விவசாயி மகன் to 'KING MAKER'
யார் இந்த சந்திரபாபு நாயுடு?
- மீரா.H -
 
நாரா சந்திரபாபு நாயுடு, 1950 ஏப்ரல் 20இல் பிறந்தார். ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே, Naravaripalliயில் நாரா கார்ஜுர நாயுடு மற்றும் அமணம்மா எனும் தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் நாரா சந்திரபாபு நாயுடு. இவருடன் பிறந்தவர்கள் மூன்று பேர். சந்திரபாபு நாயுடு -வின் தந்தை விவசாயி. அவரது கிராமத்தில் பள்ளிகள் இல்லாத நிலையில், தனது தொடக்க கல்வியை சேஷபுரத்திலும் உயர்நிலை கல்வியை சதுரகிரியிலும் முடித்தார். பின்னர், திருப்பதி வெங்கடேஷ்வரா கல்லூரியில், தனது இளங்கலை கல்வியை படித்தார். 1974 -ல் அதே கல்லூரியில் பொருளாதாரத்தில் தனது முதுகலை கல்வியையும் முடித்தார். இவர், படிக்கும்போதே மாணவர் சங்க தலைவராக இருந்தவர். இங்கே தொடங்கியது இவரின் அரசியல் ஆசை. 1975 -ல் இளைஞர் காங்கிரஸில் இணைந்தார். அரசியல் பணிகள் தீவிரமானதால் தனது Ph.D படிப்பை கைவிட்டார் சந்திரபாபு. 
1978 -ல் தனது முதல் தேர்தல்தலை சந்தித்த இவர் தனது தீவிர பிரச்சாரத்தின் மூலம் மக்களின் மனதை கவர்ந்து, அவரை எதிர்த்து நின்ற செல்வாக்கு மிக்க ஜனதா வேட்பாளரை தோற்கடித்து, தனது வெற்றிப்பாதையில் காலடி எடுத்துவைத்தார். பின்னர், 1980 - ல் அஞ்சையா முதல்வராக இருந்தபோது இவருக்கு தொழில்நுட்ப கல்வி மற்றும் திரைத்துறை அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டன. திரைத்துறை அமைச்சராக இருந்த இவருக்கு 'TELUGU SUPERSTAR' என மக்களால் அன்போடு அழைக்கப்படும், N. T. Rama Rao -வுடன் அறிமுகம் கிடைத்து, இருவரும் நண்பர்களான நிலையில், Rama Rao வின் மகள் புவனேஸ்வரியை செப்டம்பர் மாதம் 1981 -ம் ஆண்டு திருமணம் செய்தார் சந்திரபாபு நாயுடு.
எப்படி தொடங்கியது TDP?
1982 மார்ச் 29 -ல் தெலுகு தேசம் கட்சியை (TDP) உருவாக்கினார் N. T. Rama Rao. ஊழலற்ற ஆந்திரா எனும் முழக்கத்தை முன்வைத்து, மக்களிடம் வாக்குகளை சேகரிக்க தொடங்கினார் NTR. இந்தியாவில் முதன்முதலாக ரத யாத்திரை அறிமுகப்படுத்தியது இவரே. காரை (car) ரதம் போல மாற்றியமைத்து, அதன் மேல் அமர்ந்து, ஆந்திரா முழுவதும் சுற்றிவந்தார். ஒரு நாளைக்கு 120 KM என சுமார் 75000 KM ஆந்திராவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி, வாக்குகளை சேகரித்தார் NTR. ரத யாத்திரை மூலம் எழுச்சியை உண்டாக்கினார். பழைய ஆந்திராவின் 294 தொகுதிகளில் தெலுகு தேசம் கூட்டணி 202 தொகுதிகளில் அமோக வெற்றியை பெற்றது. காங்கிரஸ் அல்லாமல் ஒரு கூட்டணி அப்படி ஒரு அமோக வெற்றியை பெற்றது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
தேர்தல் முடியும் வரை காங்கிரஸில் இருந்த சந்திரபாபு, மாமனாரின் Mass -ஐ உணர்ந்து 1984 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாமனாரின் கட்சியான தெலுகு தேசம் கட்சி-யில் இணைந்தார். 1984 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதால், காங்கிரஸின் மீது மக்கள் அனுதாப வாக்குகளை அள்ளி வீசினார்கள். ஆனால், சட்டமன்ற தேர்தல் மட்டுமின்றி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும் தெலுகு தேசம் கட்சிக்கு சாதகமே. இப்படி பல சாதனைகளை அடுக்கிக் கொண்டிருந்த நிலையில், முதல்வர் ஆன இரண்டு ஆண்டுகளில் 1985 -ல் Nadendla Bhaskara Rao என்பவரால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது. ஆகையால், ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் தேர்தலை சந்தித்த அவருக்கு, வாக்குகளின் மூலம் மக்கள் கொடுத்த அன்பு மழையால், இரண்டாவது முறையும் முதல்வர் ஆனார் NTR.
1994 -ம் ஆண்டு நடந்த தேர்தலில் முக்கிய முகமாக இருந்தார் சந்திரபாபு நாயுடு. மூன்றாவது முறையாக NTR முதல்வராக இருந்தபோது, அவர் செய்த சில காரியங்களால், மக்கள் மத்தியிலும், கட்சியிலும் அவர் மீது அதிருப்தி எழுந்தது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய சந்திரபாபு, 1995 -ம் ஆண்டு நடந்த தேர்தலில் NTR -ஐ கீழிறக்கி, ஆந்திர முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். 1996 -ம் ஆண்டு உடல்நலக் குறைவால் NTR இறந்த பிறகு, கட்சியை தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார் சந்திரபாபு நாயுடு.
ஆந்திர மாநிலத்தில் Google உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்களை கொண்டு வந்து , Hi-Tech சிட்டியாக மாற்றி, அதற்கான பணிகளில் தீவிரம் காட்டினார் சந்திரபாபு. Hyderabed சிட்டியை Cyberabad என மாற்றி அதிகபட்ச அயல்நாட்டு மென்பொருள் நிறுவனங்களை கொண்டுவந்தார். இந்தியா முழுவதும் அதிகமாக பேசப்பட்ட நதிநீர் இணைப்பு திட்டத்தை கையில் எடுத்தார் சந்திரபாபு நாயுடு. போலாவரம் திட்டம் ரூ.40,000 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. Bill Clinton, Tony Blair போன்ற உலகத்தலைவர்கள், சந்திரபாபு நாயுடுவை சந்தித்த நிகழ்வுகள், தேசியத் தலைவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 1999 -ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜவுடன் கூட்டணி வைத்து 294 தொகுதிகளில் 190 தொகுதிகளில் வெற்றியை கைப்பற்றியது அந்த கூட்டணி. அந்த வெற்றிக்கு, மக்கள் சந்திரபாபு நாயுடு மேல் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையே காரணம்.
எங்கே தவற விட்டார் கோட்டையை?
தொழில் புரட்சியில் தீவிரம் காட்டி, விவசாயிகளை கண்டுகொள்ளாமல் விட்டது, நக்சலைட் ஆதிக்கம், முதல்வர் வாகனத்தின் மீதே குண்டுவீச்சு, காங்கிரஸ் கட்சியின் Y. ராஜசேகர ரெட்டி நடத்திய நடைபயணம் என பல்வேறு காரணங்களால் 2004 -ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தோல்வி அடைந்தார் சந்திரபாபு நாயுடு.
பதவியேற்ற முதல் நாளிலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தில் கையெழுத்து போட்டு அதிரடி காட்டினார் Y. ராஜசேகர ரெட்டி. பின்னர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு, இலவச ஆம்புலன்ஸ் திட்டம், பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பு திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஏழைகளுக்கு ஒரு ரூபாய்க்கு இரண்டு கிலோ அரிசி, சிறுபான்மையினருக்கு கல்வியில் முன்னுரிமை, நக்சலைட்களை ஒடுக்கியது என ராஜசேகர ரெட்டியின் பல்வேறு திட்டங்களால் 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில், மீண்டும் அவரே வெற்றி பெற்று, சந்திரபாபு நாயுடு தோல்விடைந்தார்.
2014 -ம் ஆண்டு ஆந்திரா - தெலங்கானா தனியாக பிரிந்த பிறகு நடந்த தேர்தலில், தீவிரமான பிரச்சாரம், நடைபயணம் மூலம், மூன்றாவது முறை முதல்வரானார் சந்திரபாபு நாயுடு. 2019 -ம் ஆண்டு மீண்டும் குப்பம் தொகுதியில் போட்டியிட்டு, தொடர்ச்சியாக 7வது முறை வெற்றி பெற்றார் சந்திரபாபு நாயுடு. ஆனால், இம்முறை ஆட்சியோ ஜெகன்மோகன் ரெட்டி கையில். வெறும் 23 MLA களுடன் எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்தில் நுழைந்தார் சந்திரபாபு நாயுடு.
2021, நவம்பர் 20 ல் சட்டசபையில் நடந்த தீப்பொறி வாக்குவாதத்தில், எதிர்கட்சியினர் தனது குடும்பத்தினரை தரைக்குறைவாக பேசியதால் மனம் உடைந்து, ''இனி முதல்வரானால் மட்டுமே சட்டசபையில் காலடி எடுத்துவைப்பேன்'' என சபதம் போட்டு, சட்டசபையிலிருந்து வெளியேறினார் சந்திரபாபு. வெளியேறிய பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ''நான் கருணாநிதி, வாஜ்பாய், VP சிங், பிஜு பட்நாயக் போன்ற பெரிய தலைவர்களுடன் அரசியல் செய்தவன். அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளவன். ஆனால், என் குடும்பத்தாரை பற்றி பேசுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது'' என கண்கள் கலங்கி அவர் சொன்ன வார்த்தைகள், அனைவரின் நெஞ்சை தைத்தது.
தொடர்ந்து, கைது, சிறை என நிறைய சிரமத்திற்கு சந்திரபாபு நாயுடு ஆளாக்கப்பட்டு, 2024 -ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெற்று 4 -வது முறையாக முதல்வர் பதவியேற்று, அதிக நாட்கள் ஆந்திரா முதல்வராக இருந்த பெருமையை பெற்று, தனது வெற்றிக்கொடியை மீண்டும் நாட்டினார் 'KING MAKER' சந்திரபாபு நாயுடு. நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக, ஜன சேனா போன்ற கட்சிகளோடும் கூட்டணி வைத்து Majority -யோடு ஆட்சியமைத்துள்ளார் சந்திரபாபு.
ஏற்கனவே வாஜ்பாய் ஆட்சியில் இவர் வைத்தது தான் சட்டமாக இருந்தது. தற்போது தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் மோடி ஆட்சிக்கு துணையாய் நிற்கிறது தெலுகுதேசம். நாயுடுவின் 16 MP -க்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளதால், மத்திய அமைச்சரவை, ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து, மக்களவை சபாநாயகர் பொறுப்பு என பெரிய பட்டியலோடு நிற்கிறது தெலுகு தேசம். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் 'King Maker' ஆட்டத்தை....!
 
 
 
				 
			 
		 
			 
			 
			 
			 
			 
			 
			 
                   
                   
                   
                   
                   
                  