காளியாக மாறிய சந்தேஷ்காளி பெண்கள் !

சாணக்யா  avatar   
சாணக்யா
காளியாக மாறிய சந்தேஷ்காளி பெண்கள் !

- Subha Lakshmi Pazhani -

காளியாக மாறிய சந்தேஷ்காளி பெண்கள் !

- Subha Lakshmi Pazhani -

வன்முறை, போராட்டம் என மாறிய மேற்குவங்க கிராமம்...
1950 களின் பிற்பகுதியில் இருந்தே மேற்கு வங்க அரசியலில், வன்முறை ஒரு நிரந்தர அம்சமாக இருந்து வருகிறது. தீராத இந்த பிரச்சனையில், ஓட்டுக்காக பங்களாதேஷிகளுக்கும் அடையாள அட்டையை கொடுத்து குடியேற்றி, அதில் பலரும் அரசியல்வாதிகளாகவும் ஆகிவிட்டனர்.

மேற்கு வங்கம் - பங்களாதேஷ் எல்லையில் அமைந்துள்ள சந்தேஷ்காளி கிராமத்தில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இங்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் (TMC) கட்சியின் நிர்வாகி ஷாஜகான் ஷேக்கிற்கும் அவரது கூட்டாளிகளுக்கும் எதிராக, ஏராளமான பெண்கள் மிகப்பெரிய எழுச்சிப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

ஏற்கனவே பல கோடி ரூபாய் மதிப்பிலான ரேஷன் விநியோக மோசடியில் இவர் மீது அமலாக்கத்துறை, ஜனவரி மாதம் சோதனை நடத்த வந்தது. அப்போது ஷாஜகானின் கூட்டாளிகள் அமலாக்க துறையையும், CAPF பணியாளர்களையும் தாக்கினர். அன்று வரை பலருக்கும் தெரியாத சந்தேஷ்காளி கிராமம், ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறியது.

பின்னர் பிப்ரவரி ஒன்பதாம் தேதி அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்தது, அங்கு நடந்து வந்த அவலங்கள் வெளிவரத் தொடங்கின. டிஎம்சி தலைவருக்கு சொந்தமான மீன், கோழி பண்ணைகளை பெண்கள் தாக்கத் தொடங்கினர். தெரு வீதிகளில் கத்தி, கோடரி போன்ற பல ஆயுதங்களை கையில் ஏந்தி, காளியாகவே பெண்கள் இறங்கிவிட்டனர்.

சந்தேஷ்காளி கிராமத்தில் பெரும்பாலும் பழங்குடி மற்றும் பட்டியலின சமூகங்களை சார்ந்தவர்கள் தான் அதிகமாக உள்ளனர். பணத்திலும் கட்சியிலும் செல்வாக்கான திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள், நிலங்களை ஆக்கிரமித்து, அங்குள்ள பெண்கள், குழந்தைகள் என வயது வித்தியாசம் பாராமல் பலரையும், கட்சி அலுவலகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக மிகப்பெரிய குற்றச்சாட்டு வெடித்தது. மேலும், அங்கு வசிப்பவர்களை பண்ணைகளில் அடிமையாக நடத்துவதும் வெளிவந்தது. இப்படி கொடூரத்தின் உச்சத்தை சந்தேஷ்காளி மக்கள் அனுபவித்து வந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, தேசிய பட்டியலினத்தோர் ஆணைய பிரநிதிகள் குழு அண்மையில் சந்தேஷ்காளி சென்று, பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியது. அப்போது தங்களுக்கு ஏற்பட்ட துயரத்தை பெண்கள் எடுத்துரைத்தனர். ஷாஜகான் ஷேக்கை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, டெல்லி திரும்பிய பிரதிநிதிகள், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அறிக்கை அளித்துள்ளனர். இந்த நிலையில் மாநில குழந்தைகள் நல ஆணையமும் விசாரணை நடத்தியுள்ளது.

இதில் அறியப்படும் TMC தலைவரான ஷாஜகான் ஷேக், ஒரு காலத்தில் பங்களாதேஷிலிருந்து சட்ட விரோதமாக குடியேறியவர் என்றும் அதனால் பல சட்டவிரோத செயல்களை செய்து வருவதாகவும், தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷிகளின் குடியேற்றம் மேற்கு வங்கத்தில் பெரிய கவலைக்குரிய விஷயமாகும். இதனால் வங்காளத்தின் அடையாளமான காளி பூஜைகளும் வன்முறையால் பல பகுதிகளில் தடுக்கப்பட்டு வருகிறது. 2011-ல் TMC ஆட்சிக்கு வந்தவுடன் 2013 மற்றும் 2018- ல் நடந்த பஞ்சாயத்து தேர்தல்களில் தொடர்ச்சியான வன்முறையை மக்கள் கண்டனர். மேலும், தேர்தலில் பங்கேற்காமலேயே கிராமப்புறங்களை TMC கைப்பற்றியது. மே 2, 2021 அன்று நடந்த மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, மாநிலம் வன்முறையில் மூழ்கியது. ஒரு வருடத்திற்கு பிறகும், பாதிக்கப்பட்டவர்களில் பாஜக ஆதரவாளர்கள் இன்னும் பயத்திலும், வன்முறை தாக்கத்திலும் தான் தொடர்ந்து வாழ்கின்றனர்.

2024 பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்த சம்பவங்கள் மம்தா பானர்ஜிக்கு மிகப்பெரிய வீழ்ச்சியாக உள்ளது.

மியான்மரில் இருந்து வந்த ரோஹிங்யா அகதிகளுக்கு ஆதரவாக எழுந்த குரல்கள், ஏன் சந்தேஷ்”காளி” பெண்களுக்காக எழவில்லை?

No comments found