தேசிய கீதத்தில் தேவையா திருத்தம்?

சாணக்யா  avatar   
சாணக்யா
 
தேசிய கீதத்தில் தேவையா திருத்தம்?

தேசிய கீதத்தில் தேவையா திருத்தம்?

- Subha Lakshmi Pazhani -



ஒரு நாட்டின் தேசிய கீதம் தேசத்தின் பெருமை, தேசபக்தி, தைரியம் மற்றும் குடிமக்களிடையே தேசிய உணர்வைத் தூண்டும் கருவியாக உள்ளது. சுதந்திரம், இறையாண்மை மற்றும் தேசத்தின் வளமான கலாச்சார வரலாற்றின் சின்னமாகவும் உள்ளது.

டிசம்பர் 11, 1911ஆம் ஆண்டு “பாரத் பாக்ய பிதாதா” என்ற பெயரில் ரபிந்தரநாத் தாகூர் இயற்றிய பாடலில் இருந்த முதல் பத்தியை, இந்திய அரசமைப்பு சபை, 24 ஜனவரி 1950ல் தேசிய கீதமாக ஏற்றுக்கொண்டது. இந்தப் பாடல், அடிப்படையில் பன்மைத்துவத்தின் உணர்வையும், நம் கலாச்சார பாரம்பரியத்தின் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கருத்தையும் மிக ஆழமாக வெளிப்படுத்துகிறது.

ஆனால் பாடலை உன்னிப்பாக கவனித்து பார்த்தால் வடகிழக்கு இந்தியாவின் பகுதிகளான அஸ்ஸாம், திருப்பூரா, அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களும் நீண்ட அகல பிரம்மாண்ட நதியாக காட்சியளிக்கும் பிரம்மபுத்திராவும் ஏன் இந்தப் பாடலில் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வி, சுதந்திரம் அடைந்ததிலிருந்தே தொடர்கிறது.

1911 டிசம்பர், டெல்லி தர்பாரில் முடிசூட்டு விழாவிற்காக வந்த ஐந்தாம் ஜார்ஜ், 1905 ஆம் ஆண்டு வைஸ்ராய் கர்சனால் கொண்டுவரப்பட்ட வங்கப் பிரிவினையை ரத்து செய்வதாக அறிவித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த காங்கிரஸ் தலைவர்கள், பிரிட்டிஷ் அரசர் மீதான தங்கள் விசுவாசத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தினர்.

மேலும், டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் திட்டமிடப்பட்ட காங்கிரஸ் மாநாட்டின் மேடையில் அவருக்கு, ‘அரசு வரவேற்பு’ அளிக்கவும் முடிவு செய்தனர். பிரிட்டிஷ் பேரரசரை புகழ்ந்து, ஒரு பாடலை இயற்ற வேண்டும் என்று, தாகூரை, ராஜாவின் அபிமானி ஒருவர் அணுகினார். முதலில் இதை எதிர்த்த தாகூர், பின்னர், “பாரத் பாக்ய பிதாதா” என்ற தலைப்பின் கீழ் இயற்றினார்.

காங்கிரஸ் அமர்வின் இரண்டாவது நாளில் இந்த பாடல் இசைக்கப்பட்டது. அதன் பிறகு கொல்கத்தாவில் உள்ள பல ஆங்கிலோ- இந்தியன் ஆங்கில அச்சகங்கள், இது பிரிட்டிஷ் அரசருக்கு எழுதப்பட்ட புகழஞ்சலியாக உள்ளது என பல விமர்சனங்களை முன்வைத்தனர். குறிப்பாக இதில் “பாரத் பாக்ய பிதாதா” என்ற வரி, நேரடியாக பிரிட்டிஷ் அரசரை குறிப்பதாகவும், அதனால்தான் இது அரசரின் வரவேற்புக்கு பாடப்பட்டது என தொடர்ந்து விமர்சித்தனர்.

அத்தோடு முடியவில்லை; எல்லைகளைப் பற்றி பாடலில் குறிப்பிடுகையில், ஏன் தாகூர் வடகிழக்கு இந்தியாவை சேர்க்கவில்லை என்ற கேள்வி எழுந்தது. ‘ஜன கண மன’வை தேசிய கீதமாக கருதும் இறுதிகட்டத்தில் கூட, பாகிஸ்தானுக்கு சென்ற “சிந்து” என்ற பெயரை நீக்கிவிட்டு, முழு வடகிழக்கு மாநிலத்தை அடையாளப்படுத்தும் புராணப் பெயரான, “கம்ரூப்” என்பதை பாடலில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக இருந்தது. 1952 ல் சில காங்கிரஸ் தொண்டர்களே சிந்துவுக்கு பதிலாக கம்ரூப்பை சேர்த்து பாடுவது, நேருவின் காதை எட்டியது. திருத்தப்பட்ட பதிப்பு ஏற்கப்படாது என்று நேரு உறுதிப்பட கூறினார். அன்று முதல் இன்று வரை வடகிழக்கு இந்தியாவை பாடலில் சேர்ப்பது குறித்த சர்ச்சை, வெடித்துக்கொண்டு தான் உள்ளது.

மேலும் இந்த படைப்பு, பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இந்தியாவுக்காக எழுதப்பட்டது, தேசிய கீதத்திற்காக இயற்றப்படவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் வரைபடம் பல மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டது. ரபிந்தரநாத் தாகூர் எழுதிய காலத்தில், அஸ்ஸாம், மேற்கு வங்கத்தின் (பங்களா) கீழ் இருந்ததால் அதை பிரத்யகமாக குறிப்பிட்டிருக்க மாட்டார் என்ற கருத்தும் எழுகிறது.

தேசிய கீதம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன், நம் குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், ''எதிர்காலத்தில் வார்த்தைகளை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டால், அதை அரசாங்கம் பரிசீலித்து அங்கீகரிக்கலாம்'' என்று, அரசமைப்பு சபையில் அறிவித்தார்.

2016ல் ஷில்லாங்கில் நடைபெற்ற NEC-யின் 65-வது கூட்டத்தில், அப்போதைய மேகாலயா ஆளுநர் வி.சண்முகநாதன், இந்த கோரிக்கையை, பிரதமர் மோடி முன்னிலையில் வைத்தார். வடகிழக்கு சார்ந்த பல முக்கிய தலைவர்களும் அழுத்தமாக பதிவிட்டதும் உண்டு.

மிக முக்கியமான இந்திய- சீன எல்லையில் தொடங்கி, ஒவ்வொரு அம்சத்திலும் தேசத்தை கட்டி எழுப்புவதில், வடகிழக்கு இந்தியாவின் பங்கு மகத்தானது. அதனால் தேசிய கீதத்திலும் வடகிழக்கு இந்தியாவை குறிக்கும் பெயரை சேர்த்து, நாட்டின் பெருமையை பறைசாற்றலாம் தானே!




No comments found