TTV கணிப்பு சரியாக வருமா?

TTV கணிப்பு சரியாக வருமா?

– சுந்தரராஜசோழன் –

2017 – 2019 – 2021 என மூன்று காலத்தில் தனிச்சின்னத்தில் டிடிவி போட்டியிட்டுள்ளார். 2017 இடைத்தேர்தல் பிரம்மாண்ட வெற்றி, 2019ல் 5% வாக்குகளையும், 2021 ல் 2.35% வாக்குகளையும் பெற்று நகர்ந்து வந்துள்ளார்.

2021ல் டிடிவி பின்னால் சசிகலா நிற்கவில்லை; கடிதம் கொடுத்து, திமுகவை வீழ்த்த வேண்டுமென விலகிவிட்டார். ஆனால் NDA கூட்டணி – டிடிவி – சீமான் – கமல் என திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறியது. இறுதியில் திமுக ஆட்சிக்கு வந்தது.

சமீபத்தில் டிடிவியினுடைய பேட்டிகளை பார்த்தேன். மிகத் தெளிவாக அவர் புள்ளியை அடைந்துவிட்டார். திமுக எதிர்ப்பு சக்திகள் ஒரு பொதுக்குடையின் கீழ் வராத வரை, திமுகவை வீழ்த்தும் சக்தி யாருக்கும் இந்த நிலத்தில் இல்லை என்பதாக அவர் பேசுகிறார்.

அதே போல, நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சிகள் சொல்லும் மூன்றாவது அணிகள் என்பதெல்லாம் அபத்தம். ஒன்று, மோடியை ஆதரிக்க வேண்டும் அல்லது ராகுலை ஆதரிக்க வேண்டும் என்கிறார். அதே போல மோடி மீண்டும் பிரதமராவதே சாத்தியம்; காங்கிரஸ் களத்தை இழந்துவிட்டதாகவே கணிக்கிறார்.

அடுத்தது, பாஜகவின் பின்னால் இந்துக்கள் அணிவகுக்க, நியாயமான காரணத்தை திமுக கூட்டணியே வழங்குகிறது. ‘மதச்சார்பற்ற’ என்கிற போர்வையில், திமுக கூட்டணிக் கட்சிகள் பேசுகிற இந்து வெறுப்பு பேச்சுகள், பாஜக மட்டும் தான் இந்துக்களுக்கு இருக்கும் ஒரே கட்சி என்ற நிலையை மக்களிடம் உருவாக்குவதாக கணிக்கிறார்.

திமுகவை வீழ்த்துவதற்கு எந்த சமரத்தையும் செய்துகொண்டு ஒரு பெருங்கூட்டணிக்கு வரத் தயார் என்று அழுத்தமாக பதிய வைக்கிறார்.

அதிமுக விவகாரத்தை பொறுத்தவரை, அதன் சின்னம் முடங்கிவிட்டது. அதற்கு காரணம் EPS ன் பிடிவாதம் தான் என்று சொல்கிறார். அதே போல 1989ன் வரலாற்றைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஜெயலலிதா தனிச்சின்னத்தில் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றதாலோ, அதிக தொகுதிகளை பெற்றதாலோ இரட்டை இலை மீண்டு வரவில்லை; நாங்கள் கேட்டுக்கொண்டதால் ஜானகி அம்மையார் விட்டுக்கொடுத்தார்; RMV தலைமையில் அந்த அணி இணைந்ததாலே தான் சின்னம் மீண்டது என்ற தெளிவான கருத்தை பதியவைக்கிறார்.

அதுமட்டுமல்ல, 4 வருடம் தன்னுடைய ஆட்சியை காப்பாற்றிய பாஜகவிற்கு ஒரே ஒரு தொகுதி கூட வென்று கொடுக்கக் கூடாது என்கிற நோக்கத்தில் தான் EPS செயல்படுகிறார். இது திமுகவுடனான உடன்படிக்கை போல உள்ளது என்ற கடும் விமர்சனத்தையும் வைத்திருக்கிறார்.

நான் புரிந்துகொண்ட வரை பாஜக நலனை மையப்படுத்தி, 2024 தேர்தலின் வெற்றியின் முக்கியத்துவம் குறித்து, பொறுப்போடு பேசிய முதல் தலைவர் டிடிவிதான் என்று நினைக்கிறேன். அவருடைய கணிப்புகள் எப்படிப் போகின்றன என பார்ப்போம்.

Share: