திருவனந்தபுரத்தில் மோதும் ஜாம்பவான்கள்

சாணக்யா  avatar   
சாணக்யா
திருவனந்தபுரத்தில் மோதும் ஜாம்பவான்கள்
- Subha Lakshmi Pazhani -

திருவனந்தபுரத்தில் மோதும் ஜாம்பவான்கள்

- Subha Lakshmi Pazhani -

தேர்தல் என்றாலே அதில் சுவாரசியங்களுக்கு பஞ்சம் இருக்காது. "ஸ்டார் கேண்டிடேட்" என்று பல தொகுதிகள் காணப்பட்டாலும், இந்தத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதி விறுவிறுப்பான தேர்தல் சூழலை காட்டுகிறது.

2009 முதல் சசிதரூரின் கோட்டையாக இருக்கும் இந்தத் தொகுதியில் பாஜக, அதன் முதல் பட்டியலில் ராஜ்யசபா எம்பி-யான ராஜீவ் சந்திரசேகரின் பெயரை அறிவித்தது. 59 வயதான ராஜீவ் சந்திரசேகர் மற்றும் 67 வயதான தரூர், தங்கள் கட்சிகளுக்கு மிகவும் பிரபலமான முகங்கள். இருவருமே திருவனந்தபுரத்தை சார்ந்தவர்கள் அல்ல. சசிதரூர், பாலக்காட்டை பூர்வீகமாக கொண்டு இங்கிலாந்தில் பிறந்தவர். ராஜீவ், திருச்சூரை பூர்வீகமாக கொண்டு குஜராத்தில் பிறந்தவர்.

2009 லோக்சபா தேர்தலில் சசிதரூர், சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் 2014ஆம் ஆண்டில் பாஜக வேட்பாளர் ராஜகோபால், சசி தரூருக்கு கடும் சவாலாக இருந்ததால், அந்த தேர்தலில் தரூர் வெறும் 15,470 வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். தொடர்ந்து 2019-ல் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தரூர் வெற்றி பெற்றார். பல ஆண்டுகளாக இந்த தொகுதியில் இடதும் காங்கிரசும் மாறி மாறி வென்ற நிலையில் கடந்த இரண்டு முறையாக இரண்டாவது இடத்தில் பாஜக இருந்து வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக இருந்த சசி தரூர் 2009- ல் முதல் முறையாக தேர்தலில் இறங்கி மக்களின் மனதை வென்றார். பேச்சு, எழுத்து, தோற்றம், வெளிநாடுகளில் கிடைத்த அங்கீகாரம் என செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாகவே காணப்பட்டார். 2014 இல் அவரது மனைவி சுனந்தா புஷ்கரின் துர்மரணத்திற்குப் பிறகு பல கடினமான சவால்களை எதிர்கொண்டார். 2022 அக்டோபரில் நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கேவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியுற்றார். அதிக நேரம் டெல்லி வட்டாரங்களுடன் இருப்பதால் கேரள காங்கிரசின் நிலைபாடும் செயல்பாடும் இவருக்கு தெரிவதில்லை.

இந்த முறை கேரளாவில் கால் பதிக்க பாஜக பெரிய அளவில் திட்டமிட்டுள்ளது. கேரள மக்களை பற்றிய பாஜகவின் புரிதலை பிரதிபலிக்கும் தேர்வு தான் ராஜீவ் சந்திரசேகர். கேரளாவில் தேர்தல் பிரச்சாரங்கள் பொதுவாக இளைஞர்கள், பிரதிநிதித்துவம் மற்றும் பிரிவினை பற்றி தான் இருந்துள்ளது. ஏன் கடந்த முறை கூட ஸ்ரீ ராமர், வடக்கு, தெற்கு என்றுதான் தரூரின் பிரச்சாரம் அமைந்தது. இந்த முறை ராஜீவ் சந்திரசேகர் இதற்கு பதிலாக “இனி காரியம் நடக்கும்…” என்பதை பயன்படுத்துகிறார். இது மற்ற பாஜக ஆளும் மாநிலங்களின் வளர்ச்சியை காட்டும் அறிக்கையாகும்.

கேரளாவில் பல தொழில் நிறுவனங்கள், மாநிலத்தை விட்டு வெளியேறுவதை கண்டுள்ளோம். மேலும் கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் நிகழ்த்தப்பட்ட வன்முறை, அவர்களின் பகுதி நேர கூட்டாளியான காங்கிரஸை கூட விட்டு வைக்கவில்லை . மேற்குவங்கம் போலவே இடதுசாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் வணிக எதிர்ப்பு குழுக்கள், வன்முறை போராட்டங்களை வெளிப்படையாக பயன்படுத்துவது வழக்கம்.

அதனால் நாட்டின் அதிக கல்வியறிவு உள்ள மாநிலத்தில் முதலீடுகள் என்பது இன்னும் கவலைக்குரிய இடத்தில் உள்ளது. இதை மையமாக வைத்து, இம்முறை பாஜக வேட்பாளர் ராஜீவ் களம் காண்கிறார். இந்தியாவில் semi conductor துறையில் ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்கும் திட்டங்களில் ஈடுபட்டுள்ள ராஜீவ் சந்திரசேகர், ஏற்கனவே பல கார்ப்பரேட் ஜாம்பவான்களை முதலீட்டிற்கு அழைத்துள்ள அனுபவம் உள்ளதால், பெரிய அளவிலான முதலீடுகளை திருவனந்தபுரத்துக்கு எடுத்துச் செல்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தில் பிரதமர் மோடிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் இவர் இல்லாவிட்டாலும், சர்வதேச அரங்குகளில் எலான் மாஸ்க் போன்றவர்களுடன் ஈடுபட்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் கொள்கைகளை உருவாக்கி மிகவும் திறமையாக செயல்படும் மத்திய இணை அமைச்சராக இருப்பது தொகுதியில் சசி தரூரைவிட ஒரு படி அதிக செல்வாக்கை கொடுக்கிறது.

பல பாஜக தொண்டர்களின் உயிர் தியாகத்திற்கு பிறகு 2021 மேற்கு வங்க தேர்தலில் பாஜக 3 இடங்களில் இருந்து 77 இடங்களாக உயர்ந்தது. இது 38% வாக்காகும். இதேபோன்று ஒரே தேர்தலில் கேரளாவில் இது சாத்தியப்படுமா? என்றால் இல்லை!

மற்ற இடங்களில் தோற்கடிக்கப்பட்ட காங்கிரஸுக்கு எப்போதுமே கேரளா ஒரு புகலிடமாக உள்ளது. ஏன், 2019ல் ராகுல் காந்தி எம்.பியாக தொடர, வயநாட்டில் தான் தஞ்சம் அடைந்தார்.

2019-ல் எப்படி ராகுல் காந்திக்கு எதிராக ஸ்மிருதி இராணியை இறக்கினார்களோ அதே போல தரூரின் கோட்டையாக இருக்கும் திருவனந்தபுரத்தில், அவரைப்போல மிகவும் பிரபலமான ராஜீவ் சந்திரசேகரை களம் இறக்கியுள்ளது பாஜக.

No comments found