இதுக்குப் பேர் தான் தேர்தல் பாசம்

சாணக்யா  avatar   
சாணக்யா
இதுக்குப் பேர் தான் தேர்தல் பாசம்



காங்கிரஸ் கட்சி ஏப்ரல் 5-ம் தேதி வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் ஏழாம் பக்கத்தில், கல்வி நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளை தடுக்க, ‘ரோஹித் வெமுலா சட்டத்தை’ இயற்றுவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தை சார்ந்த ஆராய்ச்சி மாணவரான ரோஹித் வெமுலா, அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் கீழ், பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்ந்ததால், இவரின் உதவித்தொகை பல்கலைக்கழகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது.

பல மாதங்கள் போராடிய பிறகும் உதவித்தொகை கிடைக்காததால், ஜனவரி 2016ல் தற்கொலை செய்து கொண்டார். பட்டியலினத்தவர் என்பதால் மட்டுமே இவரின் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டதாக செய்திகள் பரவின அதனால் , மாணவர்கள் மத்தியில், மிகப்பெரிய போராட்டத்தையும் மோதலையும் தூண்டியது.

வெமுலாவின் மரணத்திற்குப் பிறகு பரவிய தகவல்களால், மாணவர்களின் படிப்பு மிகப்பெரிய அளவில் ஸ்தம்பித்து, பல்கலைக்கழகம் நெருப்பாய் கொதித்தது. அரசியல்வாதிகளும், செய்தி நிறுவனங்களும், மாணவர்களின் படிப்பை பற்றி சிந்திக்காமல், அவரவர்களின் சுயலாபத்திற்காக பல கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் திணித்தனர். இடதுசாரி அமைப்புகளும் காங்கிரசும் வெமுலாவின் மரணத்தை ஒரு ‘சாதி பாகுபாட்டிற்குள்’ அடக்க முயன்றன. ஆனால், விசாரணையின் முடிவில் வெமுலா, ‘பட்டியலினத்தவர் அல்ல’ என்பது தெரியவந்தது. மேலும் இந்த தற்கொலை முடிவுக்கும் சாதிக்கும் சம்பந்தமில்லை என்று தான், விசாரணையின் முடிவு தெரியப்படுத்துகிறது.

இந்த வழக்கின் முடிவுகளை நன்கு அறிந்த பிறகும், காங்கிரஸ் கட்சி 2024-ல் மீண்டும் ரோஹித் வெமுலாவின் தற்கொலையை அரசியலாக்கி, ராகுல் காந்தியின் சொந்த தொகுதியான வயநாட்டில் நடந்த மாணவனின் தற்கொலையை கவனிக்க மறுக்கிறது.

வயநாட்டில் உள்ள பூக்கோடு கால்நடை அறிவியல் கல்லூரி மாணவர் சித்தார்த்தன், பிப்ரவரி மாதம் இரண்டு நாட்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவக் குழுவான SFI மாணவர்களால் துன்புறுத்தப்பட்டு, அதை தாங்க முடியாமல், பிப்ரவரி 18 அன்று தற்கொலை செய்து கொண்டார். அந்த இரண்டு நாட்களும் SFI மாணவர்கள், சித்தார்த்தனை பயங்கரமாக தாக்கி துன்புறுத்தியது, விசாரணையில் தெரியவருகிறது. அந்தக் கல்லூரியில் பல ஆசிரியர்களும் SFI-யின் முன்னால் உறுப்பினர்கள் என்பதால் அவர்களும் இந்தக் கொடுமைக்கு எதிராக வாய் திறக்கவில்லை. போலீசாரின் விசாரணையில் திருப்தி இல்லாததால் , சித்தார்த்தனின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் அழுத்தத்தால், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆனால் இது ஒன்றும் கேரளாவில் புதிதல்ல… கேரளா முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் கம்யூனிஸ்ட் மாணவ இயக்கத்தின் ஆதிக்கம் அதிகம். மற்ற மாணவ அமைப்புகளின் குரல்கள் நசுக்கப்படுவதாக, தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் எழுகிறது. கவர்னர் ஆரிப் முகமது கான், இது போன்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, முதல்வர் பினராயி விஜயனை எச்சரித்ததும் உண்டு. ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல், கவர்னருக்கு எதிராக மாணவர்களை திருப்பி, போராட்டம், வன்முறை என கல்வி வளாகங்களை போர் மண்டலமாக கம்யூனிஸ்ட் கட்சி மாற்றியுள்ளது.

காங்கிரஸிலிருந்து கம்யூனிஸ்ட் மாணவ அமைப்புகள் வரை, அனைவரும் பழிவாங்கும் எண்ணத்தில் தான் கல்லூரி வளாகத்தில் உள்ளனர். கல்லூரிக்குள் நடக்கும் இந்த சித்தாந்த போரால், கேரளா, பல மாணவர்களை இழந்துள்ளது. இந்த தீவிர பிரச்சனையை தீர்க்க பல மூத்த கல்வியாளர்களும் சமூகவியலாளர்களும் அவர்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதனிடையில், பிப்ரவரி மாதம் தன் சொந்த தொகுதியான வயநாட்டில் நடந்த இந்த கசப்பான சம்பவத்திற்கு மௌனம் காக்கும் ராகுல் காந்தி, 2016இல் நடந்த ரோஹித் வெமுலாவின் மரணத்தை மீண்டும் அரசியலாக்கியுள்ளார்!

**


                                                                                                                             - Subha Lakshmi Pazhani  





 

                     

No comments found