தியாகத்திற்காக வலிமையாக்கும்

சாணக்யா  avatar   
சாணக்யா
 
தியாகத்திற்காக வலிமையாக்கும்

- சுந்தர்ராஜ சோழன் -

தியாகத்திற்காக வலிமையாக்கும்

- சுந்தர்ராஜ சோழன் -

பங்களாதேஷில் நடப்பவை எல்லாம் இன்னொரு நாட்டில் நடக்கிறது; அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என நினைக்கும் எந்த ஒரு இந்தியனாலும் இந்த தேசத்தின் ஆன்மாவை அறிந்துகொள்ள முடியாது என்றே சொல்லிவிடலாம். காரணம், பாரத வரலாற்றை புரட்டிப் போட்ட ஆங்கிலேய ஆட்சியை அலர வைத்த "சுதேசி இயக்கம்" உருவானது, அதே வங்காளதேச பிளவை அடிப்படையாக் கொண்டே...

இந்த நாள் அதாவது, ஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி தினம் ஆகும்... இந்த நாளை உருவாக்கியதே 1905 ம் ஆண்டு இதே நாளில் எழுந்த "சுதேசி இயக்கத்தை" பெருமைப்படுத்தவே...

1905 ஜூலை மாதம் வைஸ்ராய் கர்ஸன், வங்காளத்தை கிழக்கு - மேற்கு என்று பிரிக்கும் திட்டத்தை அறிவிக்கிறார். கிழக்கு வங்காளம் இஸ்லாமிய பெரும்பான்மையும், மேற்கு வங்காளம் இந்து பெரும்பான்மையும் கொண்டதாக இருக்கும் என்பதாக நிர்ணயிக்கப்பட்டது. இதன் நோக்கம், நிர்வாக ரீதியாக என்று விளக்கம் கொடுத்தாலும், அடிப்படை இந்திய விடுதலை உணர்ச்சியை சிதைக்க வேண்டும் என்பதே.

இதை லார்டு கர்ஸன் அறிவித்த உடனேயே, மிகப்பெரிய இந்திய எழுச்சியை ஆங்கிலேயே அரசு தனக்கு எதிராகக் கண்டது... 1857 க்கு பிறகு இன்னொரு புரட்சி உண்டாகிவிடக் கூடாது என காங்கிரஸை உருவாக்கி அழுத்தி வைத்திருந்த யுக்திகள் உடைபட்டன.

காங்கிரஸிற்குள்ளேயே தேசியவாதிகள், மிதவாதிகள் என இரு தரப்பு உருவாகியது.தேசியவாதிகளை தீவிரவாதிகள் என அழைக்கும் போக்கு உருவாகியது..லோகமான்ய திலகர், பிபின் சந்திரபால், லாலா லஜபதிராய் என்ற மூவரின் எழுச்சி, காங்கிரஸை போர்முகத்துக்கு தள்ளியது..

வங்காளத்தை மதரீதியாக உடைக்கும் நோக்கம், பாரதத்தின் ஆன்மாவை அழிப்பதற்கு ஒப்பானது.. இதை ஒருபோதும் பாரதத்தாய் அனுமதிக்க மாட்டாள் என வங்காளம் பற்றி எரிந்தது.. அப்போது அங்கே பிரகடனப்படுத்தப்பட்டதே "சுயராஜ்யம்" "சுதேசி" என்ற கோஷங்கள்..

வங்காளப் பிரிவை எதிர்த்த சுரேந்திர பானர்ஜி - பிபின் சந்திரபால் - லாலா லஜபதிராய் - திலகர் ஆகியோர் முன்னின்று திருச்சங்கநாதம் கிளப்பி, யுத்தத்திற்கு மக்களை தட்டியெழுப்பினர்..

இதே நேரத்தில் வங்காளப் பிரிவினையே தமிழகத்தில் பாரதி - வ.உ.சி - சுப்ரமண்ய சிவா போன்றவர்களை எழுச்சி கொள்ள வைக்கிறது. இந்திய வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டம் 1905 - 19011 வரை.. பல நூற்றாண்டுகளாக நாம் எப்படி வீழ்ந்தோம் என்பதையும், ஆனாலும் நமது இடையறாத வீரவிழுமியங்கள் எப்படிப்பட்டது என்பதையும் நமக்கு உணர்விக்கும் காலம் அது..

பாரதியார் மிகத்தீவிரமான அரசியல்வாதியாக மாறிய தருணம் இதுவே. அவருடைய சுதேசிய கீதங்கள், தேசிய கீதங்கள் எழுதப்பட்ட காலம் இதுவே. துர்க்கையின் இன்னொரு விவரணையாக பாரததேவி தேசமெங்கும் எழுந்தாள்.. பாரதியார் பாரதமாதவினாளே ஆட்கொள்ளப்பட்டது அவரது எழுத்துக்களில் தெளிவாகத் தெரிகிறது.. அதற்கு மிகப்பெரிய காரணமாக வங்காளப் பிரிவினையே எழுந்தது.. இன்று நம்மிடையே உள்ள பாரதமாதா என்ற கருத்தாக்கம் ஆழமாக மறு உருவாக்கம் பெற்றது வங்காளப் பிரிவினையிலேயே..

தன் நாற்கரங்களில் புத்தகம், நெற்கதிர், வெண்துணி மற்றும் ருத்ராட்ச மாலையை தாங்கிய காவி உடை அணிந்த பாரதமாதா சித்திரத்தை பக்கிம் சந்திர சட்டோபாத்யர் வழியில் நின்று மீண்டும் உருவாக்கினார் அவனீந்தரநாத் தாகூர்.. இது கல்வியில், விவசாயத்தில், நெசவில், ஆன்மீகத்தில் என சர்வ விடுதலை வேண்டும்; அதையே ஆதாரமாக கொண்ட பாரதத்தாயாக முன்னிறுத்தினார்கள்..

வங்காளப்பிரிவினை மீண்டும் சுதந்திரப் போராட்டத்திற்கு உயிர் கொடுத்தது. ஆங்கிலேய அரசு இந்தியர்களின் தன்மானத்தில் தான்தோன்றித்தனமாக கைவைப்பதாக ஒவ்வொரு இந்தியனும் உணர்ந்தான்..
ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி இந்தியர்களின் தன்மானத்தை தட்டியெழுப்பியது எனலாம்.

1905 அக்டோபரில், ஆங்கிலேயர் நினைத்தபடியே கிழக்கு வங்கம், மேற்கு வங்கம் என உடைந்தது.. இங்கே மத ரீதியிலான, சாதி ரீதியிலான பிளவுகள் இல்லாமல் இல்லை. ஆனால், அந்த உடைந்த பொந்துளில் எல்லாம் வெடி வைத்து தகர்த்து, இடைவெளியற்ற எரிமலைக் குழம்பினை மேல்தளத்திற்கு கொண்டு வந்தது ஆங்கிலேயர்களே..

அதற்கு ஒரே காரணம் இந்த பிளவுகளிலும், உடைந்த சில்லுகளிலும் இருந்து ஒரு பொது ராஜ்யத்தை ஏற்படுத்தி உங்களில் ஒருவர் எப்படி ஆள முடியும் என்ற கேள்வியின் வேலியே இந்த செயல்கள்..

மதரீதியாக இந்தியா துண்டாடப்பட்ட நிகழ்வு, முதலில் வங்காளப் பிரிவினையிலேயே எழுந்தது.. அதுதான் புதிய சுதந்திரப் போராட்டத்தை, சுதேசி - சுயராஜ்ய கோஷங்களை உருவாக்கியது. அதுவே முஸ்லீம் லீக், அகில பாரத ஹிந்து மகாசபா, ஆர்.எஸ்.எஸ் உருவாகவும் காரணமாக இருந்தது..

1905 ல் பிளவுண்ட வங்காளத்தை மீண்டும் 1911 ல் ஒன்றாக இணைத்துவிட்டது ஆங்கிலேய அரசு. ஆனால் அதற்கு கொடுத்த விலை?

திலகர் - லஜபதிராய் - பிபின் சந்திரபால் - வ.உ.சிதம்பரம் பிள்ளை அனைவரும் சிறை சென்றார்கள்.சுதேசி கப்பல் கம்பெனி தரைமட்டமாக்கப்பட்டது. தீவிர தேசியவாதிகள் சிதைக்கப்பட்டார்கள். இந்த இடமே காங்கிரஸை விட்டு இந்துக்கள் மெல்ல வெளியேறி வேறு இயக்கங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய சூழல் வந்தது. இந்துக்களின் நலன் அங்கே அரசியல் பகடையாட்டம் என்பதே எதார்த்தமாக இருந்தது.

1905 ல் நடந்தது 1911 ல் மாற்றப்பட்டது, 1947 ல் நடந்தது 1971 ல் மாற்றப்பட்டது,மீண்டும் 2024 ல் ஒன்று நடந்துள்ளது அங்கே. கிட்டத்தட்ட 2025 என்பது வங்காளப் பிரிவினையின் 120 நினைவு ஆண்டுக்கான காலம்.. இந்த நேரத்தில் அது இந்திய வெறுப்பு என்ற ஆகுதியை ஊற்றியபடியே ஒரு கலகத்தை அரங்கேற்றியுள்ளது..

1905 லும், 1947 லும் இருந்த விழிப்புணர்வு படிப்படியாக மக்களிடம் குறைந்துவிட்டது.. அந்த வரலாறுகளின் உண்மையும், நம் இழப்பின் வலியும் மக்களுக்கு மறந்துவிட்டது அல்லது போதிக்கப்படாமலே போய்விட்டது..பங்களாதேஷ் பாரதத்தின் இணையற்ற உறுப்பு. அது பிரிக்கப்பட்டதே நம்மை வீழ்த்துவதற்குத்தான். அதற்கு கிடைக்கிற அதீத சுதந்திரமும், வளமும், பலமும் இந்திய எதிர்ப்பிற்கான கூலியே என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்..

இந்த நாளில் நம்மிடையே பாரதிக்களும், வஉசிக்களும், திலகர்களும், லால் - பால்களும் இல்லை என்பது பெருஞ்சோகம். நமது தேசிய உணர்ச்சி, பக்தி - தியாகம் எல்லாமே வீழ்ச்சியடைந்துள்ளது.. இன்று நம்மை எது ஒன்றுபடுத்தி விழித்துக்கொள்ள வைக்கும் என தெரியவில்லை..

1906 ல் சென்னை கடற்கரையில் பிபின் சந்திரபால் வங்காளப் பிரிவினையை பற்றியும், சுதேசிய - சுயராஜ்ய நோக்கங்களை பற்றியும் ஆற்றிய உரை ஒன்றுள்ளது..அதில் அவர் சொன்னதையேதான் மீண்டும் நமது எதிரிகளுக்கு சொல்ல வேண்டியதாக உள்ளது..

|| நாம் முதலில் கடவுளை நம்புகிறோம், எப்போதும் அவர் அற்புத வெளிப்பாட்டின் நற்கருணையை நம்புகிறோம்..!

எங்கள் முன்னோர்களையும், அவர்களின் மேதைமையையும் நம்புகிறோம்..!

கால வெள்ளத்தால் இன்று நாம் ஒழுங்கற்றவர்களாக உள்ளாம்! ஆனால் இது நீடிக்காது..

நாம் இன்று பலகீனமாக இருக்கிறோம், ஆனால் இது தொடராது நாளை பலமாவோம்..!

இன்று நாம் தியாகத்துக்கு தயாரில்லை என்று அஞ்சுகிறோம்.. ஆனால் வரலாறு நம்மை திருத்தி எழுதி தியாகத்திற்கென வலிமையாக்கும்..!

No comments found