Story

திரு.ஜெயகுமாரின் கருத்தால், ஒற்றைத் தலைமை நோக்கி அதிமுக நகருகிறது என்ற விவாதம் தீவிரமாகிவிட்டது. வருகிற பொதுக்குழுவில் திரு.எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக உருவெடுப்பார் என்ற கருதுகோள் உருவாக்கப்படுகிறது.

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவையா என்றால், நிச்சயம் அவசியமானது. காரணம், யார் முதல்வரோ அவரே தான் கட்சிக்குத் தலைமை என்று உருவகித்துக்கொள்ளும் தொண்டர்களைப் பெற்ற கட்சி அதிமுக. ஒரு தலைமையின் கண்டிப்பான உத்தரவுகளுக்கு கீழேயே பல வருடங்கள் பயணம் செய்த கட்சி அது.

ஆகவே, வேறுபட்ட கருத்துகளைக் கொண்ட இரட்டைத் தலைமை, ஒரு பொது முடிவுக்கு வரும் நிகழ்வுகளை கண்டு, அதிமுக தொண்டர்களுக்கு ஒரு குழப்பம் உள்ளது. அதே போல, கட்சி பொறுப்பாளர்களுக்கே யார் பக்கம் நிற்பது என்ற குழப்பம், எல்லா நேரத்திலும் வருகிறது. எனவே, ஒரே செயல்படு தலைமையின் கீழே வருவது, அந்தக் கட்சியின் இயங்குமுறைக்குத் தேவையென்ற குரல், அங்கே ஒலிப்பதில் நியாயம் உள்ளது.

அதே நேரத்தில், அதிமுக இனி ஒரு தலைமையின் முற்றதிகாரத்துக்கு வரமுடியுமா என்று கேட்டால், முடியாது என்பதே எனது பதிலாக இருக்கும்.

முதலில் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். எம்ஜிஆர் எந்த இடத்திலும் Backing community அரசியல் செய்தவரல்ல. எம்ஜிஆருக்குப் பிறகு அந்த கட்சிக்குள் ஜானகி Vs ஜெயலலிதா என்ற தலைமை மோதல்தான் வந்தது. அதற்குப் பின்னாலும் சமூக அணிவகுப்புகள் இல்லை அல்லது இவ்வளவு துல்லியமாக இல்லை. பின் அங்கே நடந்த இணைவையும், தற்போது இபிஎஸ் – ஓபிஎஸ் இணைவையும் சமதட்டில் வைத்து பார்க்கக் கூடாது.

செல்வி.ஜெயலலிதா தெளிவாக Backing community அரசியல் செய்தார். அவருக்குப் பிறகு அந்தக் கட்சியில் வந்த அரசியல் சமநிலை என்பது, அந்த சமூகங்களின் அதிகார பகிர்வில் நிகழ்ந்துள்ளது. இதில் நீயா? நானா? என்று வந்தால், அது கட்சியின் இருப்பையே கேள்விக்குறியாக்கும்.

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, 1969ல் திமுகவின் சட்டவிதிகளை திருத்தி, தலைவர் பதவியைக் கொண்டு வந்தனர். பின் பொதுச் செயலாளர் – பொருளாளர் என சேர்த்து மூன்றாக, முறையே கருணாநிதி – நெடுஞ்செழியன் – எம்ஜிஆர் என பிரித்துக் கொண்டார்கள்.

கிட்டத்தட்ட இதே போலதான் அதிமுகவின் சட்ட விதிகளை மாற்றி ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவியைக் கொண்டு வந்தார்கள். இந்த அதிகார பகிர்வை கீறல் விழாமல் நகர்த்தினால் மட்டுமே அதிமுகவால் களத்தில் இருக்க முடியும்.

திரு.ஓபிஎஸ் பின்னால் முக்குலத்தோர் திரளாமல் இருக்கலாம். ஆனால் ஓபிஎஸ்ஸின் இடம் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இரண்டாவது நிலைக்குச் சென்றால், நிச்சயமாக தென்மாவட்டங்களில் அதிமுக மீதான கசப்புணர்வு உருவாகும்.

இதை அதிமுகவின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ஏற்கலாம். நிச்சயமாக அதன் வாக்காளர்கள் ஏற்க மாட்டார்கள். திருமதி.சசிகலா என்கிற துருப்புச் சீட்டை ஓபிஎஸ் எடுப்பதே, சமுதாய ரீதியாக நிர்வாகிகள் என்னோடு நாளை திரளுவார்கள் என்று காட்டத்தான். ஓபிஎஸ் தற்போது தர்மருக்கு ராஜ்யசபா சீட்டை பெற்றுக் கொடுத்ததிலேயே, அவருடைய நிலைப்பாடு என்ன என்பது தெரிந்துவிட்டது.

ஒருவேளை நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் 90% ஆதரவு எனக்கே உள்ளது என்று திரு.எடப்பாடி பழனிசாமி, ஒற்றைத் தலைமையாக ஆகுவார் என்றால், தென்மாவட்டத்தில் பாஜகவிற்கான இடம் இன்னும் பெரிதாகும் என்பதே எதார்த்தம்.

– சுந்தரராஜ சோழன் –

Share: