ஞானவாபி மசூதி.. தொல்லியல் துறையின் துல்லிய அறிக்கை

சாணக்யா  avatar   
சாணக்யா
ஞானவாபி மசூதி..

தொல்லியல் துறையின் துல்லிய அறிக்கை



காசி விஸ்வநாதர் கோவில் - ஞானவாபி மசூதி வழக்கு, ஆழமான வரலாறு மற்றும் சிக்கலான சட்ட போராட்டத்தின் வெளிப்பாடாகும். ஞானவாபி வழக்கு, சுதந்திர இந்தியாவில் 1991ஆம் ஆண்டு நீதிமன்றத்தை எட்டியது. 20 ஆண்டுகளாக இந்த வழக்கு செயலற்று இருந்த நிலையில், 2019 இல் அதை மீண்டும் விசாரிக்கத் தொடங்கினர்.

காசி விஸ்வநாதர் கோவில் பல புனரமைப்புகளுக்கு உட்பட்டுள்ளது என்று, பலரும் தெளிவுகளுடன் உறுதி செய்துள்ளனர். அதிலும் மிக முக்கியமாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், மசூதி இருக்கும் இடத்தில்தான் கோவில் இருந்திருக்கிறது என்று பல தரவுகளுடன் வெளிக்காட்டி உள்ளனர். தற்போது வெளியாகி உள்ள தொல்பொருள் ஆராய்ச்சி அறிக்கை (ASI Report) ஞானவாபி மசூதி தொடர்பான வழக்குகளின் விடையாக நிற்கிறது.

குறிப்பாக 2021ஆம் ஆண்டு ஐந்து பெண் பக்தர்கள், வாரணாசி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. அதில், “ஞானவாபி மசூதி பகுதியில் உள்ள சிருங்காரி அம்மனை, ஆண்டு முழுவதும் வழிபட வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

இதையடுத்து, ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த கடந்த ஆண்டு ஜூலை 21ம் தேதி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை விதிக்கக் கோரி, மசூதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்யவே, உச்ச நீதிமன்றத்தில் மசூதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடியானது.

மசூதியில் அகழ்வாராய்வு பணி நடத்த, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஞானவாபி மசூதியில் உள்ள 2150.5 சதுரமீட்டர் பகுதியில் தொல்லியல்துறை ஆய்வு நடத்தியது.

ஆய்வுப்பணிகளை முடித்து, கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி ஆய்வறிக்கையை சீல் வைத்து, வாரணாசி நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தாக்கல் செய்தது. 839 பக்க அறிக்கையானது அறிவியல் பூர்வமாக பல கருத்துக்களை ஒவ்வொரு தலைப்பின் கீழ் தெளிவுபடுத்தி உள்ளது. மேலும் இந்த வளாகத்திற்குள் இருக்கும் சர்ச்சைக்குரிய வாசுகானா (vazukhana), பகுதியை ஆய்வு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கு காரணம் 2022ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஆய்வில், மசூதியில் சிவலிங்கம் போன்ற ஒரு சிலை இருப்பதாக மனுதாரர் தரப்பு தெரிவித்தது. அதற்கு மசூதியில் கண்டுபிடிக்கப்பட்டது சிவலிங்கம் இல்லை என்றும், தொழுகைக்கு வருபவர்கள் தூய்மை செய்யும் தண்ணீர் தொட்டியில் இருந்த நீரூற்று எனவும் மசூதி நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்த சர்ச்சைகள் பின்தொடர, நீதிமன்றம், சிவலிங்கம் போன்ற சிலை கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. அதனால் தொல்லியல் துறையும் அந்தப் பகுதியை தவிர பிற பகுதிகளை நுணுக்கமாக ஆராய்ந்துள்ளது.

ASI அறிக்கை மிகத் தெளிவாக ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளது. அதில், ஏற்கனவே இருந்த கோவில் 17ஆம் நூற்றாண்டில் அவுரங்கசீபின் ஆட்சியின் போது அழிக்கப்பட்டு இருக்கலாம் என்று கல்வெட்டுகள் தெளிவுபடுத்துகிறது. அதாவது 1676- 77 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், முகலாய அரசர் அவுரங்கசீப் ஆட்சியின் போது மசூதி கட்டப்பட்டதாக கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், 1792-93 ஆம் ஆண்டில் மசூதியின் முற்றம் உள்ளிட்ட பகுதிகளில் பழுது பார்க்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ASIஆல் 1965 - 66 ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் எடுக்கப்பட்ட கல்லின் புகைப்படத்துடன் சமீபத்திய கணக்கெடுப்பை ஒப்பிடுகையில், மசூதியின் கட்டுமானம் மற்றும் அதன் விரிவாக்கம் தொடர்பான வரிகள் கீரப்பட்டு, ஆதாரங்கள் சிதைக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை தெரியப்படுத்துகிறது.

