பிரிட்டன் நாடாளுமன்றத்தைக் கலக்கும் இந்தியர்கள்
-கிருத்திகா செந்தில் (PSJ)
இங்கிலாந்தில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவந்த நிலையில், ஜூன் 4ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 650 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. இந்தத் தேர்தலில் பிரதமர் ரிஷிசுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியும், எதிர்க்கட்சித் தலைவர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சியும், லிபரல் டெமாக்ரடிக் கட்சியும் மோதின. சுமார் 4.6 கோடி பேர், வாக்குச் சீட்டு முறையில் வாக்களித்த தேர்தல் நிறைவடைந்த பின்னர், ஜூன் 5ஆம் நடந்த வாக்கு எண்ணிக்கையில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்றது.
கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி 412 இடங்களையும், பிரதமர் ரிஷிசுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களையும், லிபரல் டெமாக்ரடிக் கட்சி 71 இடங்களையும் பிடித்தது. 2018ல் பதிவு செய்யப்பட்ட BREXIT கட்சியான சீர்திருத்தக் கட்சிக்கு 4 எம்.பி.க்கள் கிடைத்துள்ளனர். அந்த கட்சியின் தலைவர் நைஜல் பரேஜ், முதல் முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மொத்தமுள்ள 650 இடங்களில் பெரும்பான்மை பெற 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் 412 இடங்களில் வென்ற தொழிலாளர் கட்சி, சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனில் மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது. தொழிலாளர் கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் அதிகாரப்பூர்வமாக பிரிட்டன் பிரதமராக அறிவிக்கப்பட்டு அவர் ஆட்சி அமைக்க மன்னர் சார்லஸ் அழைப்பு விடுத்தார். பிரிட்டன் பிரதமராக, தனது முதல் உரையையும் ஸ்டார்மர் நிகழ்த்தினார்.
2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இங்கிலாந்தின் மக்கள்தொகையில் இந்தியர்கள் சுமார் 19 லட்சம் பேர். இங்கிலாந்து மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 3 சதவிகிதம் இருந்தபோதிலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்களிப்பை அவர்கள் வழங்குகிறார்கள். இது அவர்களின் கணிசமான பொருளாதார மற்றும் செல்வாக்குமிக்க அரசியல் தடயத்தைக் காட்டுகிறது. அதனாலேயே இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கு, தொடர்ந்து கவனம் பெறுகிறது.
2024 பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில், 107 பிரிட்டிஷ் -இந்திய வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த முறை ரிஷி சுனக்கின் மந்திரி சபையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 எம்பிக்கள் இருந்த நிலையில், தற்போது இதுவரை இல்லாத அளவாக 26 பேர் வெற்றி பெற்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்க்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். கன்சர்வேட்டிவ் கட்சியைவிட தொழிலாளர் கட்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிகம் வெற்றி பெற்றுள்ளனர்.
ரிச்மாண்ட் மற்றும் நார்தலர்டன் தொகுதியில் ரிஷி சுனக் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் கன்சர்வேட்டிவ் கட்சியில் ரிஷி சுனக்கின் மந்திரி சபையில் இடம்பெற்றிருந்த கிளாரி கவுடின்ஹோ (கோவா) மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர்கள் சுவெல்லா பிராவர்மேன், பிரீத்தி பட்டேல், ககன் மொகிந்திரா, ஷிவானி ராஜா ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.
