கஷ்மீரில் நடந்திருப்பது காமெடி அல்ல வாய் பிளக்க வைக்கும் மாற்றங்கள்............

சாணக்யா  avatar   
சாணக்யா
கஷ்மீரில் நடந்திருப்பது காமெடி அல்ல <br> <br>வாய் பிளக்க வைக்கும் மாற்றங்கள்

கஷ்மீரில் நடந்திருப்பது காமெடி அல்ல

வாய் பிளக்க வைக்கும் மாற்றங்கள்

- அருண் ரமேஷ் -

"PoK நம்முடையது. அது மீட்கப்படும்." - இந்த வார்த்தைகள்... உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்த வார்த்தைகள் தான், இன்று பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது. நாட்டினுள் மட்டுமல்ல, எல்லையையும் தாண்டி, பாகிஸ்தான்- சீனா வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காரணம், மோடி- அமித் ஷா ஜோடி, சொல்லாமலேயே பலவற்றை செய்யக்கூடியது. சொல்லியேவிட்டால்... சொல்லவே வேண்டாம். அப்படியொரு விஷயம் தான் கஷ்மீர் விவகாரம்.

பாஜகவின் நீண்டகால வாக்குறுதியான கஷ்மீருக்கு சிறப்பந்தஸ்து கொடுக்கும் Article-370ஐ நீக்கி, கஷ்மீரை இந்தியாவோடு முழுமையாக இணைப்போம் என்ற தங்களது வாக்குறுதியை, 2019ல் மீண்டும் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் முதல் வேலையாக நிறைவேற்றியது மோடி தலைமையிலான பாஜக. கஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் சரிதான் என உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்ட நிலையில், PoK பற்றி பாஜக தீவிரமாக பேச தொடங்கியுள்ளது. அது எப்படி சாத்தியம்? என கேட்டால்; கஷ்மீரில் எப்படி எல்லாவற்றையும் சாத்தியப்படுத்தினோமோ அதே போல் தான், என பதில் வருகிறது. சரி, கஷ்மீரில் அப்படி என்ன சாத்தியப்படுத்தினார்கள் என தேடி பார்த்தால்; அங்கு தான் இருக்கிறது வாய்ப்பிளக்கும் அளவிற்கான மாற்றங்கள்....

திருவிளையாடல் படத்தில் நாகேஷ் சொல்வதுபோல், கஷ்மீரும் பயங்கரவாதமும் பிரிக்க முடியாது என்றுதான் இருந்தது நிலை. அது இன்று, அப்படியே மாறியுள்ளது. விடியற்காலையில் பால் பாக்கெட் போடுவதுபோல், கஷ்மீரில் தினசரி நடந்த விஷயம், Stone Pelting எனப்படும் கல்லெறி சம்பவங்கள் தான். இந்த கல்லெறி சம்பவங்கள் மற்றும் காவல்துறையுடனான போராட்டக்காரர்களின் மோதலில், 2016 ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி, Article 370 நீக்கப்பட்ட 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை, 124 பேர் உயிரிழந்தனர். ஆனால் Article 370 நீக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை, ஒரு உயிரிழப்பு கூட நடக்கவில்லை.

கஷ்மீர் எல்லையில் நடந்த துப்பாக்கி சூட்டில், பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தி வாடிக்கையான ஒன்று. அந்த நிலை, தற்போது அப்படியே மாறியுள்ளது. 2018ல் 91 வீரர்கள் எல்லைக்கோட்டில் பணியின்போது உயிரிழந்த நிலையில், அது 2019ல் 80ஆகவும், 2020ல் 63ஆகவும், 2021ல் 42ஆகவும், 2022ல் 32ஆகவும் குறைந்துள்ளது. இந்தாண்டில், இதுவரை 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். விரைவில், உயிரிழப்பே இல்லாத நிலை வரும் என்பதே எதிர்பார்ப்பு.

ஒருபுறம் பயங்கரவாதிகளின் சரண்டர்கள் தொடர்ந்து நடந்துவர, பயங்கரவாதிகளை ஒழிக்கும் Operationகளும், விடாமல் நடந்து வருகிறது. 2018ல் மொத்தம் 189 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டது. பின்னர் 2019ல் 102, 2020ல் 118, 2021ல் 100, 2022ல் 117 என என்கவுண்டர்கள் நடந்துள்ளது. இந்தாண்டில் மட்டும், 44 என்கவுண்டர்கள் நடந்துள்ளன. இதில் உள்நாடு மட்டும் இன்றி வெளிநாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகளும் அடங்குவர்.

ஜம்மு கஷ்மீரில் நடக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றான பாகிஸ்தானில் இருந்து ஏவப்படும் ஊடுருவல்களும், பெருமளவில் குறைந்துள்ளது. 2019ல் 141 பயங்கரவாத ஊடுருவல் சம்பவங்கள் நடந்த நிலையில், அது 2020ல் 51ஆகவும், 2021ல் 34ஆகவும், கடந்தாண்டு 14ஆகவும் குறைந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், அதாவது ஜூன் 30-ம் தேதி வரை ஒரு ஊடுருவல் சம்பவம் கூட நடைபெறவில்லை.

