பெரியார் சிலை எம்ஜிஆர் சொன்னதை அண்ணாமலையும் சொல்கிறார்!....

சாணக்யா  avatar   
சாணக்யா
பெரியார் சிலை <br>எம்ஜிஆர் சொன்னதை அண்ணாமலையும் சொல்கிறார்!

 

 


ஈ வெ ரா அவர்களின் சிலையில் உள்ள வாசகங்களை அகற்ற வேண்டும் என்பது குறித்து அண்ணாமலை அவர்கள் பேசியதை வன்மையாக கண்டிப்பதாகவும், வரலாறு தெரியாமல் அண்ணாமலை அவர்கள் பேசுவதாகவும், இறைவனை காட்டி அடிமையாக வைத்திருக்கிறீர்களே என்று தந்தை பெரியார் பகுத்தறிவு சிந்தனையோடு அன்று போர் குரல் கொடுத்தார் என்றும், இதை பற்றியெல்லாம் அண்ணாமலைக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை என்றும் அதிமுகவின் திரு.கே.பி.முனுசாமி அவர்கள் கூறியிருக்கிறார். வரலாறு தெரியாமல் பேசுவது அவர் தான் என்பது அவருக்கு தெரியவில்லையா அல்லது வேறு யாருக்கும் தெரியாது என்று நினைக்கிறாரோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. வரலாற்றை சற்றே திரும்பி பார்ப்போம்.

-----------------

“திரு.மு.கருணாநிதி - காஞ்சிபுரத்தில் பெரியார் சிலையை வைப்பதற்காக திராவிடர் கழகம் அதற்கான இடத்தை கேட்டு, அதற்குரிய பணத்தை கட்டி, பராமரிப்பு செலவுக்கான பணம் உட்பட கட்டி, திமுக ஆட்சியிலே அனுமதி கேட்டு வழங்கப்பட்டது. இப்போது அங்கே சிலை வைக்க அனுமதியளிக்கப்படவில்லை இந்த ஆட்சியால்....

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். - அவர்கள் கேட்டிருந்த இடம் மடம், கோவில் போன்ற மத நம்பிக்கைக்குரிய இடம். கோவில், மடம் போன்றவற்றிற்கு எதிராக இருப்பதால், அவற்றிற்கு இடைஞ்சலாக இருக்கிற இடத்தைக் கேட்கிற காரணத்தால், முன்னாலிருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியிலே அது பற்றி பரிசீலிக்கப்பட்டது. அது கூடாது, முடியாது என்று மறுக்கப்பட்டது. நான் வந்த பிறகு, அந்த புகாரை கவனித்து யார் என்ன சொல்கிறார்கள் என்று கருத்தையும் கேட்டபொழுது, பொதுவாக எனக்கு சொல்லப்பட்ட யோசனை மட்டுமல்ல. ஒருமுறை காஞ்சிபுரத்தை பார்க்க போன பொழுது அந்த இடத்தைப் பார்த்து விட்டு வந்தவுடனே உத்தரவு போட்டேன். எத்தனையையோ மாதங்களுக்கு முன்பு- வேறு இடத்தில அவர்கள் கேட்பார்களானால், உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று நான் உத்தரவு போட்டு பல மாதங்களாகி விட்டது.

திரு.கருணாநிதி - சங்கராச்சாரியார் மடம் என்றால், அந்த மடத்திற்கு வெளியிலே பெரியாருடைய சிலை ஏன் இருக்கக்கூடாது என்று எனக்கு தெரியவில்லை.

திரு.எம்.ஜி.ஆர் - நாட்டிலே அமைதி தேவை என்பதால், இந்த அரசு எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கலாம். நம்பிக்கை இல்லாதவர்களாகவும் இருக்கலாம். ஒவ்வொருவருக்கும், மன நம்பிக்கையும், பாதுகாப்பும் அளிப்பது இந்த அரசின் கடமை. அங்கே சச்சரவுகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, யாரோ அந்த சிலையை வைக்க வேண்டாம் என்று சொன்ன உத்தரவை மாற்றி, வேறு இடத்தில், எங்கு கேட்டாலும், வசதியான இடத்தில் மக்களுக்குப் பயன்படுகிற வகையில் ஒரு இடத்தை ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று நான் உத்தரவிட்டேன்.

திரு.மு.கருணாநிதி - ஒருவேளை, போக்குவரத்துக்கு இடைஞ்சலான இடம் என்பதால் அது அனுமதிக்கப்படவில்லையென்று முதலமைச்சர் சொல்வார் என்று எதிர்பார்த்தேன். சங்காராச்சாரியாருக்காகத்தான் அந்த இடம் கொடுக்கப்படவில்லை என்று சொல்லத்தான்.....

