கீதா பிரஸ்சும் நேஷனல் ஹெரால்டும்....!

சாணக்யா  avatar   
சாணக்யா
கீதா பிரஸ்சும் நேஷனல் ஹெரால்டும்....!

கீதா பிரஸ்சும் நேஷனல் ஹெரால்டும்....!

- Our Special Correspondent -

கோடை விடுமுறை என்றாலே வீடுகளில் உள்ள பொருட்களை அடுக்கி ஒதுக்குவது பலரின் வழக்கமே. அதேபோல புத்தகங்களை அடுக்கி கொண்டிருக்கும் போது கையில் கிடைத்தது கீதா பதிப்பகத்தின் 'விஷ்ணு புராணம்.' அழகான வடிவில் அதே பதிப்பகத்தின் வெவ்வேறு சிறு புத்தகங்களும் இருந்தன. புத்தகங்களை அடுக்கும்போதே, 100 ஆண்டுகளை கண்டு நிற்கும் கீதா பதிப்பகத்தை கோரக்பூரில் கண்ட நெகிழ்ச்சியான ஞாபகம் வந்து சென்றது.

உத்தரபிரதேசம் கோரக்பூரில் உள்ள இந்தப் பதிப்பகத்தின் நுழைவு வாசல், பாரத கலாச்சாரத்தை வெளிக்காட்டுகிறது. தூண்கள், எல்லோரா குகையில் உள்ள சாயிலையும், கோபுரங்கள் தென்னிந்திய கோவில்களையும் பிரதிபலிக்கின்றன. சுவர்களில் எங்கு திரும்பினாலும் 'ஸ்ரீராம்' என்ற எழுத்துக்கள், யாரைப் பார்த்தாலும் 'ராம் ராம்' என்ற ஓசைகள்… உண்மையிலேயே ஒரு கோவில் தான்…!

2021க்கான 'காந்தி அமைதி பரிசு'

கீதா பதிப்பகம் ஆரம்பத்தில் கொல்கத்தாவில் ஒரு சிறிய வாடகை இடத்தில் இருந்து செயல்பட்டு, ஸ்ரீமத் பகவத் கீதை, ராமாயணம் போன்ற பாரத இதிகாசங்களை வெளியிடுவதில் கவனம் செலுத்தியது. 1923ல் பிரபல தொழிலதிபரும், நன்கொடையாளருமான ஜெயதயாள் கோயண்ட்கா ( Jayadayal Goyandka) மற்றும் ஹனுமன் பிரசாத் போடர் (Hanuman Prasad Poddar) ஆகிய இருவரும், சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860 (தற்போது மேற்குவங்க சங்கங்கள் பதிவு சட்டம் 1960) -ன் கீழ் நிர்வகிக்க தொடங்கினர்.

இருவருமே இந்து சமய நூல்களையும் பிற முக்கிய தத்துவ இலக்கியங்களையும் மக்களிடையே பரப்பும் ஒரே குறிக்கோளை வைத்திருந்தனர். வழக்கம்போல பதிப்பகம் சற்று தடுமாறியது. ஆனால், கொஞ்சம் கூட சலிக்காமல் தொடர்ந்து முயற்சித்தனர். இவர்களின் "கல்யாண்" என்ற இதழ் வெளியீடு, கீதா பதிப்பகத்தை மிகவும் பிரபலமாக்கியது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், ரவீந்திரநாத் தாகூர் போன்ற தலைவர்களும் கட்டுரைகளையும், சுதந்திர கருத்துக்களையும் பங்களித்தனர். இந்த வெளியீடுகள் இன்னும் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

கீதா பதிப்பகம் தத்துவம், புராணங்கள், யோகா, சாது, சன்னியாசிகள் மற்றும் ஆன்மீக தலைவர்களின் வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை சாமானியரும் வாங்கும் விலையில் விற்பனை செய்கிறது. இந்த அமைப்பு எல்லா காலகட்டத்திலும், சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினர்களுக்கும் சமய இலக்கியங்களை எளிதில் அணுகுவதற்காகவே அவற்றின் விலையை குறைவாகவே வைத்துள்ளனர்.

ஊடகம், பத்திரிகை என்றாலே விளம்பரதாரர்களின் ஆதரவு மிகவும் முக்கியம் ஆனால், இதுவரை ஒரு விளம்பரதாரரின் ஆதரவும் இல்லாமல் தன்னிச்சையாக இந்த நற்செயலை 100 ஆண்டுகளாக செய்து வருகின்றனர். தற்போது ஐந்து ரூபாய்க்கும் குறைவான விலையில் புத்தகங்களை வழங்கி வருகிறது.

கீதா பிரஸ் 3500 க்கும் மேற்பட்ட கையெழுத்து பிரதிகளை இன்னும் பொக்கிஷமாக வைத்துள்ளது. அதில் பகவத் கீதையின் 100க்கும் அதிகமான விளக்க உரைகளும் அடங்கும். மேலும் ஸ்ரீமத் பகவத் கீதை, ராமாயணம், உபநிஷதங்கள், துளசிதாசின் புகழ்பெற்ற படைப்புகள், புராணங்கள் என ஹிந்து சமயம் சார்ந்த எல்லா நூல்களையும் 14 மொழிகளில் அச்சிட்டுள்ளது. இதுவரை மொத்தம் 92 கோடிகளுக்கும் அதிகமான புத்தகங்களை அச்சிட்டு உள்ளது.

இந்தியாவிற்கே சொந்தமான ரயில் யாத்திரீயர்களின் புத்தக மோகம், கீதா பதிப்பகத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்தியது. பல ரயில் பயணிகளின் எதார்த்த நண்பரானது கீதா பிரஸ்சின் புத்தகங்கள்.

இப்படி பாரதம், அமைதி, ஆன்மீகம், சமுதாய உணர்வு என பல அடிப்படைகளை வைத்து உருவாக்கப்பட்ட இந்த அமைப்பிற்கு கடந்த மாதம் 2021க்கான 'காந்தி அமைதி பரிசு' இந்திய அரசால், சற்று தாமதமாகவே வழங்கப்பட்டது. நன்கொடைகள் வாங்கும் முறை இல்லாததால் அந்த பரிசு தொகையான ரூபாய் 1 கோடியை கீதா பதிப்பகம் வாங்க மறுத்தது.

எதிர்பார்த்தபடியே எதிர்கட்சிகள் இதை விடவில்லை, விருது அறிவித்த உடனேயே இதை அரசியல் ஆக்கினர்! இந்த அமைப்பையும் கோட்சே உடனே இணைத்து விமர்சித்து தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்… கீதா பதிப்பகம் National Herald அல்ல என்பதை எதிர்க்கட்சியினர் மறந்துவிட்டனர் போல...!

No comments found