மேலும் ஜதுநாத் சர்க்கார் தொகுத்த மாசிர்-இ-ஆலம்கிரி (1947) என்ற பதிவில் அவுரங்கசீப் உத்தரவின்படி கல்விக்கூடங்களும் கோவில்களும் இடிக்கப்பட்டதாகவும் உள்ளது.

தெய்வங்களின் பெயர்களுடன் தேவநாகரி, கிரந்த, தெலுங்கு, மற்றும் கன்னட எழுத்துகள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. ஆய்வின்போது மொத்தம் 34 கல்வெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் விஷ்ணுவின் மற்றொரு பெயரான ஜனார்த்தனா, சிவனின் மற்றொரு பெயர்களான ருத்ரா, உமேஸ்வரா போன்றவை காணப்படுவதாக அறிக்கை கூறுகிறது. மேலும் மூன்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள “மகா-முக்தி மண்டபம்” என்ற சொல் ASI அறிக்கையில் முக்கியத்துவத்தை பெறுகிறது.

முன்பிருந்த கோவிலின் பல அம்சங்கள் மசூதியின் விரிவாக்கத்திற்காகவும் கட்டுமானத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. முந்தைய கட்டமைப்புகள் அழிக்கப்பட்டு அவற்றின் பாகங்கள், தற்போது உள்ள மசூதி வளாகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கணக்கெடுப்பின்போது தாழ்வாரத்தில் உள்ள தூண்கள் மற்றும் சதுர தூண்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவை ஏற்கனவே இருந்த கோவிலின் ஒரு பகுதி என்றும் தாமரை, யாழி (vyala) போன்ற புராண அம்சங்கள் சிதைக்கப்பட்டு, அவற்றின் மேல் வேறு வடிவுகள் பொறிக்கப்பட்டுள்ளதும் வெளிவந்துள்ளது.

இதற்கு முன் இருந்த கோவிலின் மைய அறையும் பிரதான நுழைவாயிலும் தான், தற்போது இருக்கும் மசூதியின் ஒரு பகுதியாக உள்ளது. அறிக்கையின் படி, முன்பிருந்த கோவிலில் பெரிய மைய அறை இருந்ததாகவும் அவை ஒன்றுக்கு குறையாமல் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கில் அமைந்திருக்கக் கூடும் என சாட்சிகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர். முன்பிருந்த ஒரு மைய அறை தான் தற்போது பிரதான மண்டபமாக மசூதியில் உள்ளது .

நிலவறைகளில் உள்ள சிற்பங்கள், ஒரு பெரிய இந்து கோவில், வழிபாட்டில் இருந்ததை வெளிப்படுத்துகிறது. “நிலவறைகளில் எஞ்சியிருக்கும் சிற்பங்கள்” என்ற தலைப்பின் கீழ் ஏற்கனவே இருந்த கோவிலின் தூண்கள், மசூதியின் கிழக்கு பகுதியில் உள்ள நிலவறைகளையும், மேடைகளையும் உருவாக்க மீண்டும் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடுகிறது. இது ஏராளமான மக்களின் தொழுகைக்காக அமைக்கப்பட்டதாகும் .

நிலவறை அடியில், இந்து தெய்வங்களின் சிற்பங்கள் மற்றும் செதுக்கப்பட்ட ஏராளமான கலைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுபோல் இன்னும் பல நுணுக்கமான ஆதாரங்களை ASI அறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது. இதனால் தற்போது மசூதியின் தெற்கு நிலவறையில் இருக்கும் இந்து தெய்வங்களை வழிபடவும், பக்தர்களை மசூதிக்குள் பூஜை செய்யவும் வாரணாசி நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

ASI அறிக்கையை வெளியிட முடிவு செய்த வாரணாசி நீதிமன்றம், இந்த நீண்ட கால சர்ச்சையை தீர்ப்பதில் வெளிப்படையான சூழலை உருவாக்கியுள்ளது.


                                                                                                                       

                                                                                                                        - Subha Lakshmi Pazhani 





 

                                                                                                  

No comments found