என்ன செய்யப் போகிறது பாமக?

சாணக்யா  avatar   
சாணக்யா
என்ன செய்யப் போகிறது பாமக?



பாமகவை பொறுத்தவரை 2011 க்கு மேல் தீவிரமான திராவிட எதிர்ப்பை நோக்கி நகர்ந்தது. 2014 ல் NDA வில் இணைந்து, மோடி பிரதமராக உழைக்க காரணமே கூட அதுதான். 2014 க்கு பிறகு அந்த NDA கூட்டணி அப்படியே தொடர்ந்திருந்தால் 2016 சட்டமன்ற தேர்தலில் வலுவான தடத்தை பதித்திருக்கவே வாய்ப்பு. அந்த கூட்டணி நிச்சயமாக தேர்தல் முடிவுகளையே மாற்றியிருக்கலாம்... நிற்க.

பாமகவை இங்கிருக்கும் போலி முற்போக்கு அமைப்புகள் முற்று முழுதாக வெறுக்கின்றன. அதற்கு காரணம் மருத்துவர் ராமதாஸோ அல்லது மறைந்த குருவோ அல்ல என்பதை, வரலாற்றை கூர்ந்து பார்க்கும் போது புரியும். வடமாவட்டத்தில் வன்னியர் எழுச்சி என்பது திராவிட அரசியலை வீழ்த்தும் வல்லமை கொண்டது. அதற்கு யார் உருவமாக வந்தாலும், யார் அதை செயல்படுத்துவார்கள் என்றாலும், அதை உடைப்பதே திராவிட ஆதரவு சக்திகளின் நோக்கமாக இருக்கும்.

2024 தேர்தலில் சரியான முடிவை பாமக எடுக்க வேண்டும். அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள், கடந்த காலத்தின் சுழலில் சிக்கக் கூடாது. தமிழகத்தில் ஒரு கூட்டணி ஆட்சி நிலையை கொண்டு வரவேண்டும். அதுதான் இப்போதையே எல்லா பிரச்சனைகளுக்கும் மாற்றாக அமையும்.

2019ல் இருந்தே NDA கூட்டணியில்தான் பாமக உள்ளது. 2024லும் அது NDA வில் தொடர்ந்தால் 2026 ல் அன்புமணி ராமதாஸின் அரசியல் இருப்பு, தனித்தன்மையுடையதாக மாறும். அண்ணாமலை போன்ற ஒருவர் இன்று தமிழக அரசியலை மாற்ற முயலும்போது, ஒரு மூத்த சகோதரனைப் போல அன்புமணி செயல்பட்டால், அது பரஸ்பர லாபத்தையே தரும்.

இன்று அதிமுக, வடமாவட்டத்தில் தன் வலுவான தளபதிகளை முன்னிறுத்துகிறது. கொங்கு, தென் மண்டல கட்சி அதிமுக என்ற நிலையை கொங்கு, வடமாவட்ட கட்சி என்று நிறுவ நினைக்கிறது. இந்த நேரத்தில் பாமக தன் பலத்தை அதிமுகவிற்கு வழங்கினால், அது கடலில் கரைத்த உப்பாகும்.

ஆனால் அதே பலத்தை NDA கூட்டணிக்கு வழங்குகிறபோது, தங்களுடைய பலத்தை உரிமைகோர முடியும். 2026 சட்டமன்றத்தில் ஒரு புதிய மாற்றத்திற்கான முழகத்தைத் தரும் முன்னோட்டமாக அது மாறும்.

தங்களது எதிரிகள் யார், நண்பர்கள் யார் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டிய நேரமிது. இந்நேரத்தில், "அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை; நிரந்தர நண்பனுமில்லை" என்ற வசனங்கள் எடுபடாது. இன்னும் சொல்லப் போனால் அது வலுத்தவன் வகுத்தது.

                                                                                           

                                                                                                                          - சுந்தரராஜ சோழன்

 


                                                                                                         

 

No comments found