இப்படி பயங்கரவாதம் அடியோடு ஒடுக்கப்பட்டதன் காரணமாக, வளர்ச்சி எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. உற்பத்தி துறை, சுற்றுலா, சேவை துறை, சுகாதாரம், மருந்து உற்பத்தி, விவசாயத்துறை, சினிமா துறை உள்ளிட்டவற்றில் முதலீடுகள் குவியத்தொடங்கின. சுதந்திரம் கிடைத்ததில் இருந்து 2019ல் சிறப்பு அந்தஸ்து நீக்கப்படும் வரை ஜம்மு கஷ்மீருக்கு 14,000 கோடி ரூபாய் மட்டுமே தனியார் முதலீடாக வந்திருந்தது. ஆனால், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு மட்டும், ஜம்மு கஷ்மீருக்கு 81,122 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்கள் வந்துள்ளன.

கஷ்மீர் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பு என்றால் அது சுற்றுலா துறை. அது, 20-30 ஆண்டுகளாக பயங்கரவாதம் உச்சத்தில் இருந்த காரணமாக, படுபாதாளத்தில் இருந்தது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட 2019ல் கட்டுப்பாடுகள் பல இருந்ததால் அந்த ஆண்டும் இதே நிலை தொடர்ந்தது. ஆனால், அதன்பிறகு ஜம்மு கஷ்மீரின் சுற்றுலா துறை புத்துயிர் பெற்றது. கடந்தாண்டு மட்டும் 85 லட்சம் சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீருக்கு வந்து சென்றுள்ளனர். 2021ஆம் ஆண்டுடன் இந்தாண்டை ஒப்பிட்டால், சுற்றுலாப் பயணிகள் வருகை 155% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் நவம்பர் வரை மட்டும் 2 கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஜம்மு கஷ்மீர் சென்று வந்துள்ளனர். ஓர் ஆண்டில் ஜம்மு காஷ்மீருக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் சென்றுவந்த கணக்கை எடுத்துப் பார்த்தால், சுதந்திரத்திற்கு பிறகான வருகையில் இதுவே உச்சம்.

திரைப்படங்களில் கஷ்மீர் தொடர்பான காட்சிகள், கஷ்மீருக்கு பதிலாக ஊட்டியிலோ, டார்ஜிலிங்கிலோ, ஷிம்லாவிலோ எடுக்கப்பட்ட காலம் நாம் அறிந்ததே. காரணம் பயங்கரவாத அச்சுறுத்தல். ஆனால் அந்த நிலை இன்று மாறி பல படங்கள் தற்போது கஷ்மீரிலேயே எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்திய உதாரணம் என்றால், விஜய் நடித்த லியோ.

படம் எடுக்கப்படுவது மட்டுமல்ல படம் ஓட்டப்படும் தியேட்டர்களே பல ஆண்டுகளாக இயங்காமல் இருந்த காலமும் உண்டு. அந்த நிலையும் தற்போது மாறி, தியேட்டர்கள் மீண்டும் அதிகளவில் இயங்கத் தொடங்கியுள்ளன. கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்குப் பிறகு வடக்கு கஷ்மீரில் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டன. Baramulla, Handwara உள்ளிட்ட இடங்களில் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவே நேரில் சென்று தியேட்டர்களை திறந்து வைத்தார். 32 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தாண்டே, கஷ்மீரின் inox, ஷாருக்கானின் பதான் படத்திற்கு House full ஆனது.

அட படங்கள் இருக்கட்டும். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் கஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மொகரம் ஊர்வலம் நடக்கவில்லை என்றால் நம்புவீர்களா? ஆம் நடக்கவில்லை. 34 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு தான் நடந்தது. Shaheed Gunj தொடங்கி Lal Chowk வழியாக Dalgate வரை நடந்த இந்த 8வது மொகரம் ஊர்வலத்தில், 25,000 ஷியா இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். ஒரு பிரச்சனை இல்லை. இந்த முழு ஊர்வலத்தையும் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவே கண்காணித்தார். ஆனால் பல ஆண்டுகள் ஜம்மு கஷ்மீரை ஆண்ட அப்துல்லா குடும்பமோ, முஃப்தி குடும்பமோ ஒரு ட்வீட் கூட போடவில்லை.

இப்படி ஜம்மு கஷ்மீரில் ஏற்பட்ட மாற்றங்களை ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டே போகலாம். ஏன், சமீபத்தில் ஜம்மு கஷ்மீரில் ஜி20 தொடர்பான கூட்டங்கள் நடந்தது. அதுவும் ஒரு சான்று தான். இப்படியெல்லாம் நடக்காதா என பல ஆண்டுகள் ஏங்கிய காலம் மாறி, நமது வாழ்நாளிலேயே அதுவும் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள்ளேயே இப்பேற்பட்ட மாற்றங்கள் நடக்கிறது என்றால், நம்மை நாமே கிள்ளிப் பார்த்துக்கொள்ள வேண்டியது தான். இதையெல்லாம் பார்க்கும் போது பாஜககாரர்கள் சொல்வது போல், Modi hai to Mumkin Hai எனும் மோடி நினைத்தால் எல்லாம் சாத்தியம் என்ற கோஷம், உண்மை தானோ என நினைக்கத் தோன்றும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி. மோடி 2014ல் தேர்தல் பிரச்சாரங்களில் சொன்னது போல் "Achchhe din aane vaale hain".. அதாவது, நல்ல நாட்கள் வர இருக்கின்றன....

ஜம்மு கஷ்மீருக்கு மட்டுமல்ல, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஷ்மீருக்கும்!

No comments found