தொழிலாளர் கட்சி சார்பில் பெல்தாம் மற்றும் ஹெஸ்டன் தொகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீமா மல்ஹோத்ராவும், வால்சால் மற்றும் ப்ளாக்ஸ்விச் தொகுதியில் வலேரி வாஸும், விகான் தொகுதியில் லிசா நந்தியும், ஸ்லோ தொகுதியில் தன்மன்ஜீத் சிங் தேசியும் , வேல் ஆப் கிளாமோர்கன் தொகுதியில் கனிஷ்கா நாராயணனும் வெற்றி பெற்றனர். நதியா விட்டோம், நவேந்து மிஸ்ரா, ப்ரீத் கவுர் கில், பேகி ஷங்கர், சாத்வீர் கவுர் மற்றும் சோனியா குமார் போன்ற குறிப்பிடத்தக்க பொறுப்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதே போல் லிபரல் டெமாக்ராட்ஸ் கட்சி சார்பில் களமிறங்கிய இந்திய வம்சாவளியை சேர்ந்த முனிரா வில்சன் தனது ட்விகன்ஹாம் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றார்.
18 சீக்கிய எம்பிக்கள் உள்ள கணிசமான பஞ்சாபி புலம்பெயர்ந்தோர் வசிக்கும் கனடாவுக்கு அடுத்தபடியாக, 12 சீக்கிய எம்பிக்களுடன் இங்கிலாந்து இப்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து தேர்தலில் ஈழத் தமிழர்களும் கணிசமான அளவில் போட்டியிட்டனர். இதில் ஈழத் தமிழ்ப் பெண் உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார். இவரது குடும்பம் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போருக்குப் பின்னர் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது. தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ்ப் பெண் உமா குமரன், லண்டன் ஸ்டராட்போர்டு தொகுதியில் வெற்றி பெற்றார்.
29 முக்கிய இந்து அமைப்புகளின் கூட்டணி, “இந்து அறிக்கை (Manifesto) UK 2024” வெளியிட்டது. இது இந்து விரோத வெறுப்பு குற்றங்களை அங்கீகரிக்கவும் மற்றும் பிற முக்கிய பிரச்சினைகளுக்கு, சமமான பிரதிநிதித்துவத்தைக் கோரவும் அழைப்பு விடுத்தது. கல்வி சீர்திருத்தம் மற்றொரு முன்னுரிமையாகும்.. குறிப்பாக பள்ளிகளில் இந்து மதத்தைக் கற்பிப்பது பற்றியது. தற்போதைய அணுகுமுறைகள், பெரும்பாலும் தவறான எண்ணங்களுக்கும் கொடுமைப்படுத்துதலுக்கும் வழிவகுக்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்து மதக் கல்வியின் தரம் மற்றும் இந்து மாணவர்களின் மீதான அதன் தாக்கம் பற்றிய கவலைகளை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன், கல்வி அமைப்புகளில் நம்பிக்கை, துல்லியமான மற்றும் மரியாதைக்குரிய பாடத்திட்ட உள்ளடக்கத்திற்கு, எம்பிக்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
கீர் ஸ்டார்மர் தலைமையின் கீழ் லேபர் கட்சி, இந்திய சமூகத்துடனான தனது உறவை மீண்டும் கட்டியெழுப்பவும், ஈடுபாட்டை அதிகரிக்கவும், அதிக இந்திய வம்சாவளி வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. "பிரிட்டனில் இந்து விரோதத்திற்கு முற்றிலும் இடமில்லை" என்று தனது முந்தைய செய்தியை அவர் மீண்டும் வலியுறுத்தினார். இந்திய வம்சாவளி மக்களின் பொருளாதார மற்றும் சுகாதார மேம்பாடுகள் தற்போது முன்னணியில் உள்ளன. பிரிட்டிஷ்-இந்தியர்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் வகையில் தொழிலாளர் கட்சி செயல்படும் எனவும் அறிவித்துள்ளார்.
முந்தைய ஆட்சி காலங்களில் தொழிலாளர் கட்சி இந்தியாவுடனும் பிரிட்டிஷ் இந்தியர்களுடனும் நல்லுறவில் இல்லை. முன்னாள் தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெர்மி கார்பின் தலைமை, காஷ்மீர் இயக்கத்திற்கு ஆதரவளித்தது. கீர் ஸ்டார்மரின் கீழ் தொழிலாளர் கட்சி, அதன் வெளியுறவுக் கொள்கை அணுகுமுறையை சரி செய்து வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கிலாந்து-இந்தியா வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் இருதரப்பு முதலீட்டை வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றனர். அதனால் இந்திய இங்கிலாந்து உறவு மேம்பட வாய்ப்புள்ளது.
 
				 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
                   
                   
                   
                   
                   
                  