நீக்கப்பட்ட தேச துரோக சட்டம் அமித் ஷாவின் அதிரடி பட்டியல்..

சாணக்யா  avatar   
சாணக்யா
நீக்கப்பட்ட தேச துரோக சட்டம்
அமித் ஷாவின் அதிரடி பட்டியல்

- Subha Lakshmi Pazhani

நீக்கப்பட்ட தேச துரோக சட்டம்

அமித் ஷாவின் அதிரடி பட்டியல்


21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தாலும் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சட்டங்களால் தான் நிர்வகிக்கப்படுகிறோம்; இதில் பல மாற்றங்கள் வேண்டும் என பரிந்துரைகள் வந்தபோது முந்தைய ஆட்சியாளர்கள் இதை புறக்கணித்தனர். 1971ஆம் ஆண்டு 42-வது சட்ட கமிஷன் அறிக்கை, இந்திய தண்டனைச் சட்டத்தில் முக்கிய திருத்தங்களை பரிந்துரை செய்தபோதிலும் எந்த மாற்றத்தையும் ஆட்சியாளர்கள் ஏற்க மறுத்தனர். 2003 மற்றும் 2007ம் ஆண்டுகளில் மலிமத் கமிட்டி மற்றும் மாதவ் மேனன் கமிட்டி, ''குற்றவியல் சட்டங்களை காலத்தின் தேவைக்கு ஏற்ப மாற்ற வேண்டும்'' என தெளிவாக வரையறுத்தது, அப்போதும், பல்வேறு காரணங்களால் அன்றைய UPA அரசாங்கம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை!

பல ஆண்டுகள் கழித்து, இந்தியாவின் குற்றவியல் சட்டத்தின் அமைப்பை மறுசீரமைப்பதில் ஒரு முக்கியப்படியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாராளுமன்றத்தில் மூன்று மசோதாக்களை அறிமுகப்படுத்தினார்.

மாற்றங்கள் அல்ல சீர்திருத்தங்கள்…

மூன்றுமே மாபெரும் சீர்திருத்தங்கள், பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில், நீதிக்காக அல்லாமல் வெறும் தண்டனைக்காக உருவாக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, மற்றும் சாட்சிய சட்டம் 1872க்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா 2023 (பாரத நீதிச் சட்டம்), பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா 2023 (பாரத குடிமை பாதுகாப்புச் சட்டம்) மற்றும் பாரதிய சாக்ஷ்யா பில் 2023 (பாரத சாட்சிய மசோதா) என முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் எளிதில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. 2019ல் தொடங்கப்பட்ட பணி, உயர் நீதிமன்றங்கள், சட்டப் பல்கலைக்கழகங்கள், ஆளுநர்கள், முதல்வர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என அனைத்து பிரிவினர்களிடமும் பரிந்துரைகளைப் பெற்று, நான்கு ஆண்டுகளாக பல நாடாளுமன்ற குழுக்களின் அறிக்கைகளை தொகுத்து, 158 ஆலோசனைக் கூட்டங்களில் உள்துறை அமைச்சர் நேரில் கலந்து கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மசோதா, ஒரு பெரிய சீர்திருத்தம் ஆகும்!

நடைமுறைக்கு சாத்தியப்படாத பல சட்டங்கள் நீக்கப்பட்டு, காலத்திற்கேற்ற மாற்றங்களை இந்த மூன்று புதிய மசோதாக்கள் கொண்டுள்ளது. ஏராளமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் முக்கியமான சில சட்டங்களை பார்ப்போம்…

IPCக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா 2023 (பாரத நீதிச் சட்டம்)

511 பிரிவுகளுடன் IPC இருந்த நிலையில், பாரதிய நியாய சன்ஹிதா, 356 பிரிவுகளாக குறைக்கப்பட்டுள்ளது. 175 பிரிவுகள் திருத்தப்பட்டு, 8 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டு, 22 பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

கடும் விமர்சனத்துக்கு உட்பட்ட தேச துரோகச் சட்டம் (IPC பிரிவு 124A) முற்றிலுமாக நீக்கப்பட்டு, பிரிவினை, ஆயுதக் கிளர்ச்சி, இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தண்டனைகளை இந்த புதிய சட்டம் பரிந்துரைக்கிறது. மேலும் "இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்கள்" என்ற குற்றப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக "பயங்கரவாதம்" என்பது, சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒற்றுமை ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் நோக்கத்துடன் பொதுமக்களை அல்லது ஒரு பிரிவினரை அச்சுறுத்தும் அல்லது பொதுஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்தியாவிலோ வெளிநாட்டிலோ இந்த செயலை செய்பவர் 'பயங்கரவாதி' என வரையறுக்கப்படுகிறார். பயங்கரவாதிகளின் பொது சொத்துக்களை பறிமுதல் செய்யவும் சட்டத்தின் கீழ் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

முன்னர், கும்பல் கொலைகளுக்கு தனிப்பிரிவு இல்லாத நிலையில், இந்த மசோதா 'கும்பல் கொலைகளுக்கு' மரண தண்டனை வரை முன்மொழிகிறது.

திருமணம், வேலை, பதவி அல்லது வேறு அடையாளங்களை மறைத்து, பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவது குற்றமாக கருதப்பட்டுள்ளது. கூட்டு பாலியல் வன்புணர்ச்சிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனையும், 'மைனர்' என அழைக்கப்படும் சிறுவர் சிறுமிகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கினால் மரண தண்டனை வரை விதிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புகாரின் நிலையை 90 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவருக்கு அல்லது புகார்தாரருக்கு காவல்துறை தெரிவிக்க வேண்டும்.

CrPC க்கு பதிலாக பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா 2023 (பாரத குடிமை பாதுகாப்புச் சட்டம்)

இந்த மசோதாவில் 533 பிரிவுகள் இருந்தன. அதில் 160 பிரிவுகள் திருத்தப்பட்டு, 9 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டு, ஒன்பது பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இது பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கு பல முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளது. அவற்றில் மிக முக்கியமாக, குற்றம் நடந்த இடத்தை பொருட்படுத்தாமல் எந்த காவல் நிலையத்திலும் மக்கள் புகார் செய்ய அனுமதிக்கிறது.

விசாரணைக்கு உட்பட்ட கைதிகளின் அதிகபட்ச தண்டனையில் பாதி அல்லது மூன்றில் ஒரு பகுதி அனுபவித்தவர்களை விடுவிப்பதற்கான 'நீதிமன்ற விண்ணப்பத்தை' சிறை கண்காணிப்பாளர்கள் உறுதி செய்யும் செயல்பாட்டை வழங்குகிறது. இது நீதிமன்றத்தை அணுகுவதற்கான ஒரு முக்கிய இடைவெளியை குறைக்க முயல்கிறது.

Evidence Act க்கு பதிலாக பாரதிய சாக்ஷ்யா பில் 2023 (பாரத சாட்சிய மசோதா)

முன்னர் 167 பிரிவுகள் இருந்த நிலையில், தற்போது 170 பிரிவுகள் ஆக்கப்பட்டுள்ளன. 23 பிரிவுகள் திருத்தப்பட்டு, ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. 5 பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

நடைமுறைக்கு ஏற்ற மாற்றங்களாக இந்த மசோதா டிஜிட்டல் பதிவுகளையும் சட்டபூர்வ ஆதாரமாக ஏற்றுக்கொள்கிறது. அதைத்தொடர்ந்து இரண்டாம் நிலை ஆதாரங்களுக்கான முறையான விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நகல்கள், வாய்வழி, ஆவணங்களின் பிரதிகள் ஆகியவை இதில் அடங்கும்.

ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் சாட்சியங்களை பதிவு செய்ய நீதிமன்றங்களால் அழைக்கப்படும்போது, சாட்சிகள் நினைவில் இல்லை அல்லது வழக்கின் ஆவணத்தை பார்க்கவில்லை என்று கூறினால், தற்போது பொறுப்பில் உள்ள எஸ்.பி நீதிமன்றத்தில் சாட்சிகளை பதிவு செய்ய வேண்டும் என புதிய சட்டம் முன்மொழிகிறது

ஆஜராகாத நிலையில் உள்ள வழக்குகளில் புதிய விசாரணைக்கான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதைப்போல் வழக்குகளில் உரிய நீதி கிடைக்க, தடயவியல் அறிவியலின் பயன்பாட்டை அதிகரிக்க வலியுறுத்துகிறது.

மொத்தத்தில், குற்றவியல் சட்டங்களில் முன்மொழியப்பட்டுள்ள 313 மாற்றங்கள், மூன்று ஆண்டுக்குள் மக்களுக்கு நீதி கிடைப்பதை நோக்கமாக வைத்துள்ளது. சிறிய வழக்குகளில் சுருக்க விசாரணையின் நோக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது 3 ஆண்டுகள் வரை தண்டனைக்குரிய குற்றங்கள் சுருக்க விசாரணையில் சேர்க்கப்படும். இந்த சட்டத்தால் மட்டும், அமர்வு நீதிமன்றங்களில் 40% வழக்குகள் முடிவடையும். முதன்முறையாக e-FIR வழங்குதல் சேர்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டமும், காவல் நிலையமும் ஒரு போலீஸ் அதிகாரியை நியமிக்கும். திருட்டு, அத்துமீறல், அமைதி மீறல் போன்ற சிறிய குற்றங்களுக்கு, இப்போது 'சமூக சேவையை' ஒரு தண்டனையாக வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் குற்றவாளிகள் திருந்துவதோடு, சிறைச்சாலைகளில் உள்ள நெரிசலும் குறையும்!

குற்றவியல் நீதி அமைப்பில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் நல்ல குடிமக்கள் சார்பான விதிகளைக் கொண்டிருந்தாலும் சில மூத்த வழக்கறிஞர்கள், இதில் உள்ள நுணுக்கமான பிரச்சனைகளை தெரிவித்துள்ளனர், கவலைப்பட வேண்டியதில்லை… இது நாடாளுமன்ற நிலைக்குழுவால் தீர்க்கப்படலாம்!

No comments found