ஹிஜாப்! ஈரானில் வேறு கதை…

பல ஒழுக்கம் நிறைந்த கட்டுப்பாடுகள் கொண்ட ஈரானில் பெண்கள், சிறு குழந்தைகள் என அனைவரும் வீதியில் போராடி வருகின்றனர், இதற்கு காரணம் ஹிஜாப்!

ஆம் அதே ஹிஜாப், ஆனால் ஈரானில் வேறு கதை…

ஈரானில் கடுமையான ஆடை கட்டுப்பாட்டை அமல்படுத்தும் ஒழுக்க கண்காணிப்பு காவலர்களால் கைது செய்யப்பட்ட இளம் பெண், காவலில் மரணம் அடைந்தவுடன், நாட்டு மக்களின் வெகுநாள் கோபம் தீவிர போராட்டங்களாக மாறியது.

ஈரானின் ஆடை விதி…

இஸ்லாமிய குடியரசில், பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் மற்றும் இறுக்கமான ஆடைகள், முழங்கால்களை வெளிகாட்டும் ஆடைகள் மற்றும் பளிச் நிற ஆடைகளுக்கு தடை உள்ளது. மேலும் இது ஈரானில் நீண்ட காலமாக எதிரும் புதிருமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

முஸ்லிம் சமூகத்தில் முக்காடு இடுவது எப்போதுமே, சமூகப் பொருளாதாரம் மற்றும் வரலாற்று சூழலை பெரிதும் சார்ந்துள்ளது.

ஈரானை நவீனமயமாக்கும் முயற்சியில், முதல் பாஹ்லாவி ஷா 1936ல், முக்காடு இடுவதை தடை செய்யும் ஆணையை வெளியிட்டார். ஆனால், அவர் பதவியில் இருந்து விலகிய சில ஆண்டுகளில், அவரின் இளைய மகன் முஹம்மத் ரேசா பாஹ்லாவி பதவி ஏற்றார். உடனே அந்த அரசாணையை ரத்து செய்தார்.

வருடங்கள் போகப் போக முகமது ரேசாவும், அவரது தந்தை போல, மேற்கத்திய கலாச்சாரத்தையும் மதச்சார்பற்ற நிலைபாட்டையும் மேற்கொண்டார். இதற்கு பல எதிர்ப்புகளும் வெளிவந்தன.

1970களில் முடியாட்சிக்கு எதிரான செயல்பாடுகள் வலுப்பெற்று பெண்கள், அரசின் நிலைப்பாட்டை எதிர்ப்பதாகக் கருதி, ஹிஜாபை ஏற்றுக்கொண்டனர். ஆனால் இந்த முடிவு, பிற்காலத்தில் அவர்களுக்கே எதிராக முடிந்தது! 1979இல் இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு, அரசின் ஹிஜாப் திணிப்பிற்கு கடுமையான எதிர்ப்பும் கிளம்பியது.

முடியாட்சி முடிந்த அடுத்த வாரங்களிலேயே ஈரான் அதிகாரிகள் வெளியிட்ட, பெண்களின் ஆடை மீதான விதிமுறை குறிப்புகள் பொதுவெளியில் வர தொடங்கியது. பல இடங்களில் பெரிய போராட்டங்களும் வெடித்தன. பெண்கள், “சுதந்திரத்தின் வெளிச்சத்தில் சுதந்திரம் இல்லை” என்று முழக்கமிட்டனர்.

இதுபோன்ற பல எதிர்ப்புகளையும் தாண்டி, புரட்சிக்குப் பிந்தைய காலத்தில், ஹிஜாப் கட்டாய அம்சமாக மாறியது. முதலில் அரசு பலத்தாலும், பிறகு சட்டத்தாலும் ஹிஜாபை நடைமுறைப்படுத்தினர். இன்று ஈரானில் சிறிய ஆடை மீறல்களுக்கே அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

மே 2018ல் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மட்டும் 35க்கும் மேற்பட்ட பெண் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்கும் பெண்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாட்டிலும் ஹிஜாப் வெவ்வேறு அரசியல் பார்வையில் இருந்து வருகிறது. பல ஐரோப்பிய நாடுகள் ஹிஜாப், புர்கா போன்ற ஆடைகளை அரசு பள்ளிகள், சுகாதார மையங்கள் மற்றும் பொது போக்குவரத்துகளில் பயன்படுத்த தடை விதித்துள்ளன. தற்போது இந்தியாவிலும் ஹிஜாப் ஒரு பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

ஆரம்ப காலத்தில் ஈரானில் ஹிஜாப் அவரவர் விருப்பத்திற்கு தான் இருந்தது. பணக்காரர்கள், நகரத்தில் வாழ்பவர்கள் பெரிதாக ஹிஜாப் அணியவில்லை. ஏழைகள் மற்றும் கிராமங்களில்  வாழ்பவர்கள் தான்  ஹிஜாப் அணிந்து வந்தனர். கடுமையான சட்டங்களுக்கு பிறகு தான் அங்கு அனைவரும் அணிய தொடங்கினார்கள்.

மீண்டும் அங்கு ஹிஜாப் எதிர்ப்பு அலை வீசத் தொடங்கியுள்ளது. வெறுங்காற்றா? புயலா? யார் பக்கம் வீசும்? யாருக்கு சேதம்? கொஞ்ச நாளில் தெரியும்.

– Subha Lakshmi Pazhani

Share: