நாட்டில் கூட்டாட்சியை ஊக்குவித்துவரும், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலில் (Inter-State Council) மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அமைத்துள்ளது. இது போன்ற கட்டமைப்புகளின் நோக்கம் மத்திய- மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவது தான்!

பிரதமர் நரேந்திர மோடியை தலைவராக முன்னிறுத்தும் இந்த கவுன்சில், அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் 6 முக்கிய மத்திய அமைச்சர்களை உறுப்பினர்களாக நியமித்து, மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதிலும் கவுன்சிலின் நிரந்தர அழைப்பாளர்களாக 10 மத்திய அமைச்சர்களையும், புதிய அறிவிப்பு உள்ளடக்கியுள்ளது.

மேலும் ஒரு தனி அறிவிப்பில், மாநிலங்களுக்கு இடையிலான நிலைக் குழுவிற்கு (Inter-State standing committee) இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தலைவராகவும் மற்ற உறுப்பினர்களாக நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர், வீரேந்திர குமார், கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் ஆந்திரப் பிரதேசம், அசாம், பீகார், குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம்  மாநிலங்களின்  முதலமைச்சர்களும் உள்ளனர்.

சர்காரியா கமிஷன் (Sarkaria commission) பரிந்துரைகளை பின்பற்றி, மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் 1990ல் அமைக்கப்பட்டது. இந்த கவுன்சிலின் வேர்கள், அரசமைப்பின் 263வது பிரிவில் உள்ளன. இது கூட்டாட்சி பிரச்சினைகளை சமாளிக்க, இந்திய ஜனாதிபதியை இத்தகைய கவுன்சிலை அமைக்க பரிந்துரைக்கிறது.

இதை அமைப்பதற்கு அரசமைப்புச் சட்டம் சொல்லும் முதல் காரணம், “மாநிலங்களுக்கு இடையே எழும் சர்ச்சைகளை விசாரித்து ஆலோசனை வழங்குவது” போன்ற சூழல் வரும்போது இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், வேறு பல காரணங்களில் பொதுவான நலன்களை பற்றி விவாதிப்பது, கொள்கைகளை ஒருங்கிணைப்பது போன்றவையும் அடங்குகின்றன.

1972இல் அரசமைப்பின் 7வது திருத்தத்திற்கு பிறகு நுழைந்த 258 மற்றும் 258A கூட, மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்கு இடமளிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

பொதுவாக மாநிலங்களுக்கு இடையிலான நிலைக்குழு, ஆலோசனை மற்றும் செயல்முறை விஷயங்களை கொண்டிருக்கும். மேலும் மத்திய – மாநில அரசின் உறவை நிலைநாட்டும். தேவைப்பட்டால், குறிப்பிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்களை நிலைக்குழு அழைத்து கருத்துக்களை பெறலாம்.

அதனால் மத்திய -மாநில அரசுக்கு இடையே நிலுவையில் உள்ள மற்றும் வளர்ந்துவரும் அனைத்து பிரச்சனைகளையும் மண்டல கவுன்சில்கள் (Zonal council) மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் மூலம் பரிசீலிக்கவும், பரிந்துரைகளை செயல்படுத்துவதை கண்காணிக்கவும் இந்த புதிய மாற்றங்கள் உதவும்.

– Subha Lakshmi Pazhani –

Share: