்து கொண்டு திரு ஆர்.என்.ரவி ஆற்றிய உரையில் ஸனாதனம் என குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி, ஏற்கனவே மனம் குழம்பி விட்ட சில பேர்கள் அதை கண்டித்து அறிக்கை விட்டிருப்பதை கண்டோம். குறிப்பாக திமுக-வை சேர்ந்த டி.ஆர்.பாலு, விடுதலை சிறுத்தை என்ற கட்சிக்காரர் திருமாவளவன், பல்வேறு காட்சிகளில் பணியாற்றி அனுபவம் வாய்ந்த வை.கோ, மற்றும் முஸ்லீம் அமைப்பினை சேர்ந்த ஒருவர் போன்றவர்கள் இப்படி கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர்களுடைய கண்டன அறிக்கையிலேயே அவர்களுடைய அறியாமை புலப்பட்டு விடுகின்றது. எனினும், இந்த கூட்டத்தினை ஏற்பாடு செய்தவர்கள் என்ற முறையில் இவர்களது கண்டனத்தை எதிர்ப்பதுடன் சில உண்மைகளையும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது எங்கள் கடமை என்ற உணர்வினால் மட்டுமே இந்த அறிக்கையை 10 அம்சங்களாக வெளியிடுகின்றோம்.
 
1. இந்த நாட்டின் பெயர் பாரதம் அல்லது இந்தியா. ஜாதிமத வேறுபாடின்றி இந்நாட்டில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர்கள் கடைபிடிக்கும் பழக்கம் அல்லது கலாச்சாரம் தான் ஸனாதனம் அல்லது ஹிந்துத்வம். இந்த சொல் எந்த ஒரு மதத்தையோ ஜாதியையோ பிரிவினையோ குறிப்பதாக அமையவில்லை. அது இந்த நாட்டின் வாழ்க்கை முறையை குறிக்கும் சொல். இது நானோ, ஆளுநர் திரு. ஆர்.என்.ரவியோ கூறவில்லை. நமது நாட்டின் உச்சநீதிமன்றமே தெள்ளத்தெளிவாக கூறியுள்ளது. இந்த விஷயம் கணடன அறிக்கை வெளியிட்டு இருப்பவர்களுக்கு தெரியுமா?
 
2. அறம், ஸனாதனம் போன்ற சொற்களை எதிர்ப்பவர்கள் திருக்குறள் படித்ததுண்டா? அதை ஏற்றுக் கொள்கின்றார்களா அல்லது அதையும் கண்டிக்கிறார்களா? அறம்,பொருள்,இன்பம், வீடு என்பது ஸனாதனதர்ம கருத்தல்லவா ? தர்ம, அர்த்த, காம, மோக்ஷம், என்பதன் தமிழாக்கம் தான் இந்த நன்கு சொற்கள் என்பது கண்டித்தவர்களுக்கு தெரியுமா?
 
3. இந்த கருத்துக்களை மஹாபாரதத்தில் பீஷ்மர் மற்றவர்களுக்கு போதிப்பதாக வருகின்றது. திருக்குறள் இயற்றுவதற்கு முன் இயற்றப்பட்ட மஹாபாரதத்தில் கூறியுள்ளதை தான், நான்கு பிரிவாக பிரித்து தமிழ் மொழியில் திருவள்ளுவர் வழங்கியுள்ளார். அப்படியில்லை என்று கண்டனக்காரர்களால் நிரூபிக்க முடியுமா ?
 
4. ஸனாதனம் என்ற சொல்லின் பொருள் தெரிந்து கொள்ள வேண்டாமா? ஸனாதனம் என்றால் மிக மிக தொன்மையானது எனினும் என்றைக்கும் புதுமையானது என்பதே.(சிர புராதனம் நித்ய நூதனம்.)
 
5. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட மஹாபாரதத்தில் ஸனாதனம் என்ற சொல் உள்ளது. அத்துடன் 18 புராணங்களில் ஒன்றான சிவ புராணத்திலும் ஸநாதன தர்மம் பற்றி கூறுகின்றது. ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் சிவபெருமான் தன்னையே ஸனாதனம் என்கிறார். சங்க தமிழ் புறநானூற்றில் மஹாபாரத போரில் பங்கு பெற்றவர்களுக்கு சேர மன்னன் உணவு அளித்ததால் அவரை பெருஞ்சோறு வள்ளல் என புகழ்ந்து பாடுகின்றார் புலவர். ( அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ, நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை ஈர் ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய் .- புறநானூறு.)
 
6. ஆக, சங்கத்தமிழ் இயற்றப்பட்ட காலமாக கி.மு.300 என்பதை ஏற்றுக் கொள்ளும்பொழுது அதற்கும் முன் இயற்றப்பட்டது தான் மஹாபாரதம் என்று புரிந்து கொள்ள முடியும். ஸனாதனம் என்ற வார்த்தை அப்பொழுதே பயன்படுத்தி வந்துள்ளது என்பதையும், உலகரங்கில் பல மதங்களும் தோன்றுவதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் ஸனாதனம் இருந்திருக்கிறது என்பதையும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். ‘நான் காட்டுவதே ஸனாதனம்’ (அறம்) என சிவபுராணத்தில், சிவபெருமான் கூறியதை, திருக்குறளில் தெள்ளத் தெளிவாக நமக்கு கூறுகின்றார் திருவள்ளுவர். உதாரணத்திற்க்காக வெறும் நான்கு குறள்களை மட்டும் குறிப்பிடுகின்றோம்:
 
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற” = ஒருவன் தனது மனதில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அது தான் அறம் (ஸனாதனம்). மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
 
“அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம்.” = பொறாமை, ஆசை, சினம், கடும்சொல்,ஆகிய இந்த நான்கு வகை குற்றங்களுக்கும் இடம் அளிக்காமல், அவற்றை கடித்து ஒழுகுவதே அறம் ஆகும்.
 
“வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்.” = ஒருவன் ஆறாம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும். (அவனுக்கு அறம் மோட்சம் அளிக்கும் என பொருள்.).
 
“சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு.” = அறம் சிறப்பை அளிக்கும். செல்வத்தையும் அளிக்கும். ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை வீட்டா நன்மையானது வேறு யாது?
 
இப்படி திருக்குறளை பார்த்தோமானாலும் சரி, அவ்வையாரை எடுத்துக் கொண்டானாலும் சரி, தமிழ் இலக்கியங்களை எடுத்துக்கொண்டாலும் சரி, அத்தனையும் அறம் அல்லது ஸனாதனத்தை வலியுறுத்துவதை காண முடியும்.
 
இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் எத்தனை காலம் தான் இந்த மக்களை வார்த்தை ஜாலங்களால் ஏமாற்றிக் கொண்டிருப்பீர்கள் கண்டனக்காரர்களே ..?
 
7. அந்த ஸநாதன தர்மத்தை பற்றி சபரிமலை அய்யப்ப பக்தர்களின் கூட்டத்தில் பேசாமல், வேறெங்கே சவுதி அரேபியாவிற்கு சென்றா பேச முடியும்?. ஆளுநர்கள் கலந்து கொண்ட கூட்டமானது, அரசு சம்பந்தமான விழா இல்லை. அரசியல் கூட்டமும் இல்லை. சட்டமன்றமோ ஆளுநர் மாளிகையோ கிடையாது. முற்றிலும் ஆன்மீகம் சம்பந்தமான ஒரு கூட்டம். அங்கு ஆன்மீகம் சம்பந்தப்படுத்தி பேசாமல், அரசியலையா பேச முடியுமா? ஆளுநர் ரவி அவர்களின் பேச்சை முழுவதுமாக இவர்கள் கேட்க வேண்டும். இறையாண்மைக்கு எதிராகவோ, வகுப்பு கலவரங்கள் உருவாக்கும் விதமாகவோ, வன்முறையை தூண்டும் விதமாகவோ அதில் எதுவுமே குறிப்பிடவில்லை. ஸநாதன தர்மத்தின் வலிமையை பற்றி பேசிய ஆளுநர், அரசன் அன்று கொலவான், தெய்வம் நின்று கொல்லும் என்ற சொல்லிற்கேற்ப, அறவழியில் பயணிக்க பக்தர்களை வலியுறுத்துவதற்காக, அன்னிய படையெடுப்பாளன் கஜினி முகம்மது, சோம்நாத் கோவிலை திரும்ப திரும்ப கொள்ளை அடித்ததையும், அப்படி திருடி சென்ற தெய்வ சொத்து, இன்றைக்கு இழந்து விட்டதையும் பற்றி குறிப்பிட்டார். அது வரலாற்று உண்மை தானே ? அதிலென்ன தவறு உள்ளது ? ஒரு தாய் தன் குழந்தைக்கு சோறு ஊட்டும் பொழுது, குழந்தை சாப்பிட மறுத்தால் பூதம் வரும் என மிரட்டுவதை வன்முறை என்று எடுத்துக் கொள்ள முடியுமானால், இதையும் வன்முறை என்று வைத்துக் கொள்ளுங்கள்.
 
8. நாயன்மார்களும் ஆழ்வார்களும் வாழ்ந்த தமிழகம் இது. சூடிக் கொடுத்த ஆண்டாளும், வடலூர் வள்ளலும் போதனை செய்த அறம் எதுவோ அதுவே ஸனாதனம். ஆக, அந்த ஸனாதனம் பற்றி கற்றுணர்ந்து பேசுவதே சிறப்பு. காளை பெற்றதாக யாராவது கூறினால் உடனடியாக கயிறு எடுப்பது டி.ஆர்.பாலு போன்ற தலைவர்கள் செய்யலாமா? பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்தவர், பகுத்தறிவை பங்கு போட்டு விற்று விட்டாரா? எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற குறளுக்கேற்ப, கண்டனத்திற்கு முன் அதை பற்றி பகுத்தாய்வு செய்ய வேண்டாமா?
 
9. வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த பொழுது, திரு.எஸ்.குருமூர்த்தி அவருடைய முயற்சியில், கோவை கொடீசியா வளாகத்தில் மாபெரும் தொழில் முனைவோர்கள் கூட்டமும் கண்காட்சியும் நடைபெற்று இருந்தது. அந்த கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய் கலந்து கொண்டு தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடினர், பிறகு அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும் பேசினார். இரண்டிலுமே மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு பங்கு பெற்றிருந்தார். அப்பொழுது வாஜ்பாய் அவர்களின் உரையிலும் சுதேசி கொள்கை,ஸநாதன தர்மம் போன்றவை உள்ளடங்கி இருந்தது. அன்றைக்கு ஸனாதனம் என்ற வார்த்தை கேட்டபொழுது சீறியெழாத டி.ஆர்.பாலு, இப்பொழுது மட்டும் குரலெழுப்புவது ஏன் ? பதவி சுகத்தில் சீறியெழ மறந்து விட்டாரா? அல்லது பத்து ஓட்டுக்காக இப்பொழுது கத்துகின்றாரா?
 
10. ஆகவே, தேவையற்ற சர்ச்சைகளை கிளப்பி மக்களை ஏமாற்றுவது இந்த கண்டன நாயகர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு துணிவு இருந்தால் ஸனாதனம் பற்றி ஒரு விவாதம் வையுங்கள். அதில் நாங்களும் பேச வருகின்றோம். யாருடைய கருத்துக்கள் சரியானது என மக்களே தீர்ப்பளிக்கட்டும். யாராவது சொல்வதை கேட்டு புரளி மூட்டைகளை அவிழ்த்துக் கொண்டிருந்தால், அதை சகித்துக் கொண்டிருக்கின்ற மனப்பான்மையில் தமிழக மக்கள் இன்றில்லை என்பதை புரிந்து கொண்டால் நல்லது.
 
ஸனாதனமே இந்நாட்டின் ஆணிவேர் ..மண் வாசனையும் ஸனாதனம் மட்டுமே .. என்பதை தெளிவுபடுத்துகின்றேன்
 
ஈரோடு என் ராஜன்.

Share: