ஏழை, கிராமப்புற மாணவர்களை வஞ்சித்து, தனியார் மருத்துவ கல்லூரிகள் பல நூறு கோடிகளை அள்ளிக்குவிக்க அனுமதித்த தமிழக அரசு.

நீட் தேர்வினால் தான் மருத்துவ படிப்புக்காக நமது மாணவர்கள் உக்ரைன் செல்கிறார்கள் என்று புதிதாக ஒரு பூதத்தை கிளப்பி விடுகிறார்கள், கல்வி கொள்ளையர்களுக்கு துணை போகும் நீட் எதிர்ப்பாளர்கள். உக்ரைனில் படிக்க வேண்டுமானாலும் நீட் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்பது கூட தெரியாமல் இது போன்ற கருத்துகளை சொல்வது, அவர்களின் அறியாமையை அல்லது அரசியல் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், “உக்ரைன் போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவ கல்வி கற்க போனார்கள் என்று தர்க்கம் செய்ய இது நேரமல்ல” என்று கூறி விட்டு, “உள்நாட்டில் மருத்துவ கல்லூரி கற்க தடையாக இருக்கும் நீட் தேர்வினை செய்வது உடனடி இலக்காக அமைய வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

 

 

இந்தியாவில் தற்போதுள்ள 90,675 எம்பிபிஎஸ் இடங்களுக்கு 15 லட்சத்திற்கும் அதிகமானோர் நீட் தேர்வை எழுதினர். 2014ல் இந்தியா முழுவதும் மொத்தம் 51,348 இடங்களே இருந்தன. அதாவது பாஜக ஆட்சியில், கடந்த 7 வருடங்களில் 40,000 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2014ல் நாட்டில் மொத்த மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை 387, தற்போதுள்ள எண்ணிக்கை 595.

50 வருடங்களுக்கும் மேல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு செய்ய முடியாததை பாஜக அரசு ஏழே வருடங்களில் கட்டமைத்துள்ளது.

தனியார் கல்லூரிகளில், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், அரசு ஒதுக்கீட்டில் அனுமதி பெறும் மாணவர்கள் கூட, குறைந்தது ஒவ்வொரு வருடமும் கட்டணமாக ரூபாய் 4 லட்சமும், நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் ரூபாய் 60 லட்சம் முதல் ரூபாய் ஒரு கோடி வரை நிர்வாக இடங்களுக்கு செலுத்த வேண்டியுள்ள நிலையிலும், ரஷ்யா, உக்ரைன், ஃபிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான், கசகஸ்தான் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள மருத்துவ கல்லூரிகள், நம் நாட்டிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களை விட குறைவான கட்டணத்தை வசூலிப்பதாலேயே, வேறு வழியில்லாது வெளிநாடுகளுக்கு செல்கின்றனர் நம் மாணவர்கள்.

கடந்த மாதம் 3ம் தேதி தேசிய மருத்துவ ஆணையமானது, தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் 50 விழுக்காடு இடங்களை அந்தந்த மாநில அரசுகள் வசூலிக்கும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 13,610 மட்டுமே வசூலிக்க வேண்டும்.

ஆனால் தமிழக அரசு, இந்த வருடம் பிப்ரவரி 15ம் தேதி கலந்தாய்வு என்று அறிவித்துவிட்டு, நான்கு நாட்களுக்கு முன்னாலேயே அவசரமாக நடத்தி, மறுநாளே மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தியதற்கு காரணம் என்ன? தேசிய மருத்துவ ஆணைய குறிப்பாணையின் அறிவுறுத்தலின் அடிப்படையில், தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் கல்லூரிகளும் 50 விழுக்காடு மாணவர்களிடம் ஆண்டுக்கு ரூபாய்.13610 மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என ஏன் உத்தரவிடவில்லை?

தேசிய மருத்துவ ஆணையத்தின் குறிப்பாணையை தமிழக அரசு ஏற்று நடைமுறைப்படுத்தியிருந்தால், இந்த ஆண்டு தமிழக தனியார் கல்லூரிகளில் உள்ள 1300 அரசு ஒதுக்கீட்டு மாணவர்களிடம் ரூபாய் 13,610 வீதம் 1 கோடியே, 76 லட்சத்து, 93 ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டிருக்கும். ஆனால், தமிழக அரசின் மெத்தனத்தால் அல்லது தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவான போக்கால் அதே இடங்களுக்கு ரூபாய் 52 கோடி கட்டணமாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதாவது மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்தியிருந்தால், இந்த மாணவர்களிடமிருந்து ஐந்து வருடங்களில் ரூபாய் 8 கோடியே, 84 லட்சத்து 65 ஆயிரம் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டிருக்கும். ஆனால், தமிழக அரசின் இந்த தனியார் கல்லூரிகளுக்கான ஆதரவு நிலைப்பாட்டால், அதே மாணவர்களிடமிருந்து ஐந்து வருடங்களில் ரூபாய் 260 கோடி வசூலிக்கப்படும்.

அதே போல், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள மொத்த இடங்கள் 1600ல் 50 விழுக்காடான 800 இடங்களுக்கு ரூபாய்.13,610 வீதம் ரூபாய்.1 கோடியே 8 லட்சத்து, 88 ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலித்திருக்க வேண்டும். மாறாக ஏழை,கிராம புற மாணவர்களுக்கு எதிரான தமிழக அரசின் நிலைப்பாட்டால், அதே நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் இந்த மாணவர்களிடமிருந்து ரூபாய் 184 கோடியை வசூலிக்கும். அதாவது மத்திய அரசின் உத்தரவுப்படி, 800 மாணவர்கள் ஐந்து வருடங்களில் 5 கோடியே, 44 லட்சத்து 40 ஆயிரம் மட்டுமே செலுத்த வேண்டிய நிலையில், அதே மாணவர்கள் 920 கோடியை செலுத்த போகிறார்கள் என்பது கசப்பான அதிர்ச்சியளிக்கும் உண்மை.

உண்மை நிலை இவ்வாறிருக்க, நீட் தேர்வால் தான் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிக்கிறார்கள் என்ற, உண்மைக்கு புறம்பான கருத்தை விதைப்பது, ஏழை கிராமப்புற மாணவர்களை வஞ்சிப்பதோடு, தனியார் கல்லூரிகளுக்கும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கும் ஆதரவாக செயல்படுவதாகும். .

தமிழக மாணவர்கள் மீது அக்கறையிருக்குமானால், சமூக நீதியை காப்பதாக சொல்வதில் உண்மையிருக்குமானால், நீட் தேர்வின் மீது பழிபோடும் போக்கை கைவிட்டு, தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி தனியார் மருத்துவ கல்லூரிகளின் கட்டணத்தை குறைக்க தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.

– நாராயணன் திருப்பதி –
செய்தி தொடர்பாளர், பாஜக.

Share:

Leave a Reply

Your email address will not be published.