திரு. எம்.ஜி.ஆர் - சங்காராச்சாரியாருக்காகத்தான் கொடுக்கப்படவில்லையென்றால் அதை துணிவோடு சொல்கிறவன் நான். ஏனென்றால், நான் அவரை போய் நேரிலே கண்டு, அவர் என்ன சொல்கிறார் என்பதை நேரிலே பேசி, கருத்துக்களைப் பரிமாறி கொண்டவன். அந்த அளவு துறவியாக, உண்மையிலேயே துறவிக்கு அடையாளமாக வாழ்கிறார் என்பதை இந்த மாமன்றத்திலே மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன். ஆனால், அவருக்காகவோ, அந்த மடத்திற்காகவோ அல்லது இட நெருக்கடிக்கோ என்று பிரித்துப் பார்ப்பதற்கில்லாமல் இட நெருக்கடியும் இருக்கிறது. அதோடு, வேறு அரசியல் நெருக்கடி, மத நெருக்கடி மற்றும் சச்சரவுகள், குழப்பங்கள் வரலாம். அதெல்லாம் வரக்கூடாது என்பதற்க்காக இந்த நிலையை நான் மேற்கொண்டேன்.

திரு.மு.கருணாநிதி - ஒரு மாதத்திற்குள் குறிப்பிட்ட இடத்தில் திராவிட கழகத்தார் கேட்டுள்ள இடத்தில பெரியாருடைய சிலையை வைக்க அனுமதி மறுக்கப்படுமானால் அந்த தடையை மீறி, நானே தலைமையேற்று அந்த இடத்தில் பெரியார் சிலையை வைக்க முயற்சி எடுப்பேன் என்று தெரிவித்துள்ளேன்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர் - முதலமைச்சர் என்ற நிலையிலே இங்கேயே பதில் சொல்லி விடுகிறேன். எந்த காரணத்தைக் கொண்டும் அங்கே சிலை வைக்க இந்த அரசாங்கம் அனுமதிக்காது.

மு.கருணாநிதி - எப்படியும் அந்த இடத்திலே பெரியார் சிலையில் தி மு கழகம் வைத்தே தீரும்.

(முறியடிப்போம், முறியடிப்போம் என்ற குரல்கள்)

திரு.துரைமுருகன் - பெரியார் சிலையை உடைப்போம் என்றா சொல்கிறீர்கள்?

திரு. மு.கருணாநிதி - பரவாயில்லை, சங்கராச்சாரியாருக்காக ஆளும் கட்சியை (அ தி மு க) சார்ந்தவர்கள் பெரியார் சிலையை உடைப்போம் என்று சொல்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் - சங்கராச்சாரியார் அவர்களுக்காக இந்த அரசு பேசவில்லை. சிலையை உடைப்போம் என்று சொல்லவில்லை.

திரு.துரைமுருகன் - சங்கராச்சாரியாருக்காக பெரியார் சிலையை உடைப்போம் என்று சொல்கிறார்களே!!!!

முதலமைச்சர் எம்.ஜி.ஆர் - சொல்லாத வார்த்தையை சொன்னதாக இங்கே மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பெரியார் சிலையை உடைப்போம் என்று எங்கள் தரப்பிலிருந்து சொல்லவில்லை என்பதை நான் திட்டவட்டமாக சொல்லிக்கொள்கிறேன். முயற்சியை முறியடிப்போம் என்று தான் சொன்னார்கள்”.
--------------------
மேற்கண்ட விவாதமானது தமிழக சட்ட சபையில் 22 மற்றும் 23.03.1979 அன்று நிதி நிலை அறிக்கை மீதானது.

கே.பி.முனுசாமி அவர்கள் இப்போது சொல்லட்டும். அன்று திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் கூறியதை தான் திரு.அண்ணாமலை அவர்கள் கூறியிருக்கிறார். அன்றைக்கு ‘முறியடிப்போம்’ என்ற வார்த்தையை ஊதி பெரிதாக்கி ‘உடைப்போம்’ என்று மடை மாற்றியது இன்றைய அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் . அதை போன்றே அண்ணமாலை அவர்கள் கூறியதை ஊதி பெரிதாக்கி சட்ட ஒழுங்கு சீர்கேட்டை உருவாக்க துடிப்பதும் அதே தி மு க வினர் தான். திரு. எம் ஜி ஆர் அவர்கள் சொன்னது தவறா? வழிபாட்டு தளங்களின் அருகே ஈ வெ ரா சிலையை அமைக்கக்கூடாது என்பதில் திரு. எம்.ஜி.ஆர் அவர்களின், அ தி மு கவின் உறுதியான நிலைப்பாட்டை ஏற்க மறுக்கிறாரா கே.பி.முனுசாமி? சங்கராச்சாரியார் குறித்த திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் கருத்தில் திரு.கே.பி.முனுசாமிக்கு முரண்பாடு உள்ளதா?

அண்ணாமலை அவர்களுக்கு வரலாறு தெரியவில்லை என்று கூறி வரலாற்றை மாற்றி எழுத முனைகிறாரா கே.பி.முனுசாமி அவர்கள்?

 

                                                                                                                               

                                                                                                                 

                                                                                                             நாராயணன் திருப்பதி.
                                                                                                             மாநில துணைத் தலைவர்,
                                                                                                             பாரதிய ஜனதா கட்சி.

 

 

                                                                        

 

 

 

No comments found