PM CARESயை சுற்றும் விமர்சனங்கள் உண்மையா? பொய்யா?!

கொரோனா தொற்று பல நாட்டை அச்சுறுத்தியபோது, யாருமே இதற்குத் தயாராக இல்லை; குறிப்பாக அதிக மக்கள் தொகை, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கிராமப்புறங்கள் என பல சவால்கள் நிறைந்த இந்தியாவில், எல்லா தடைகளையும் தகர்த்தெறிந்து இன்று 195.35 கோடி தடுப்பு ஊசியை செலுத்தி, நாட்டு மக்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளது மத்திய அரசு. ஆனால் இந்த அவசர காலகட்டத்தில் எடுத்த மத்திய அரசின் பல முடிவுகளை, இன்னும் சிலர் விமர்சித்து வருகின்றனர். அதில் முக்கியமானது: PM CARES  நிதி. மார்ச் 28, 2020 அன்று பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரணம் என அழைக்கப்படும் PM CARES நிதி, கோவிட்-19ன் துயரச் சூழ்நிலையை சமாளிப்பதற்காக, பிரதமர் மோடியால் அறக்கட்டளையாக துவக்கப்பட்டது. ஆனால் PM CARES தொடங்கிய நாள் முதல் இன்றுவரை அதை எதிர்க்கட்சியினர் விமர்சித்துக்கொண்டே தான் வந்துள்ளனர். PM CARES நிதியின் வெளிப்படைத் தன்மையையும், ஏற்கனவே 1948ல் ஜவஹர்லால்  நேருவால் அமைக்கப்பட்ட பிரதமரின் தேசிய நிவாரண நிதியின்  (PMNRF) தன்மையையும் பாராளுமன்றத்தின் எல்லா அமர்வுகளிலும் விவாதித்தும் உள்ளனர். அப்படி எதிர்க்கட்சிகள் தினசரி விமர்சிப்பதற்கு PM CARES நிதி அமைப்பில் என்ன தான் சிக்கல் உள்ளது ?! PM CARES நிதி இதன் நோக்கம் கோவிட்-19 தொற்றை கையாள்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு இயக்கப்பட்டது. இந்த புதிய நிதிக்கு மக்கள் அளித்த ஆதரவு அளப்பரியது. வெறும் ஐந்து நாட்களில் 3,076 கோடி ரூபாய் சேர்ந்தது. எதிர்பார்த்தபடியே விமர்சனங்களும் வர ஆரம்பித்தன. சிலர் இந்த நிதியை பிரதம மந்திரியின் தனிப்பட்ட திட்டம் என்று அழைத்தனர். எதிர்க்கட்சிகள் இது ஒருவித மோசடி என்றும், ஏற்கனவே ஜவகர்லால் நேருவால் உருவாக்கப்பட்ட PMNRF நிதியை ஏன் பயன்படுத்தவில்லை என்றும், PM CARES உருவாக்கப்பட்ட  முதல் நாளிலிருந்தே ஆடிட் செய்யப்படவேண்டும் என்றும் அவர்களது விருப்பு வெறுப்புகளை கொட்டித் தீர்த்தனர். முதலில், நேருவால் தொடங்கப்பட்ட PMNRF இன் அமைப்பு, தேக்கமான நிதி கட்டமைப்பை கொண்டுள்ளது. பெரும்பாலான நிதி, நிரந்தர பத்திரங்களாகவும் பல்வேறு வங்கிகளில்  பிணை பத்திரங்களாகவும் சிக்கி உள்ளது. வெறும் 15% நிதி மட்டுமே ரொக்கமாக (liquid cash) இருந்தது. அதனால் நாட்டையே ஸ்தம்பிக்க வைத்த கொரோனாவிற்கு எதிரான போருக்கு ரொக்கம் இருந்தால் மட்டுமே நிதியை விரைவாகவும், திறமையாகவும் பயன்படுத்த முடியும். இன்னும் சொல்லப்போனால் அந்தக் கட்டாயத்தில் இந்தியா இருந்தது. PM CARES தொடர்பான இரண்டாவது குற்றச்சாட்டில், இது சிஏஜி-யால் (CAG) ஆடிட் செய்யப்படவில்லை என சொல்லப்பட்டது. ஏற்கனவே இருந்த PMNRFம் சிஏஜி-யால் ஆடிட் செய்யப்படவில்லை. ஆனால், அது அன்றைய காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுவே PM CARES நிதியில் ஒரு குற்றச்சாட்டாக பார்க்கின்றனர். மேலும், நேருவால் தொடங்கப்பட்ட PMNRFஇல் மற்றொரு சிக்கல் என்னவென்றால், பொதுமக்களால் வழங்கப்பட்ட இந்த நிதிக்கு, அரசியல் கட்சியான காங்கிரசும் ஒரு நிர்வாகியாக உள்ளது! PMNRF நிதி அமைப்புடன் ஒப்பிடுகையில் மோடியால் தொடங்கப்பட்ட PM CARES, ஒரு பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனம் ஆகும். பட்டயக் கணக்காளர் சட்டத்தின்கீழ், உரிமை பெற்ற ஆடிட்டர்களால் கணக்குகள், முறையாக ஆடிட் செய்யப்பட்டு வருகின்றன.   PMNRF மற்றும் PM CARES இரண்டுமே பொது வரையறையில் வராததால், இவை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது. அப்படி என்றால் வெளிப்படைத்தன்மை இல்லை என்று அர்த்தமா? இல்லை. PM CARES அதன் இணையதளத்தில் ரசீதுகள் மற்றும் இது தொடர்பான விபரங்களை தொடர்ந்து பதிவேற்றி வருகிறது. மேலும் ஆடிட் தரவுகளும் அதிலேயே கிடைக்கும். PM CARES பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? PM CARES துவங்கிய மூன்றாவது மாதத்திலேயே மோடி அரசு, கோவிட்-19 க்கு எதிரான போராட்டத்திற்காக திரட்டிய நிதியில் 3,100 கோடி ரூபாயை ஒதுக்க முடிவு செய்தது. அந்த 3100 கோடியில் வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்கு தோராயமாக 2000 கோடி ரூபாயும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பராமரிப்புக்காக 1000 கோடி ரூபாயும், அதிநவீன தடுப்பூசியை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிக்காக 100 கோடி ரூபாயும் பயன்படுத்தப்பட்டது. PM CARES நிதியின் கீழ்  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 50,000  வெண்டிலேட்டர்களை 2000 கோடி ரூபாய்க்கு வாங்கினார்கள். புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் தங்குமிட வசதிகள், உணவு ஏற்பாடுகள், மருத்துவ சிகிச்சைகள் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் போன்ற நிவாரண நடவடிக்கைகளுக்காக 1000 கோடி ரூபாயை நேரடியாக மாவட்ட ஆட்சியர்கள் மூலம் வழங்கப்பட்டது. PM CARES நிதி திரட்டிய ஓரிரு மாதத்திலேயே வருங்கால தேவையை அனுசரித்து அதிநவீன தடுப்பூசியை தயாரிப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி ஆய்வகங்கள், மருத்துவ நிறுவனங்களுக்கு ஆதரவாக 100 கோடி ரூபாயை வழங்கியது. மே 2021இல் PM CARES லிருந்து கூடுதலாக 1000 கோடி ரூபாய் ஆக்சிஜன் ஆலைங்களை நிறுவுவதற்காக ஒதுக்கப்பட்டது. தடுப்பூசி திட்டத்திற்காக முதல் கட்டத்தில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலவு, தோராயமாக 2700 கோடி ரூபாயாக இருந்தது. அதில் ஒரு பகுதியை மத்திய சுகாதார அமைச்சகத்திடம் இருந்தும், பெரும் பகுதியான 2200 கோடி ரூபாய் PM CARES நிதியில் இருந்தும் பெறப்பட்டது. 2021இல் பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா தொற்றுநோயால் பெற்றோரை அல்லது முதன்மை பராமரிப்பாளரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்க, குழந்தைகளுக்கான PM CARES திட்டத்தை தொடங்கினார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் நிதியை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி பயனாளிகளின் கணக்குகளுக்கு பணத்தை ஒப்படைக்கிறது. ஜூன் 1 ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 4,350 குழந்தைகள் PM CARES இத்திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளனர். இந்த திட்டத்தில் குழந்தைகளின் அன்றாட தேவைகளுக்காக மாதம் தோறும் 4000 ரூபாயும், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 20,000 ரூபாயும், இந்தக் குழந்தைகளின் மருத்துவ செலவுக்காக 5 லட்சம் மதிப்புள்ள தனி நபர் காப்பீட்டையும் வழங்குகிறது. மேலும் மத்திய அரசின் பள்ளிகளில் எளிதாக சேரும் வாய்ப்பையும், கல்விக்கடன் உதவிகளை பெறும் மாணவர்களின் வட்டி, PM CARES நிதி மூலம் செலுத்தப்படும் என்றும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பட்டியலிட்ட அனைத்தையும் கவனித்தால் இந்த PM CARESன் நோக்கம் முழுமையாகவும், சிறப்பாகவும் மோடி அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது. இதை மீண்டும் ஒரு விவாதப் பொருளாக்காமல் தடுக்க, CAG வளையத்துக்குள் PMCARES ஐ கொண்டு வரலாம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழும் கொண்டு வரலாம். முந்தைய ஆட்சியாளர்கள் செய்யாததை, முன்மாதிரியாக இருந்து இந்த அரசு செய்யலாமே!

 

– Subha Lakshmi Pazhani –

Share: