காஞ்சி நகர் புலவர் உரை
காசினியில் கேட்கும் முறை

– Chitraa Thiyagarajan IRAS –

ஒரு பெரியவரை காசியில் சந்தித்தேன். தள்ளாத வயதில் நடக்க முடியாமல் நடந்து வந்தார். ஆனாலும், அவர் கையில் சிறு மூட்டை ஒன்றை வைத்திருந்தார். அது என்ன என்று கேட்கையில், ராமேசுவரத்தில் இருந்து கொண்டு வந்த மண் என்றார். மேலும், தன்னுடைய கடைசிக் காலத்தைக் காசியில் கழிக்கப் போவதாகவும் கூறினார். ராமேசுவரத்தின் மண்ணும், கங்கையின் நீரும் இணை பிரியாதவை.

சங்க இலக்கியங்களில் கங்கை என்ற சொல், நற்றிணை, அகநானூறு, பெரும்பாணாற்றுப்படை முதலான எட்டு நூல்களில் காணப்படுகிறது. “கங்கை வாரியும் காவிரிப் பயனும்” என்கிற அடிகள், கங்கையிலும் காவிரியிலும் விளைந்த பொருட்களைக் காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்திலுருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதைக் குறிப்பிடுகிறது.

அப்படியே, தமிழ்நாட்டின் பல இடங்களில் காசி விஸ்வநாதர் கோயிலும், பல சிவன் கோவில்களில் காசி விஸ்வநாதர் ஸன்னதியும் அமைந்து இருப்பதைக் காணலாம். இதற்கும் மேலாக, தென்காசி, சிவகாசி போன்ற ஊர்கள், காசியின் மரபை ஒட்டியே பெயரிடப்பட்டுள்ளன.

பராக்கிரம பாண்டியன் என்னும் மன்னன், காசியில் இருந்து சிவ லிங்கத்தைக் கொண்டு வந்தான். ஒரு இடத்தில் பசு நகர மறுத்தது. இறைவனின் ஆணை எனக் கருதி, அங்கேயே பெரிய கோயில் நிறுவப்பட்டுச் சிவகாசி உருவானது எனப் புராணங்கள் கூறுகின்றன.

மேலும்,
கெடுதல் செய்வோர் காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாது;
காசி வாசி கண்ணைக் குத்தக் காஞ்சியிலிருந்து கை நீட்டிப்போனானாம்;
காசிக்குப் போனாலும் கட்கத்தில் மூட்டையா…
போன்ற பல பழமொழிகள், தமிழர்களிடையே வழக்கத்தில் உள்ளன. இவ்வாறு ஊர்களின் பெயர்களாலும் , பழமொழிகளாலும் காசி என்னும் சொல், தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

தமிழ் மன்னர் பலருக்கும் கங்கைக்கும்- காசிக்கும் – இமய மலைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்கிற பெயர், அதற்குச் சான்றாகும். அதைப் போலவே சேரன் செங்குட்டுவன் கண்ணகியின் வரலாற்றைக் குன்றக் குறவர்களின் மூலம் கேட்ட பின் , அவனும் அவன் மனைவியும் இமயமலையில் இருந்து கல் கொண்டு வந்து கங்கையில் நீராட்டி கோயில் கட்டினர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. நம்முடைய பழமையான தொடர்புக்கு இதுவும் ஒரு சான்றாகும்.

மேலும், கங்கை பாயும் கலிங்க நாட்டை வெற்றி கொண்ட ராசேந்திர சோழனுக்குக் கங்கை கொண்டான் என்ற பட்டப் பெயர் வழங்கப்பட்டதை, எசாலம் செப்பேடுகள் கூறுகின்றன. ராசேந்திர சோழன், கடல் கடந்து கடாரத்தை வென்றான். கடாரம் கொண்டான் என்ற பெயரை விட கங்கை கொண்டான் என்பதையே அவன் விரும்பினான் என்பதற்கு, அவன் உருவாக்கிய கங்கை கொண்ட சோழபுரம், காலத்தால் அழியாத சான்றாகும். இதன் மூலம், அக்காலத்தில் கங்கைச் சமவெளியின் வனப்பையும், தமிழகத்துடனான இணைப்பையும் அறிய முடிகிறது.

ஆழ்வார்கள் சென்று வழிபட்ட நைமிசாரண்யம், தேவப்பிரயாகை, பத்ரிநாத் போன்றவை, கங்கைக் கரையை ஒட்டிய திவ்யதேசங்கள். தமிழ்நாட்டில் இருந்து நடைபயணமாக ஆழ்வார்கள் இமயம் வரை சென்றுள்ளனர். சைவர்களுக்கு எவ்வாறு காசி புனிதத் தலமோ, அதே போல வைணவர்களுக்கு இத்தலங்கள் முக்கியமானவை.

அவ்வாறே காசியில் உள்ள விசாலாட்சி அம்மன் கோவில், இன்றளவும் தமிழர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த கோவிலின் குடமுழுக்குக் கல்வெட்டுகள், தமிழிலேயே காணப்படுகின்றன. இக்கோயில், ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட சக்தி வழிபாட்டுக்கு இன்றிமையாத சக்தி பீடமும் கூட.

மேலும், தமிழர்களின் பல சைவ மடங்களான திருப்பனந்தாள் திருமடம், திருவாவடுதுறை திருமடம், காஞ்சி காமகோடி திருமடம் , நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் போன்றவை, 200 ஆண்டுகளுக்கும் மேலாகக் காசியில் நிறுவப்பட்டு, அன்றாடம் வரும் பயணிகளுக்கு உதவி செய்து வருகின்றன. அவற்றுள் நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகம், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு உச்சி காலம் மற்றும் அர்த்தஜாம பூஜை கட்டளையினைப் பல வருடங்களாகச் செய்து வருகிறது. மேலும், காசி விஸ்வநாதர் கோவிலின் அருகே உள்ள தமிழர்களின் அன்ன சத்திரம், தினமும் நூற்றுக்கணக்கான ஏழை யாத்திரிகளுக்குத் தமிழ் உண(ர்)வு அளிக்கிறது.

திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி போன்ற நம்பிக்கை, தமிழர்களிடையே வேரூன்றியுள்ள ஒன்றாகும். முன்னே சொன்ன முதியவர், காசியில் இறக்க விரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தினமும் சராசரியாக 80 சடலங்கள் காசியில் எரிக்கப்படுகின்றன. மணிகர்ணிகா காட் என்னும் பகுதியில் வருடம் முழுவதும் எந்நேரமும் பிணங்கள் எரிந்துகொண்டே இருக்கும் என்று காசி மக்கள் கூறுகின்றனர்

இன்றும், மூதாதையர்களுக்கு ஈமக்கடன்களைத் மிழர்கள் காசிக்குச் சென்று செய்கின்றனர்.

மகாகவி பாரதியார், முத்துசுவாமி தீட்சிதர் போன்ற தமிழ் அறிஞர் பலர் காசியில் தங்கி இருந்தனர். அக்காலங்களில் காசி, கல்வி போதிக்கும் ஒரு கலைக்களஞ்சியமாகவும் இருந்தது. மகாகவியின் கனவான
“காசி நகர்ப் புலவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் ” என்பது நம் பாரதப் பிரதமரின் ஊக்கத்தாலும், தொழில்நுட்ப வசதிகளாலும் இன்று சாத்தியமாகி உள்ளது.

அவை மட்டுமல்லாமல், தீபாவளி அன்று காலையில் தமிழர்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்துவதில், கங்கைக் குளியல் முடிந்ததா? என்று கேட்கும் பழக்கம், பல தமிழ்க் குடும்பங்களில் இன்றும் உள்ளது.

நம்முடைய உணவிலும் கூட காசி அல்வா முக்கிய இடத்தைப் பெறுகிறது.

திருமணச் சடங்குகளில் , மருமகன் காசி யாத்திரை செல்லும் வழக்கம் பல தமிழ் இனத்தவரிடையே ‘காணப்படுகிறது.

தமிழர் இல்லங்களில் ஒருவர் மரணிக்கும் தருவாயில் அவர்களுக்குக் கங்கை நீர் கொடுக்கும் வழக்கம் தொடர்ந்து வழக்கில் உள்ளது. இவ்வாறு தமிழரின் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளிலும் கங்கையுடன் ஒரு தொடர்பு இருந்துகொண்டே வருகிறது.

வடக்கும் தெற்கும் இன்று நேற்றல்ல பல்லாயிரம் ஆண்டுகளாக நட்பு பாராட்டி வந்துள்ளன. போக்குவரத்துச் சாதனங்கள் இல்லாத நேரங்களில் கூட நம் முன்னோர், தீர்த்த யாத்திரைக்காகவும் தொழில் வர்த்தக முறை ரீதியாகவும் வடநாட்டிற்குப் பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். இன்றும் பல வெளி மாநிலத்தவர் தமிழ் நாட்டிற்கு வேலை தேடி வருகின்றனர். தமிழ் நாட்டு மக்களும் அவ்வாறே. இந்த பண்பாட்டுப் பரிமாற்றம் நம்மில் சகோதரத்துவதை வளர்க்கிறது.

ஏனெனில் இந்தியா என்பது எல்லையாலும், பண்பாட்டாலும் மட்டுமல்ல; உள்ளத்தாலும் ஒன்றுபட்டது.

Share: