ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல், பாஜகவிற்கு எளிதாக இருக்காது என்று, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கடந்த வாரம் சூடு கிளப்பிய நிலையில், எல்லோரும் ஜனாதிபதி தேர்தலுக்குத் தேவையான ஓட்டுக்களை கணக்குப் போடத் தொடங்கினர்.

சமீபத்தில்  உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவாவில் பாஜக பெற்ற அமோக வெற்றி, குடியரசுத் தலைவர் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகள், ஆளும் பாஜகவின் ராஜ்யசபா இடத்தை வலுப்படுத்துவதுடன், இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான இடத்திலும் கட்சியை வைத்துள்ளது.

இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது குறித்த விவாதங்கள் தொடங்கியுள்ள நிலையில், இந்திய குடியரசு தலைவரை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் என்று பார்க்கலாம்..

இந்தத் தேர்தல் சற்று வித்தியாசமானது. குடியரசுத் தலைவர் வாக்காளர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த வாக்காளர் குழுமத்தில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் (MP), மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) அடங்குவார். அதாவது மொத்தம் 776 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், 4120 சட்டமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கியது.

சாதாரணமாக, நாம் வாக்களிக்கும் தேர்தல்களில் ஒரு நபருக்கு ஒரு ஓட்டு தான் மதிப்பு. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் ஒரு வாக்காளரின் மதிப்பு, மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். பொதுவான கணக்கில் ஒரு எம்.பியின் வாக்கு மதிப்பு 708 ஆகும். அதுவே  எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு, மாநில மக்கள் தொகையை வைத்து அமையும். மாநிலங்களுக்கு இடையில் ஒரே மாதிரியான தன்மை நிலவுவதற்காக இந்த செயல்முறை கடைபிடிக்கப்படுகிறது.

நாட்டிலேயே அதிக ஓட்டு மதிப்புடன் இருக்கும் மாநிலம் உத்தரப்பிரதேசம். இங்கு ஒரு எம்.எல்.ஏ வின் ஓட்டு மதிப்பு 208 ஆகும். அதேபோல் வடகிழக்கு மாநிலமான சிக்கிம் தான் குறைந்த ஓட்டு மதிப்பை வைத்துள்ளது இங்கு ஒரு எம்.எல்.ஏ வின் ஓட்டு மதிப்பு 7 ஆகும். ஒட்டுமொத்த வாக்காளர்களின் ஓட்டு மதிப்பை கணக்கிட்டு பார்த்தால் 10,98,903 வரும். இதில் பாதிக்கு மேல் பெறுபவர் தான் குடியரசுத் தலைவராக முடியும்.

2017ஆம் ஆண்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளரும் அப்போதைய பீகார் கவர்னருமான  ராம்நாத் கோவிந்த், 60 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்று, எதிர்க்கட்சி வேட்பாளரும் முன்னாள் மக்களவை சபாநாயகருமான மீரா குமாரை தோற்கடித்தார்.

இந்த முறை என்னதான் உத்தரப் பிரதேசம் 12.7 சதவீத வெயிட்டேஜை கொடுத்தாலும், குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தேவைப்படும் 50 சதவீத வாக்குகளில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி  1.2 சதவீதப் புள்ளிகள் பின்தங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், பெரும்பான்மையைப் பெறுவதற்காக பாஜக, 4% மதிப்புகளை வைத்திருக்கும் YSRCP மற்றும் 3 சதவீதத்தை வைத்திருக்கும் BJD  கட்சிகளிடமிருந்து ஆதரவு பெறலாம்.

தேர்தல் முறை:

குடியரசுத் தலைவர் சட்டம், 1952; குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் விதிகள், 1974க்கு உட்பட்டு, குடியரசுத் தலைவர் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும்.

எம்.பிக்களும் எம்.எல்.ஏக்களும், வாக்கு சீட்டு மூலம் வாக்களிப்பார்கள். ஒவ்வொரு வாக்கு சீட்டிலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பெயர்களும் இருக்கும். வாக்காளர்கள், தங்கள் விருப்பத்தை அதில் பதிவு செய்யலாம். அதாவது முதல் விருப்பத்தில் இருக்கும் வேட்பாளர்கள் பக்கத்தில் ‘1’ என்றும் இரண்டாவது விருப்பமான வேட்பாளருக்கு ‘2’ என தொடரலாம். வாக்காளர்கள் அனைத்து ஜனாதிபதி வேட்பாளருக்கும் விருப்பங்களை குறிக்கத் தேவையில்லை. தேர்தலில் பரிசீலிக்க, அவர்களின் முதல் விருப்பமே போதுமானதாகும்.

50 சதவீதத்திற்கு மேல் மதிப்பு பெறும் வேட்பாளர், குடியரசுத் தலைவர் ஆவார். குடியரசுத் தலைவருக்கான பதவி பிரமாணம் இந்திய தலைமை நீதிபதியால் நடத்தி வைக்கப்படும்.

இதனால் ஜூலை 2022 நடக்கவிருக்கும் இந்த தேர்தல், அரசியல் வட்டாரங்கள் மத்தியில் களைகட்டத் தொடங்கிவிட்டது!

– Subha Lakshmi Pazhani –

Share: