CAA ல அப்படி என்ன தான் பிரச்சினை? விமர்சனமும் விளக்கமும்

சாணக்யா  avatar   
சாணக்யா
CAA ல அப்படி என்ன தான் பிரச்சினை?

விமர்சனமும் விளக்கமும்



குடியுரிமை திருத்தச் சட்டம்.. CAA.. எங்குத் திரும்பினாலும் எதிரொலி போல் கேட்கும் இந்த CAAவில் என்ன இருக்கிறது? யாருக்காக இந்த CAA கொண்டுவரப்பட்டது? மத்திய அரசு சொல்வதென்ன?

முதன் முதலில் 1955 டிசம்பர் 30 ஆம் தேதி குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, பிறப்பின் அடிப்படையில், பதிவு செய்வதன் அடிப்படையில், வம்சாவளி அடிப்படையில் என பல வழிமுறைகளில் ஒருவர் குடியுரிமை பெறலாம். இந்த சட்டத்தில், இதுவரை 5 முறை திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 1986, 1992, 2003, 2005, 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 2019ல் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு குடியுரிமை சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. திருத்தம் செய்யப்பட்ட அந்த சட்டம் தான் இப்போது அமலாகியுள்ளது.

அந்த சட்டத்தின் படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில், மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட ஹிந்து, பௌத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவர்கள் உட்பட அந்த நாடுகளின் சிறுபான்மையின மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அந்த நாடுகளில் இருந்து வரும் எல்லோருக்கும் குடியுரிமை வழங்கப்படுகிறதா?

CAA-2024 விதிமுறைகளின் படி, இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிப்போர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளின் சிறுபான்மையின மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 2014 டிசம்பர் 31 க்கு முன்னதாகவே இந்தியாவில் குடியேறி இருக்க வேண்டும். இந்தியாவிலேயே 5 ஆண்டுகளோ அதற்கு மேலாகவோ தங்கியிருந்தால், அவர்கள் CAAவின் கீழ் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆகின்றனர். போதுமான ஆவணங்கள் இல்லையென்றாலும் கூட, அவர்கள் இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு மேலாக இருந்ததற்கான ஆதாரங்களைக் காட்டி, விண்ணப்பிக்கலாம்.

இந்த சட்டம் நாடு முழுவதும் அமலாகிறதா? என்றால் அதுதான் இல்லை. Sixth Scheduleஇன் கீழ் இருக்கும் வடகிழக்கு மாநிலங்களிலும், ILP எனப்படும் உள்நாட்டு விசா தேவைப்படும் பகுதிகளிலும், பாதுகாப்பு காரணங்கள் மற்றும் பழங்குடியினர்களின் கலாச்சாரத்தை காக்கும் நோக்கிலும், CAA இப்பகுதிகளில் அமலாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில், மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட அந்நாட்டின் சிறுபான்மையின மக்களுக்கு உரிமை வழங்கும் நோக்கத்தில் தான் திருத்தம் செய்யப்பட்டது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். CAA அமல்படுத்தப்படும் என்று நாங்கள் கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றியிருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளுக்கு ஒரு கருத்தை கூறுகின்றன.

தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி, மேற்கு வங்க முதல்வர் மமதா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், AIMIM தலைவர் அசதுதின் ஒவைசி உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எங்கள் மாநிலத்தில் CAAவை அமல்படுத்த விடமாட்டோம் என்று, ஸ்டாலினும், பினராயி விஜயனும் கூறியுள்ளனர். ஆனால், குடியுரிமை என்பது மத்திய பட்டியலில் உள்ள விஷயம். அதை ஏற்கவோ மறுக்கவோ மாநில அரசுகளுக்கு உரிமை இல்லை என்பது அரசமைப்பு விதி.

இது வெறும் அரசியல் சாகசம் என்றும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி பாஜகவின் வாக்கு வங்கியை வலுப்படுத்தும் திட்டமென மமதா கடுமையாகச் சாடியுள்ளார். CAAவின் கீழ் இஸ்லாமியர்கள் வஞ்சிக்கப்படுவதாக அசதுதின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக கட்சிகளோ, இலங்கைத் தமிழர்கள் வஞ்சிக்கப்படுவதாக குற்றம்சாட்டுகின்றன. இலங்கைத் தமிழர்களை CAAவில் சேர்த்தால், அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்ற கருத்துகளும் மேலோங்குகிறது.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரோ, "இந்த குடியுரிமை திருத்தச்சட்டத்தால் ஏற்கனவே இந்தியாவில் குடியுரிமை பெற்று இருக்கும் இஸ்லாமியர்களின் குடியுரிமைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மக்களை குழப்ப வேண்டாம். இதை அரசியல் ஆக்கவேண்டாம்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தல் நெருங்கும் வேளையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்த அறிவிப்பு இந்தியாவில் புயலைக் கிளப்பியிருக்கிறது. CAAவை ஆதரித்த காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகளே இப்போது போர்க்கொடி தூக்கியிருக்கின்றன. இது இப்படி இருக்கையில், பல ஆண்டுகளாக மதத்தின் பெயரால் அடக்குமுறைக்கும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் ஆளாகி இந்தியாவில் அடைக்கலம் புகுந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்த ஹிந்து,பௌத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவர்கள் ஆகிய மதங்களை சேர்ந்தவர்கள் தெருக்களில் ஆடிப் பாடி பட்டாசு வெடித்துக் கொண்டாடும் காட்சிகளுக்குப் பின் இருக்கும் உணர்வுகளை வார்த்தைக்குள் அடைக்க முடியமா?

No comments found